செவ்வாய், 3 ஜூன், 2014

முந்திக் கொள்வோம்


.
மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். - (மத்தேயு 7:12).
.
நாம் அநேக நேரங்களில் பிறரிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்துக் கொண்டேதான் வாழ்கிறோம். ஒரு திருமண வீட்டிற்கு சென்று ஒரு குறிப்பிட்ட பணத்தை அன்பளிப்பாக கொடுக்கும்போது, நம் வீட்டு திருமணத்திற்கு அதே திரும்ப கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறவர்கள் உண்டு. பிறருக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவினால், அவர்களும் நமக்கு திரும்ப உதவ வேண்டும் என்று நாம் நம்மை அறியாமலே எதிர்ப்பார்க்கிறோம். ஏதாவது முக்கிய கூட்டங்களுக்கு செல்லும்போது, நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். உடல் நிலை சரியில்லை என்றால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நம்மை கரிசனையாய் விசாரித்து, கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
.
நம்மில் அநேகர் புலம்புவதுண்டு, என்னை என் உடன்பிறந்தாரோ, உறவினரோ, நண்பர்களோ யாரும் எப்படி இருக்கிறாய் என்று விசாரிப்பதில்லை, ஒரு போன் போட்டுக் கூட கேட்பதில்லை என்று. நம்மை அவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்பும் நாம், ஏன் முதலில் தொடர்பு கொண்டு விசாரிக்கக்கூடாது? இன்னும் சிலர் தங்களது குடும்பத்தார் கொடுத்துக கொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பர். ஆனால் என்னால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று துளியும் யோசிப்பதில்லை.
.
பிறரிடமிருந்தே உதவியை எதிர்ப்பார்க்கும் நாம் பிறருக்கு உதவுவதில் ஏன் முந்திக்கொள்வதில்லை? குறிப்பாக மனைவி, கணவன் தன்னை எப்போதும் விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும், அன்பின் வார்த்தைகளை பேசிக் கொண்டே இருக்க வேண்டும், தான் செய்யும் ஒவ்வொன்றையும் பாராட்ட வேண்டும், தனது தாயின் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்றெல்லாம் கணவரிடம் எதிர்ப்பார்க்கிறாள். எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்களில் பொய்த்துப் போகும்போது எரிச்சலடைந்து, வார்த்தைகள் வாக்குவாதமாகி, வாக்குவாதம் கடும் சண்டையில் போய் முடிந்து விடுகிறது. ஆனால் அவள் எதையெல்லாம் கணவனிடம் எதிர்ப்பார்த்தாளோ அவை அனைத்தையும் அவள் கணவனுக்கு செய்ய முந்திக் கொண்டிருப்பாளானால் அந்த குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்? அப்படி நடந்துக் கொள்ளும்போது, கணவனால் கூடுதல் அன்பை காட்டாமல் இருக்க முடியுமா?
.
பிரியமானவர்களே, நம் குடும்பத்தார் நம்மை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், நம்மிடம் ஆலோசனை கேட்க வேண்டும், உதவ வேண்டும், என் குறைகளை மன்னிக்க வேண்டும், மீண்டும் அன்பு செலுத்த வேண்டும் என்று தானே விருமபுவோம். யாரும் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படவும், அற்பமாய் எண்ணப்படவும் விரும்பமாட்டோமல்லவா? ஆகவே உங்களுக்கு உங்கள் குடும்பத்தார், அயலகத்தார், விசுவாசிகள், நண்பர்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவைகளையே நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள்.
.
பிறர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோனோ அதை நான் பிறருக்கு முதலாவதாக செய்ய முந்திக் கொள்வேன் என்று தீர்மானம் எடுப்போமா? மற்றவர்களை கனம் பண்ணுவதில் முந்திக் கொள்வோம், மற்றவர்களை விசாரிப்பதில் முந்திக்கொள்வோம். அதனால் நம் வாழ்வில் ஆனந்தம் நிச்சயம் பெருகும். மன உளைச்சல் போய் மன நிறைவும், மகிழ்ச்சியும் பெருகும். 'மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, அப்படியே செய்வோம். அதினால் கர்த்தர் மகிழுவார். நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக