செவ்வாய், 3 ஜூன், 2014

நடப்பதெல்லாம் நன்மைக்கே


.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28).
.
ஒரு அரச அரண்மனையில் ஒரு மந்திரி இருநதார். அவர் எப்போதும் என்ன நடந்தாலும் 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறுவார். ஒரு முறை அந்த நாட்டின் அரசர், 'நீங்கள் என்ன எப்போதும் எல்லாம் நன்மைக்கே என்று கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'ஆம் நமது நன்மைக்கே எல்லாம் நடக்கிறது' என்று கூறினார். அதன்பின் இருவரும் வேட்டைக்காக காட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அரசர்; தன் வில்லை எய்யும்போது, தவறுதலாக அவர் விரலின் மேல் பட்டு, விரல் வெட்டுப்பட்டது. அப்போதும் அந்த மந்திரி, 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறினார். அதை கேட்ட அந்த அரசருக்கு கோபம் வந்தது, 'நான் என் கை வெட்டுப்பட்டு துடிக்கிறேன், நீர் என்ன இதுவும் நன்மைக்கே என்று கூறுகிறீர்' என்று கோபத்தோடு கூறி அவரை சிறையில் அடைத்தார். அப்போதும் அந்த மந்திரி 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறினார்.
.
சில நாட்கள் கழித்து, அந்த அரசர் மீண்டும் வேட்டைக்கு செல்லும்போது, கானகத்தில் வெகு தூரம் சென்று விட்டார். அவரை அங்கிருந்த காட்டுமிராண்டிகள் பிடித்து கொண்டுபோய் தங்கள் கடவுளுக்கு பலி செலுத்த இழுத்து கொண்டு போனார்கள். பலி செலுத்தும் அந்நேரத்தில் அவர் விரலிலிருந்த காயத்தை பார்த்துவிட்டு, 'ஓ, பழுதான பலிகளை எங்கள் கடவுளுக்கு செலுத்த கூடாது' என்று கூறி அந்த அரசரை விடுதலை செய்து விட்டுவிட்டார்கள். அந்த அரசர் விடுதலையானதும் நேரே சிறைசாலைக்கு போய், அந்த மந்திரியை விடுவித்து, 'நீங்கள் சொன்னது சரிதான், என் கையில் வெட்டுபட்டது நன்மைக்குதான். இல்லாவிட்டால் நான் நரபலியாகி இருப்பேன். சரி, நான் வெட்டுப்பட்டது நல்லதுதான். ஆனால் நீங்கள் அநியாயமாய் சிறையில் போடப்பட்ட போதும் எல்லாம் நன்மைக்கே என்று கூறினீர்களே, நீங்கள் சிறையில் இருந்தது எந்தவிதத்தில் நன்மை?' என்று கேட்ட போது, அந்த மந்திரி சொன்னார், 'நல்லவேளை நான் சிறையில் இருந்தேன், இல்லாவிட்டால், நான் உங்களோடு வேட்டைக்கு வந்திருப்பேன். உங்களுக்கு பதிலாக என்னை நரபலி செலுத்தி இருப்பார்கள்' என்று கூறினார்.
.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் ஒவ்வொருவருக்கும், அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கும் சகலமும் ந்னமைக்கேதுவாகவே நடக்கிறது. சகலமும் என்று சொல்லும்போது, அது நன்மையான காரியங்களாய் இருக்கலாம், அல்லது தீமையான காரியங்களாய் இருக்கலாம், ஒருவேளை சந்தோஷமோ, துக்கமோ, இனிமையானதோ, கசப்பானதோ, எளிமையானதோ, கஷ்டமானதோ, சௌக்கியமானதோ, துன்பப்படுதலோ, வாழ்வோ, சாவோ எதுவாயிருந்தாலும் கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. சிலவேளை நாம் நம் வாழ்வில் வரும் துன்பமான காரியங்களை வைத்து, தேவனுக்கு என்மேல் அன்பேயில்லை, நான் ஏன் இந்த பாடுகள் பட வேண்டும் என்று புலம்பலாம். ஒருவேளை உங்கள் வேலையிடத்தில் நீங்கள் பாடுகளை சந்திக்க நேரலாம். உங்கள் குடும்பத்தில் வரும் பாடுகளினாலே நீங்கள் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் வைத்து கொள்ளுங்கள். கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது.
.
யோசேப்பின் சகோதரர் கள்ளமில்லாத அந்த வாலிபனை, கொடிய குழியில் போட்டு அவனை கொல்ல நினைத்து, பின் அந்த பக்கமாய் எகிப்திற்கு தங்களுடைய சரக்குகளை விற்க சென்ற இஸ்மவேலரிடம் விற்று, அவர்கள் அவனை எகிப்தியன் ஒருவனுக்கு விற்றார்கள். அவன் அங்கு அநேக பாடுகள் பட்டு, பின் தேவனால் உயர்த்தப்பட்டு, பார்வோனுக்கு அடுத்த அதிகாரத்தில் இருக்கும்போது அவனுடைய சகோதரர்கள், அவனிடம் அவன்தான் யோசேப்பு என்று அறியாமல், அவனிடம் தங்கள் பஞ்சத்திற்காக தானியம் வாங்க எகிப்திற்கு சென்று அவனோடு பேசி கொண்டிருக்கையில், 'யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்' - (ஆதியாகமம் 45:4,5) என்று கூறுவதை காண்கிறோம். ஒருவேளை யோசேப்பின் சகோதரர் அவனை இஸ்மவேலரிடம் விற்றபோது, தன் எதிர்காலம், தன் கனவுகள் எல்லாம் அழிந்து போனது என்று யோசேப்பு நினைத்திருக்கலாம். இனி எனக்கு வாழ்வேது என்று நினைத்திருக்கலாம். ஆனால் ஒருநாள் வந்தது, அவன் எகிப்து முழுவதற்கும் அதிகாரியாக மாறி, தன் குடும்பத்தையும் தேசத்தையும் இரட்சிக்கும்படி தேவன் அவனை முன்பே அனுப்பினார் என்பதை அவன் அறிந்து இந்த வார்த்தைகளை தன் சகோதரரிடத்தில் கூறினான். தீமையையும் நன்மையாக மாற்றும் தேவன் நம் தேவன். ஆமென் அல்லேலூயா!
.
நீங்கள் இப்போது படும் பாடுகள் எல்லாம் ஒருநாள் நன்மையாக மாறுவதை காண்பீர்கள். இப்போது நாம் அதை உணராவிட்டாலும், பின் அதை அறியும்படி தேவன் கிருபை செய்வார். ஆகையால் மனம் தளராதிருங்கள். சோர்ந்து போகாதிருங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கர்த்தரிடம் எல்லாவற்றையும் ஒப்புகொடுத்துவிட்டு, அவருடைய செயலுக்காக காத்திருங்கள். கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார்.
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக