.
உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். - (பிரசங்கி 11:1).
.
சாலமோன் ராஜா இந்த வசனத்தை விதைக்கும் காலத்தில் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. அநேக விவசாய நிலங்கள் நைல் நதிக்கு அருகாமையில் இருந்தது. அந்த நதியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் விதைக்கும் காலத்தில் வெள்ளம் வரும்போது ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்போது விவசாயிகள் என்ன செய்வார்கள்? அடுத்த வருடம் நல்ல நேரம் வரும்வரைக்கும் அப்படியே விட்டுவிடுவோம் என்று சும்மா இருந்தால் அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? அப்போது அவர்கள் வெள்ளம் கரையேறியபிறகு, அந்த தண்ணீர்களின் மேல் விதையை தூவி விடுவார்கள். எப்படியாவது அந்த விதை தண்ணீர் வற்றியபிறகு மண்ணில் போய் பதிந்து துளிர் விடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. அவர்களுடைய நம்பிக்கையின்படியே, தண்ணீரெல்லாம் வற்றிய பிறகு, அந்த விதை நிலத்தில் எங்காவது விழுந்து, முளைத்தெழும்பி நெற்பயிராக எழும்பும். இதை பார்த்திருந்த சாலமோன் ஞானி இந்த கருத்தை இந்த வசனத்தில் எழுதியிருக்கிறார்.
.
நாம் செய்கிற காரியங்களுக்கும், ஊழியங்களுக்கும் ஒருவேளை உடனடியாக பதில் வராமலிருக்கலாம். உடனே பதில் கிடைக்க்காததால், நாம் எதிர்ப்பார்க்கிறபடி நடக்காததால், நம்மில் அநேகர், நாம் செய்கிற காரியங்ளை அப்படியே பாதியில் விட்டு விடுகிறோம். அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று மனம் சோர்ந்து போய் விடுகிறோம்.
.
நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம் (கலாத்தியர் 6:9) என வேதம் நம்மை தேற்றுகிறது. நாம் சோர்ந்து போகாமல், தொடர்ந்து நன்மை செய்வோமானால், நிச்சயமாக மிகப்பெரிய அறுவடையை நாம் அறுப்போம்.
.
சில இடங்களில் கர்த்தருடைய வார்த்தைகளை எத்தனையோ தடவை சொல்லியும் ஒரு பலனையும் காணாமல் போனதினால் சோர்ந்து போயிருக்கிறீர்களா? சோர்ந்து போகாமல் தொடர்ந்து செய்யுங்கள். கர்த்தர் ஒரு நாள் அதன் பலனை நீங்கள் காணும்படி செய்வார்.
.
சில நேரங்களில், நாம் போய் வசனத்தை விதைத்தவுடனே அதை ஏற்று கொள்வார்கள். ஏனென்றால், நமக்கு முன்னே சென்றவர்கள் அந்த நிலத்தில் விதைத்து, அந்த நிலத்தை ஏற்ற நிலமாக மாற்றியிருந்தபடியால், நாம் விதைத்தவுடனே அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகையால் நாம் இப்போது விதைத்து உடனே பதில் வரவில்லை என்றால் அதற்காக சோர்ந்து போகாமல், தொடர்ந்து விதைப்போம். அநேக நாட்களுக்கு பின் அதன் பலனை காண்போம்.
.
உங்கள் வீட்டில் ஒரு நன்மையும் காணாமல், சோர்ந்து போயிருக்கிறீர்களா? எத்தனை நாள் ஜெபித்தும் கர்த்தர் என் வீட்டின் நிலைமையை மாற்றவில்லை என்று சோர்ந்து போனீர்களா? தளர்ந்து போகாமல் சோர்ந்து போகாமல், ஜெபிப்போமானால், கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் நிலைமையை மாற்றுவார். நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது (நீதிமொழிகள் 23:18) என்று சொன்னவர், நிச்சயமாகவே உங்கள் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வருவார்;. உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீணாக போவதில்லை. ‘அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்' என்று வேத வசனம் கூறுகிறதல்லவா? காலங்கள் கடந்தாலும், கர்த்தருடைய கிருபைகள் மாறுவதில்லை, கர்த்தர் மாறுவதில்லை. அவர் வாக்குததத்தங்களும் மாறுவதில்லை. ஆகவே சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் நம்பிக்கையை விட்டு விடாதிருங்கள். அந்த விவசாயிகளின் நம்பிக்கை வீணாய் போகாமல், அந்த விதை அநேக நாட்களுக்கு பிறகு முளைத்தெழும்பி பலன் கொடுத்தது போல, உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீணாய் போவதில்லை. உங்கள் முகம் பிரகாசமடையும்படி கர்த்தர் உங்கள் ஜெபங்களுக்கு பதில்கொடுப்பார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக