செவ்வாய், 3 ஜூன், 2014

கிறிஸ்தவ வாழ்க்கை


.
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். - (பிலிப்பியர் 3:13-14).
.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அநேகருக்கு ஏதோ நாம் கர்த்தரை ஏற்று கொண்டோம், நம் வாழ்வில் வருகிற காரியங்களை கர்த்தரே அனுமதிக்கிறார், ஏதோ வாழ்ந்தோம், பிழைத்தோம், மரித்தோம் என்று வாழ்ந்து முடித்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அது அல்ல, கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு ஜெயமுள்ள வாழ்க்கை, வெற்றி எடுக்கிற வாழ்க்கை, ஆவிக்குரிய போராட்டத்தில் ஜெயம் பெற்று, கர்த்தருக்காக சாதிக்கிற வாழ்க்கை!
.
ஒரு சகோதரியை எடுத்து கொள்வோம். அந்த சகோதரி, தன் குடும்பத்தை நேசிக்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து, தன் வேலைக்கு சென்று சம்பாதித்து, சமைத்து, தன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்கள். தன் மீதமான வேலையில், தனக்கு கிடைத்த கொஞ்ச நேரமாவது பொழுது போக்கான காரியத்தில் ஈடுபட வேண்டும் என்று செய்திதாள் அல்லது புத்தகங்களையோ பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் பெரிய பாவத்திலோ, மற்ற தேவன் விரும்பாத காரியங்களிலோ ஈடுபடுவதில்லை. இந்த தன் வாழ்வு வாழ்ந்தால் போதும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். சபைக்கு நேரமிருந்தால் சென்று கொண்டிருக்கிறார்கள்.
.
ஒரு சகோதரனை எடுத்து கொள்வோம், அவரும் தன் குடும்பத்தை நேசிக்கிறார். சபைக்கு எப்போதாவது போகிறார். தன் குடும்பத்திற்கு தேவையானதை செய்கிறார். தனக்கு கிடைக்கும் நேரத்தில் ஜெபிப்பதில்லை. ஏதோ பெயர் கிறிஸ்தவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
.
இன்னொரு சகோதரன் இருக்கிறார், சபைக்கு ஒழுங்காக செல்கிறார். ஆனால் பாவத்தில் விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருக்கிறார். கேட்டால் 'ஆவிக்குரிய போராட்டத்தில் நான் இருக்கிறேன். நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்தரிப்பான்' என்று சொல்லி, சொல்லி எழுபது முறை விழுந்து கொண்டிருக்கிறார். சொல்லப்படுகிற பிரசங்கங்களும், வேத வார்த்தைகளும் மற்றவர்களுக்குத்தான் தனக்கு இல்லை, தான் பரிசுத்தவான் என்கிற நினைப்பு அவருக்கு!
.
இப்படிப்பட்ட வாழ்க்கைதான் சாதாரண கிறிஸ்தவ வாழ்க்கை என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். இது கிறிஸ்தவ வாழ்க்கையே அல்ல! இப்படிப்பட்ட வாழ்க்கைக்கா கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்? விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருக்கிற வாழ்க்கையும், நாம் சந்தோஷமாய் இருக்கிற நாட்களை விட கண்ணீர் வடித்து கொண்டிருக்கிற வாழ்க்கையும், தேவைகள் சந்திக்கப்படாமல், குறைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையையுமா கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கிறார்? இல்லை, இல்லவே இல்லை!
.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெற்றி நடை போடுகிற வாழ்க்கை! கிறிஸ்து நமக்குள் இருப்பதால் அன்பை வெளிப்படுத்தும் வாழ்க்கை! உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுத்த கர்த்தருக்குள் சமாதானமாய் வாழும் வாழ்க்கை! பரிசுத்தமாய் வாழும் வாழ்க்கை! இப்படி ஜெயம் எடுத்து வாழ்ந்து, அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழுகிற வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை!
.
பவுல் அப்போஸ்தலன் சொல்வதை பாருங்கள், அவர் ஐயோ, என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை, என்னால் இந்த பாவத்திலிருந்து வெளியே வரமுடியவில்லையே என்று பரிதாப வாழ்க்கை வாழவில்லை, அவர் பட்ட பாடுகளும், அனுபவித்த நிந்தைகளும் மிக அதிகம். ஆனாலும் அவர் சொல்கிறார், 'சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்'. நடந்த காரியங்களை நினைத்து அதிலேயே உட்கார்ந்து கொண்டிருக்காமல், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி இலக்கை நோக்கி ஜெயத்துடன் முன்னேறி கொண்டே இருக்கிறார். அதுப்போல நாமும் விழுந்த இடத்திலேயே திரும்ப திரும்ப விழுந்து கொண்டிருக்காமல், பின்னானதை மறந்து, கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே வெற்றியோடு ஓடி முடிப்போமா! அதுவே சிறந்த கிறிஸ்தவ வாழ்க்கை!
.
தூசியை உதறிவிட்டு எழுந்தரிப்போமா, கர்த்தர் நமக்கு கொடுத்த அருமையான வாழ்க்கையில் கட்டுக்களை அறுத்துவிட்டு, வெற்றியின் ஜீவியம் செய்து முன்னேறி செல்வோமா? 'தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு' - (ஏசாயா 52:2) என்ற வசனத்தின்படி, உங்களை கட்டியிருக்கிற கட்டுகளை நீங்கள்தான் அவிழ்க்க வேண்டும். அப்படி அவிழ்க்கும்போது, தேவன் திரும்ப அந்த கட்டில் அகப்படாதபடி அதற்கு தேவையான பெலனை தருவார். தொடர்ந்து வெற்றியின் வாழ்க்கை வாழ கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக