.
ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. - (எபேசியர் 2:19-21).
.
இயேசுகிறிஸ்து ஒரு உவமையை சொன்னார், 'நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்' (மத்தேயு 7:24-27).
.
இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிற வார்த்தையின்படி கேட்டு, அதன்படி செய்கிறவன், கன்மலையாகிய கிறிஸ்துவுக்குள் தன் வீட்டைக்கட்டுகிறான். அப்போது எந்த புயல் வந்தாலும், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், எத்தனை பாடுகள் வந்தாலும் அந்த வீடு அப்படியே நிற்கும். அது சாய்ந்துப் போவதில்லை, அதன் அஸ்திபாரம் உறுதியாக, ஆழமாக கிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தின்மேல் போடப்பட்டிருப்பதால் அது அசையாது.
.
ஆனால் கிறிஸ்து சொல்லுகிற வார்த்தையைக் கேட்டும், அதன்படி செய்யாதவனுடைய வீடோ, ஒரு வெள்ளம் வந்தாலும், விழுந்து அழிந்து போகும்.
.
'ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது' என்று ஒரு அழகான மாளிகை எழுப்படுவதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.
.
நம் இருதயமாகிய கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய வீடு ஒரு அழகான மாளிகையாக உருவாக வேண்டுமென்றால், அது அப்போஸ்தலர் உபதேசத்தில் நிலைத்திருந்து, கன்மலையாகிய கிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவர் மேல் கட்டப்பட்ட வீடு என்றென்றும் நிலைத்திருக்கும். மற்றவை விழுந்து அழிந்து போகும்.
.
பிரியமானவர்களே பணத்தின்மீதோ, அழகின் மீதோ, உறவுகளின் மீதோ, நண்பர்களின் மீதோ நம்பிக்கை வைத்து கட்டப்படும் வீடுகள் நாளடைவில் புயல் வரும்போதோ, பலமான பிரச்சனைகள் போன்ற காற்று வீசும்போதோ இடிந்துப் போகும்.
.
கிறிஸ்துவே நம் வாழ்வின் அஸ்திபாரமாக இருப்பாராக. வேறு எந்த அஸ்திபாரமும் உறுதியானது அல்ல, அவரை அஸ்திபாரமாக வைத்துக் கட்டப்படும் வீடு என்றும் நிலைத்திருக்கும். நம் குடும்பங்கள் ஒவ்வொன்றும் அப்படியே கட்டப்பட்டிருப்பதாக. பிசாசானவன் வந்து அவற்றை கவிழ்த்துப் போட வகை தேடினாலும், அது இடிந்து விழாது. அசையாமல் நிற்கும். அப்படிப்பட்டதான விசுவாசமுள்ள, கர்த்தர் மேல் கட்டப்பட்ட வாழ்க்கையாக, அதனால் அசைக்க முடியாததாக நம் வாழ்வு இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக