இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். -(யோவான் 2:11).
.
நம் தேசத்தில் தேவனின் அற்புதத்தை கண்டு கர்த்தரை ஏற்றுக் கொள்கிறவர்கள் அநேகர் இருந்தாலும், அற்புதத்திற்காக மாத்திரம் அவர்கள் கர்த்தரண்டை வருகின்றவர்களாக இருந்தால் அது பரிதாபமானது. உடல் சுகம், உலகப்பிரகாரமான தேவைகள் இவை எல்லாவற்றையும்விட அவர்களின் ஆத்தும இரட்சிப்பு மிகவும் விலையேறப்பெற்றது. அவர்களின் ஆத்துமாவிற்கு விலையே இல்லை.
.
இயேசுகிறிஸ்து அற்புதர்தான். அற்புதங்களை செய்பவர்தான். ஆனால் 'அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை' (யோவான் 12:37) என்று வாசிக்கிறோம். அப்படி தேவனின் அற்புதங்களை கண்டும், பெற்றும் கர்த்தரை விசுவாசிக்கவில்லை என்றால், அவர்கள் பெற்றுக் கொண்ட அற்புதம் வீணாகவே இருக்குமல்லவா?
.
பவுல் அப்போஸ்தலன் 'கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே' (அப்போஸ்தலர் 17:27) என்று சொல்வதுப்போல கர்த்தரை தடவிப்பார்த்தாகிலும் அவரை அறியாதவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று நாம் ஜெபிக்கும்போதும், அற்புதம் அடையாளங்கள் மூலம் அவர்களை சந்தியும் என்று நாம் ஜெபிக்கும்போதும், கர்த்தர் ஜனங்களை சந்திக்கிறார். ஆனால் அற்புதங்களை பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று அவருக்காக ஜீவிக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறியானதே!
.
நாம் கர்த்தரை அறியாத ஜனங்களுக்காக ஜெபிக்கும்போது, 'அற்புதங்களை பெற்றுக் கொண்டவர்கள் உம்மை ஏற்றுக் கொண்டு, உமக்காக ஜீவிக்க வேண்டுமே' என்று அதற்காகவும் ஜெபிக்க வேண்டும்.
'கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்' (யாத்திராகமம் 14:31). இந்த வசனத்தில், கர்த்தரின் ஜனங்கள் தேவன் செய்த மகத்தான கிரியைகளை கண்டு, கர்த்தருக்கு பயந்து அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் என்றுப் பார்க்கிறோம். அதுப்போல 'இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்' என்றுப் பார்க்கிறோம். ஆம், கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், அவருடைய மகிமையை கண்டவர்களுமாகிய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். கர்த்தருடைய ஜனங்களிடத்தில் அற்புதங்கள் நடக்கும்போது, அவர்கள் இன்னும் அதிகமாய் கர்த்தரைப் பற்றிக் கொண்டு, அவருக்கு நன்றி செலுத்தி வாழ்வார்கள்.
.
பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்வில் கர்த்தரின் அற்புதத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறீர்களா? நம் தேவன் அற்புதர், பெரிய அற்புதங்களை செய்கிறவர். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அற்புதங்களை செய்ய வல்லவர். நம் தேவைகளை அதிசயமாய் சந்திக்க வல்லவர். அப்படிப்பட்ட தேவன் அதிசயமாய், அற்புதமாய் நம் தேவைகளை சந்திக்கும்போது, அவர் செய்த அற்புதத்தை மறவாமல், அவருக்கு நன்றியாக ஜீவிப்போமாக! மற்றவர்களுக்கும் சாட்சியாக அறிவிப்போமாக! அதன் மூலம் அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து இரட்சிப்பிற்குள் வர காரணமாயிருப்போம். அற்புதத்தின் தேவன் இந்த நாளில் தானே நமக்கு அற்புதத்தை செய்து நம் தேவைகளை சந்திப்பாராக! ஆமென் அல்லேலூயா!(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக