புதன், 7 மே, 2014

எது ஐசுவரியம்

.....................................எது ஐசுவரியம்?..............................
.
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். - (நீதிமொழிகள் 10:22).

.
முழு உலகத்தையும் ஜெயித்த மகா வீரன் அலெக்ஸாண்டர் தான் மரிக்கும்போது, தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். அப்போது 'என்னுடைய மரித்த சரீரத்தை எடுத்துச் செல்லும்போது, என் கைகளை வெளியே வைத்து எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில் அதை காண்பவர்கள் யாவரும் அறியட்டும், நான் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை, மரித்த போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை' என்று கூறினார்.

.
அநேக ஊழியர்கள் இந்த நாட்களில் ஆசீர்வாதங்களைக் குறித்து
பிரசங்கிக்கின்றனர். அதற்கேற்ப வசனங்களை எடுத்துக் கூறுகின்றனர்.அவர்கள் பேசும் கூட்டங்களுக்கு அதிகமான மக்கள் செல்கின்றனர்.ஏனெனில் அநேகருக்கு ஆசீர்வாதங்கள் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்கிற விருப்பம் உண்டு.
.
பணமோ செல்வமோ இருப்பது தவறு என்று சொல்லவில்லை. பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்றும், ஆனால் பண ஆசையோ எல்லா தீமைக்கும் வேர் என்றும் வேதம் கூறுகிறது. பணம் இல்லாவிட்டால் ஒரு ஆளும் நம்மை மதிக்கப் போவதில்லை. ஆகவே பணம் முக்கியம், ஆனால் பண ஆசை இருப்பதோ தவறு.
.
சாலமோன் இராஜாவை பார்க்கும்போது தேவன் அவருக்கு ஏராளமான ஐசுவரியத்தை கொடுத்திருந்தார் என்று பார்க்கிறோம். 'ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப்
பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்' (2 நாளாகமம் 1:15) என்றுப் பார்க்கிறோம். இத்தனை ஐசுவரியங்கள் அவருக்கு இருந்தும், பிரசங்கி என்னும் வேதபுத்தகத்தில் எல்லாமே மாயை என்று புலம்புவதைப் பார்க்கிறோம். எல்லா ஐசுவரியமும்தான் இருக்கிறதே,
வேறு என்ன வேண்டும்? ஏன் மாயை மாயை என்று புலம்ப வேண்டும்?
.
அதேப்போல 'ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்' (ஆதியாகமம் 13:2) என்று ஆபிரகாமைக் குறித்து வாசிக்கிறோம். 'ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்,ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று' என்று எழுதியிருக்கிறபடி ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதத்தினால் புறஜாதிகளாகிய நாம் இன்றளவும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஏன் சாலொமோனின் ஐசுவரியத்தைப் போல நாம் ஆசீர்வதிக்கப்படவில்லை?

ஆபிரகாமின் ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
.ஆபிரகாம் ஐசுவரிய சீமானாயிருந்தும், அதன் மேல் தன் கண்களை வைக்கவில்லை. அவர் எல்லா ஐசுவரியத்திற்கும் சொந்தக்காரரான கர்த்தர் மேல் தன் கண்களை வைத்திருந்தார். அதனால் அவர் தேவனுடைய சிநேகிதன் என்று எண்ணப்பட்டார். அவருடைய ஆசை, விருப்பம், எல்லாமே தேவன் பேரில் இருந்தது. உலக ஐசுவரியத்தினால் தன்னை சீராட்டி, பாராட்டி அனுபவிக்காமல், தேவ உறவின் ஐசுவரியத்தினால் தன்னை பெலப்படுத்திக் கொண்டார்.
சாலொமோனோ அப்படியிராமல், உலக ஐசுவரியங்கள் அத்தனையையும் அனுபவித்தார். ஆயிரம் பெண்களை மணந்து, அவர்கள் இராஜாவின் இருதயத்தை வழுவிப் போகச் செய்தனர். கர்த்தரை மறந்து, உலக ஐசுவரியத்தினால் மதிமயங்கி போனதினால், அது தரும் இன்பம் சிற்றின்பமாகவே இருந்தது. பேரின்ப நாதரின் இனிய சமுகத்தை அவர் இழந்து போனார். 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும். அதனோடே அவர் வேதனையை கூட்டார்' என்ற பொன்னான வார்த்தையை அவர் அறியவில்லை. ஆகையால் அவருடைய ஐசுவரியம்
அவருக்கு வேதனையை தந்தது. கர்த்தர் ஐசுவரியத்தை கொடுத்தார். ஆனால் தம் ஆசீர்வாதத்தை அதனோடு தரவில்லை. ஆகவே அது வேதனையை தந்தது. ஆதனால் அவர் அனுபவித்த ஒன்றும் அவருக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தரவில்லை.
அதனால் எல்லாமே மாயையாக அவருக்கு தோன்றிற்று.
.
பிரியமானவர்களே, இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.அதற்குப்பின்னே எனக்கு அது வேண்டும் என்று நாம் அலையத்தேவையில்லை. 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33) என்று வாக்களித்தவர் நாம் அவருடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது, நமக்கு எல்லா ஐசுவரியத்தையும் கூட்டித்தருவார். ஆனால் நாம் கர்த்தரோடு இல்லாதபடி நாம் அனுபவிக்கும் எந்த ஐசுவரியமும் மாயையே. ஆனால் கர்த்தரோடு நாம் இருந்து அவர் கொடுக்கும் ஐசுவரியத்தினால் நாம் மதிமயங்கி போகாமல், அவரது சமுகத்தை வாஞ்சிப்போமானால் அது நிச்சயமாகவே ஆசீர்வாதத்தை தரும். அதனுடனே வேதனை இராது. ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக