.
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?. - ( ரோமர் 8:31).
.
ஒரு கிறிஸ்தவ வாலிபன், புதிதாக ஒரு கம்பெனியில் இரவு வேலையில், ஒரு வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அவாவுடன், அந்த கம்பெனியில் சேர்ந்தான். அங்கு அவனோடு இருந்த மற்றவர்கள், அவனிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். அவன் கிறிஸ்தவனாக இருந்தபடியால், அவனை எள்ளி நகையாடி, அவனை அவமானப்படுத்தி கொண்டிருந்தனர். ஓவ்வொரு இடைவேளை நேரம் வரும்போதும் அவனை அப்படி துன்பப்படுத்திகொண்டிருந்தனர்.
.
ஒரு நாள் இரவு மிகவும் அவனை கலாட்டா பண்ணி, அவனை பரியாசம் செய்து, இயேசுகிறிஸ்துவை பற்றியும் ஏதோதோ சொல்லி வம்புக்கிழுத்தனர். அப்போது அவன் மிகவும் மனம் நொந்து சே, போ! இந்த வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்து இருக்கையில், ஒரு வயதான மனிதர், 'போதும் அவனை வம்புக்கிழுத்தது, அவரவர் உங்கள் வேலைகளை பாருங்கள்' என்று சத்தமிட்டார். உடனே மற்றவர்கள் அவனை விட்டு பின்வாங்கி, தங்கள் வேலைகளுக்கு திரும்பினார்கள். பின்னர் அந்த வயதான மனிதர் அந்த வாலிபனிடம் சொன்னார், 'நீ மிகவும் துன்ப நேரத்தில் இருப்பதை பார்த்தேன். நான் உன்னுடன் உன் பக்கத்தில் இருக்கிறேன் என்பதை நீ அறியவே நான் அப்படி மற்றவர்களிடம் சொன்னேன்' என்று கூறினார்.
.
ஒருவேளை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் கிறிஸ்துவை அறியாத மற்றவர்கள் மத்தியில் நீங்கள் மாத்திரம் தனியாக இருக்கலாம். மற்றவர்கள் உங்களை கிண்டல் கேலி செய்யலாம். அவர்கள் அநேகராயிருப்பதால் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களோடு துணையாக இருக்க வேறு ஒரு விசுவாசியை உங்களுக்கு தேவன் அனுப்பபுவார். அப்படி அனுப்பாவிட்டாலும், தேவனே உங்கள் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் ஒரு நாளும் மறக்ககூடாது. மட்டுமல்ல அவருடைய தூத சேனைகளும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறக்ககூடாது.
.
ஒரு முறை தேவ மனுஷனாகிய எலிசாவுக்கு விரோதமாக சீரியா ராஜா கோபங்கொண்டு அவரை கொல்லுவதற்கு 'அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்' (2 இராஜாக்கள் 6:14-17) என்று பார்க்கிறோம். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக யுத்தம் செய்வதற்கு தம்முடைய தூத சேனைகளையே அனுப்பி அவர்களை விடுவிக்கிறார்.
.
நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக தம்முடைய சொந்த குமாரனையே நமக்காக அனுப்பினவர், உங்களை தனியாக இருக்க விட்டுவிடுவாரா? ஒருபோதும் இல்லை! மனம் தளராதிருங்கள். நீங்கள் தனியே இல்லை. ஒரு முறை எலியா தீர்க்கதிரிசியும் அப்படிதான் சொன்னார், 'அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்' (1 இராஜாக்கள் 19:14). அப்போது தேவன் அவருக்கு சொன்னது, 'ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்' என்றார். - (1 இராஜாக்கள் 19:18). எலியா தீர்க்கதரிசி நினைத்தார், தான் மாத்திரம் தனியாக இருப்பதாக, தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார், 'நீ மாத்திரம் தனியாக இல்லையப்பா, இன்னும் ஏழாயிரம் பேர் உன்னோடு துணைக்கு இருக்கிறார்கள்' என்று அவரை தைரியப்படுத்தினார்.
.
அன்பு சகோதரனே சகோதரியே, நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டபின் ஒரு நாளும் நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். 'இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்' என்று கூறிய இயேசுகிறிஸ்து நம்மோடு கூட எனறும் இருக்கிறார். மட்டுமல்ல, உங்களோடு தேவனும், பரலோகத்தின் முழு சேனையும் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். நான் தனியாள், எனக்கு என்று யார் இருக்கிறார்கள் என்று ஒருபோதும் அதைரியப்படாதீர்கள். நீங்கள் வானத்தையும் பூமியையும் அண்ட சராசரத்தையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனின் பிள்ளை என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக