வியாழன், 26 ஜூன், 2014

கிறிஸ்துவின் நியாயாசனம்


.

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2கொரிந்தியர் 5:10).

.
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்றும், அவரது வருகையில் மரித்தவர்கள் முதலாவது எழுந்தரிப்பார்கள் என்றும், உயிரோட இருப்பவர்கள் அவருடைய சாயலாக மாறி, மறுரூபமாக்கப்பட்டு, நடு வானத்தில் இயேசுவை சந்தித்து, அப்படியாக நித்திய நித்தியமாய் அவரோடு கூட இருப்போம் என்றும் நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அதுவே இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகை அல்லது Rapture என்றழைக்கப்படுகிறது.

.

அப்படி இயேசுவோடு என்றும் இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற நாம் அவரோடு என்றும் வாழ்ந்து, பொன் வீதியில் உலாவி, பளிங்கு போன்ற ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதியில் விளையாடி, ஜீவவிருட்சத்தின் கனியை புசித்து, எல்லாவற்றிற்கும் மேலாக பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் திளைத்து மகிழ்ந்து வாழ்வதற்கு முன் இயேசுகிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பு கிறிஸ்தவர்களுக்கு அல்லது கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவரும் ஒன்றன்பின் ஒன்றாக நாம் இந்த சரீரத்தில் இருக்கும்போது செய்த ஒவ்வொரு காரியங்களுக்கும், கிரியைகளுக்கும் இயேசுகிறிஸ்துவினிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். கிறிஸ்துவை அறியாத மற்றவர்களுக்கு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வழங்கப்படும். அதில் கிறிஸ்தவர்கள் போய் நிற்க தேவையில்லை.

.

இந்த கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு கிறிஸ்தவர்களாயிருக்கிற சிறியோர் பெரியோர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இதிலிருந்து தப்ப யாராலும் முடியாது. நம் பெயர் அறிவிக்கப்படும்போது நாம் சென்று நம் வாழ்வில் செய்த ஒவ்வொரு காரியத்தை குறித்தும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அங்கு நாம் ஏன் இந்த காரியத்தை செய்தோம் என்று தேவனிடம் வழக்கிட முடியாது. வாதிட முடியாது. ஏனென்றால் அங்கு எல்லாம் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரிடமிருந்து எதையும் மறைக்கவும் மாற்றவும் முடியாது. ஏனெனில் 'அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்' (எபிரேயர் 4:13). அநேகர் அவர்கள் மறைவாக செய்த பாவங்களும் அவர்களுடைய செய்கைகளும் வெளியே அந்த நாளில் கொண்டு வரப்படும்.

.

இந்த நியாயத்தீர்ப்பில் நம் சரீரத்தில் செய்த பாவங்கள் நியாயந்தீர்க்கப்படுவது மட்டுமல்ல, நாம் சரீரத்தில் செய்த நன்மைகளுக்கு பலன்களும் கிடைக்கும். நாம் செய்த நன்மைகளுக்கு தக்கதாக தேவன் நமக்கு அளிக்கும் ஐந்து வகையான கீரிடங்களை குறித்து வேதம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

.

1. அழிவில்லாத கிரீடம்: பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். - (1 கொரிந்தியர் 9:25).

.

2. ஜீவக்கிரீடம்: சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். - (யாக்கோபு 1:12).

.

3. மகிழ்ச்சியின் கிரீடம்: எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள். - (2தெசலோனிக்கேயர் 2:19).

.

4. நீதியின் கிரீடம்: இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். - (2 தீமோத்தேயு 4:8).

.

5. வாடாத கிரீடம்: அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். - (1 பேதுரு 5:4).

.

நாம் கிறிஸ்துவுக்காக செய்த ஒவ்வொரு காரியத்திற்கும் ஏற்ற பலன் உண்டு. ஒருவேளை மனிதர்கள் அதை பாராட்டாமல் போகலாம், அதை மதிக்காமல் இருக்கலாம். ஆனால் நாம் கர்த்தருக்காக செய்த ஒவ்வொரு தியாகத்திற்கும், செய்கைக்கும் சரியானபடி பதில் செய்யப்படும். தேவன் அநியாயம் செய்வதில்லை. நாம் அவருக்காக பட்ட பாடுகளுக்கு ஏற்ற பலனை நிச்சயமாய் அவர் அந்நாளில் தருவார்.

.

தேவன் நாம் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அக்கினிக்கு உட்படுத்துவார். தேவனை மகிமைப்படுத்தும்படி செய்யப்படும் காரியம் எதுவும் அந்த அக்கினிக்கு உட்படுத்தப்படும். நாம் எந்த வழியில், எந்த முறையில், எந்த விதத்தில் எதை மனதில் வைத்து கர்த்தருக்கு ஊழியம் செய்தோம் என்பதை பரிசோதிக்கும் வகையில் அது அக்கினிக்கு உட்படுத்தப்படும். பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் போன்றவை அக்கினியில் போடப்பட்டாலும் எப்படி நிலைநிற்கிறதோ அதுப்போல நாம் தியாகமாக, தேவ நாம மகிமைக்காக உண்மையாக செய்த ஊழியங்கள் நிலைத்து நிற்கும். மரம், புல், வைக்கோல் போன்றவை நெருப்பில் போட்டால் அழிந்து போவது போல நாம் செய்த காரியங்கள் நம் பெருமைக்காக, நம் தேவைக்காக, நம் புகழுக்காக மட்டுமே இருந்தால் அவை எரிந்து போகும். ஒரு பலனும் நமக்கு கிடைக்காது. லோத்து எப்படி சோதோம் கொமோரா பற்றி எரிகிற போது, வெளியே கொண்டு விடப்பட்டானே ஒழிய அவன் அங்கு சேர்த்து வைத்திருந்த ஒரு பொருளையும் எடுத்து கொள்ள முடியாமற் போனது போல நாம் தப்பித்து கொள்வோமே தவிர நம் கிரியைகள் ஒன்றுக்கும் பலனில்லாமல் போகும்.

.

இது கிறிஸ்தவ ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் நடைபெற இருக்கும் நியாயத்தீர்ப்பு. நாம் கர்த்தருடைய நாம மகிமைக்காக எதை செய்தோமோ அது மாத்திரமே அக்கினியின் பரிட்சைக்கு நிலை நிற்கும். மற்றபடி நாம் உலகத்தில் செய்த எந்த காரியமும் அங்கு நிற்காது. அந்த நாளில் நாம் வெட்கப்பட்டு போகாதபடி, நம்முடைய குறிக்கோள்களும், நம்முடைய வழிகளும், நம்முடைய எண்ணங்களும், நம்முடைய செய்கைகளும் கர்த்தருக்கு முன்பாக சரியானதாக, சீரானதாக, தேவனுக்கு மகிமையை கொண்டு வரத்தக்கதாக இருக்கட்டும். நியாயந்தீர்க்கப்படும்போது, கிரீடங்களை பெற்று கொள்கிறவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாற நம் செய்கைகள் மாறட்டும். உலகத்திற்காக வாழ்ந்தது போதும், தேவனுக்கு பிரியமாக வாழ முடிவு செய்வோம். அதன்படி வாழ்ந்திடுவோம். தேவ நாமம் மகிமைப்படுவதாக, ஆமென்! அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக