.
'...இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்'. - (எபிரேயர் 2:4).
.
ஆம் இன்று கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற இந்த அருமையான இரட்சிப்பை குறித்து அலட்சியமாய் இருக்கிறோம் . நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம். இவ்வளவு பெரிதான இரட்சிப்பு ஏன் நமக்கு அருளப்பட்டது . வேதத்தில் தங்களுடைய இரட்சிப்பை அலட்சியமாக எண்ணி அதை இழந்து போனவர்கள் அநேகர் அதில் சிலரை நாம் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்
.
முற்பிதாவாகிய ஈசாக்கினுடைய பிள்ளைகள் ஏசா, யாக்கோபு என்ற இரட்டையர்கள். இதில் யாக்கோபிற்கு இரண்டு நிமிடம் முன்பு பிறந்து தகப்பனது சேஷ்ட புத்திர பாகத்திற்கு சொந்தகாரரானான் ஏசா. ஆனால் ஒரு கலசம் கூழுக்காக தன் தம்பியிடத்தில் அதை விற்று போடுகிறான். கனத்திற்குரிய இந்த இடத்தை அலட்சியமாக எண்ணி ஒரு செம்பு கூழுக்கு அதை இணையாக்கி விட்டான். முற்பிதாக்களின் வரிசையில் மேன்மையாக உயர்த்தப்பட வேண்டிய ஏசா எல்லா ஆசீர்வாதங்களையும் இழந்து நிற்கிறான். சீர் கெட்டவன் என்று வேதம் அவனை கூறுகிறது. பின்னர் அவன் ஆசீர்வாதத்தை விரும்பியும் அதை கண்டுபிடியாமற் போனான் என வேதம் கூறுகிறது.
.
அடுத்ததாக சிம்சோனை பாருங்கள், அவனுக்கு அக்காலத்தில் யாருக்கும் கிடைக்காத அபிஷேகமும் உன்னத பெலனும் இருந்தது, ஆவியானவர் அவன் மேல் பலமாய் இறங்கினபோது சிங்கத்தின் வாயை கிழித்தான், 300 நரிகளை பிடித்தான், காசா நகரத்து கதவுகளை பிடுங்கி கொண்டு நடந்து போனான், கழுதை தாடை எலும்பினால் ஆயிரம் பெலிஸ்தரை முறியடித்தான். ஆனால் அந்தோ! சிம்சோன் தன் மேலிருந்த ஆவியானவரை அசட்டை செய்து வேசிகளின் பின்னால் சென்றான். கர்த்தர் தன்னை ஆள இடம் கொடாமல், இச்சைகளுக்கு தன்னை விற்று போட்டான். அபிஷேகத்தையும் நசரேய விரதத்தையும் அசட்டை பண்ணின சிம்சோனை விட்டு ஆவியானவர் விலகி சென்றார். முடிவாக பரிதாபமான நிலை, கண்கள் பிடுங்கப்படவனாக, வெண்கல விலங்கிடப்பட்டு, இரு தூண்களுக்கிடையில் பரியாச பொருளாய் மாறினான்.
.
அவன் தேவன் தனக்கு கொடுத்திருந்த அந்த பெரிய அபிஷேகத்தை அவன் அலட்சியம் பண்ணினாலும், தான் மரிக்கும் நேரத்தில் 'சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும் என்று சொல்லி, சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என் ஜீவன் பெலிஸ்தரோடே கூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்' (நியாயாதிபதிகள் 16:28-30). தேவன் எத்தனை கிருபை மிகுந்தவர், எத்தனை இரக்கம் உள்ளவர். தம்மை நோக்கி கூப்பிடும் யாரையும் அவர் புறம்பே தள்ளாதவர். அவரை விட்டு தூரம் போனாலும் அவரை நோக்கி கூப்பிடும்போது நம் ஜெபத்தை கேட்டு பதிலளிக்கிறார்.
.
ஒருவேளை நாம் நமக்கு இலவசமாய் கிடைத்த இரட்சிப்பை அலட்சியப்படுத்தி கொண்டிருக்கிறோமா? எத்தனையோ பேர் மாயை நம்பி தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது என நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் உங்களுக்கும் எனக்கும் இருந்த இடத்திலே எவ்வித முயற்சியுமின்றி, இலசவமாய் கிடைத்த இரட்சிப்பை மீண்டும் மீண்டும் துணிகர பாவம் செய்து அலட்சியப்படுத்தி கொண்டு இருக்கிறோமா?
.
அலட்சியப்படுத்தி, தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடி நாம் ஜாக்கிரதையாய் இருப்போம். தேவன் மன்னித்து விடுவார் என்று மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்து கொண்டிருப்போமானால், நம் முடிவு பரிதாபமாக இருக்கும். 'ஏசாவை போல ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்' (எபிரேயர் 12:16-17) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
.
தேவன் நமக்கு கொடுக்கும் இந்த கிருபையின் காலத்திலேயே அவரிடம் ஓடி வந்து விடுவோம். ஒரு நாள் வரும், தேவன் தமது கிருபையை எடுத்து விடுவார். பின் அதை தேடியும் நாம் அதை பெற்று கொள்ளமுடியாது. ஆனால் அதே சமயத்தில் தம்மை நோக்கி கூப்பிட்ட சிம்சோனை அவர் மறக்கவில்லை, அவர் அவனை மன்னித்ததுமன்றி, அதே எபிரேயரில் உள்ள விசுவாசப்பட்டியலில் அவனுடைய பெயரையும் சேர்த்து விட்டார் (எபிரேயர் 11:32). எத்தனை அற்புத தேவன் நம் தேவன்!
.
இரட்சிக்கப்பட்டும், பாவத்தின் மேல் பாவத்தை செய்து தேவன் கொடுத்த பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியமாக எடுத்து விடாதபடி தேவனை பற்றி கொள்வோம். தேவன் நம்மை மன்னித்து நம்மை ஏற்று கொள்ள வல்லவராகவே இருக்கிறார். அவர் மன்னிப்பதில் வள்ளலலானவர். மன்னிப்பதில் தயவு பெருத்தவர். நம்மை ஏற்று கொள்வார். '...இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்'!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக