செவ்வாய், 3 ஜூன், 2014

நீதிமானின் முடிவு


.
'நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக' - (எண்ணாகமம் 23:10).
.
பிரியமானவர்களே நம் ஒவ்வொருவருக்கும் எல்லாரையும் போல ஒருவாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வாழ்க்கையின் முடிவில் நாம் மற்றவர்களால் எப்படி அறியப்படுகிறோம்? சரியான கோபக்காரன் என்றோ, சரியான குடிகாரன் என்றோ, தொல்லைகளை கொடுக்கிறவன் என்றோ எப்படி அறிந்து கொள்ளப்படுவோம்?
.
.
அல்லது மற்றவர்களால், இவரைப் போன்ற நல்ல மனிதரை காண்பது அரிது என்று போற்றப்படுவோமா? நாம் இல்லாமற்போனால் மற்றவர்கள் நம்மை உண்மையாகவே இழந்து தவிப்பார்களா?
.
.
இந்நாட்களில் ஒரு அரசியல் தலைவர் மரித்தவுடன், எங்கள் கட்சி ஒரு மாபெரும் தலைவரை இழந்து விட்டது என்று உடனே அறிக்கை விடுவார்கள். அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைக் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். இவையெல்லாம் அரசியலில் சகஜம். அதுப்போன்று நம்மை பெயரளவில் இழந்திருக்கிறோம் என்று சொல்லி, இருதயத்தில் இவன் போனது எத்தனை நல்லது என்று நினைப்பார்களானால்
அது எத்தனை பயங்கரம்!
.
.
'யோராம் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்' (2நாளாகமம் 21:20) என்று ஒரு யூதாவின் இராஜாவைக்குறித்து வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வழிகளில் நடவாமல், அவன் தன் விருப்பம் போல ஆட்சி செய்தபடியால், ஒருவரும் விரும்பாத வண்ணம்
அவன் எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்து, கொடிய நோயால்
மரித்துப்போனான் என்று வேதத்தில் காண்கிறோம்.
.
.
ஆனால் யாக்கோபு மரித்தபோது, 'அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான்; பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும், யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள்.
தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள். இரதங்களும் குதிரைவீரரும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில்
வந்தபோது, அவ்விடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான். ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய
கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துங்கங்கொண்டாடல் என்றார்கள். அதினாலே யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று' (ஆதியாகமம் 50:7-11) என்றுப் பார்க்கிறோம். ஆம், யாக்கோபு மரித்தபோது, எகிப்தில்
இருந்த சகல பெரியோரும், குதிரை வீரரும், யாக்கோபுக்காக பெரும் புலம்பலாக புலம்பினார்கள் என்றுப்பார்க்கிறோம். அவருடைய இழப்புஅவர்களை புலம்ப வைத்தது.
.
.
கர்த்தரோடு இருந்தவர்களாக, கர்த்தருக்குள் மரிப்பவர்களுக்கும்,
கர்த்தரில்லாமல் மரிப்பவர்களுக்கும் எத்தனை வித்தியாசம்! 'கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது' (சங்கீதம்116:15) என்று வேதம் கூறுகிறது.
.
.
பிரியமானவர்களே, நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது? மற்றவர்கள் போற்றும் வகையில் நம் வாழ்க்கை கர்த்தருக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா? அல்லது யாரும் விரும்பாவண்ணம்,மூர்க்கமான, பிரயோஜனமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? கர்ததருக்குள் மரித்தால், இம்மையிலும் மகிமை, மறுமையிலும் மகிமை! கர்த்தரில்லாமல் மரித்தால், இம்மையிலும் வெறுமை,
மறுமையிலும் வெறுமை! எதை நாம் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்?
.
.
கர்த்தருக்கு பிரியமுள்ளவர்களாக, சபைக்கும், சமுதாயத்திற்கும்
பிரயோஜனமுள்ளவர்களாக நம் வாழ்க்கை இருக்கும்படியாக கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வராக! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக