.
'ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்'. - (1 இராஜாக்கள் 7:40).
.
தேவன் நாம் செய்யும் வேலைகளில் அதை எப்படி செய்கிறோம், எப்படி முடிக்கிறோம் என்பதில் மிகவும் கவனமுள்ளவராயிருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தில் அநேக முறை அநேகர் ஆரம்பித்த வேலைகளில் எதிர்ப்பும், உற்சாகமும் ஊக்குவித்தலும் இல்லாததின் காரணமாக தங்கள் ஓட்டத்தை பாதியிலேயே நிறுத்தி இருக்கின்றனர். ஆவிக்குரிய ஓட்டத்தில் உற்சாகமாக ஆரம்பித்த அவர்கள் பாதியிலேயே நிறுத்தி பரிதாபமாக காணப்படுகின்றனர்.
.
வேதம் நாம் ஆரம்பித்த எந்த வேலையையும் சரியானபடி முடிக்க வேண்டும் என்றே போதிக்கிறது. இயேசுகிறிஸ்து தாம் இந்த உலகத்திற்கு வந்து, உலக மக்களுக்காக மாசற்ற தம்முடைய இரத்தத்தை சிந்தி இரட்சிப்பை சம்பாதித்து கொடுத்து, எல்லாவற்றையும் முடித்தவராக, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினவராக, சிலுவையில் தொங்கி கொண்டிருந்தபோது, எல்லாம் 'முடிந்தது' என்று முழக்கமிட்டார். அப்போஸ்தலனாகிய பவுலும் தான் படுகிற அத்தனை பாடுகள் மத்தியிலும், 'ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்' (அப்போஸ்தலர் 20:24) என்றே தைரியமாக கூறுகிறார். நமக்கு தேவன் ஒரு வேலையை செய்ய கொடுத்தால், அதை நாம் ஜெபத்தோடும், தேவ ஆலோசனையை பெற்றும் ஞானத்தோடு செய்ய வேண்டும். ஜெபித்து அவருடைய கிருபையை பெற்று கொண்டபின், என்ன தடை வந்தாலும் எதிர்த்து நின்று நம்மால் இயன்றதை, சிறந்ததை செய்து முடிக்க வேண்டும்.
.
'உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?' (லூக்கா 14: 28-30) என்று ஒரு உவமையை இயேசுகிறிஸ்து கூறுகிறார். ஒரு வீட்டை கட்ட துவங்கினால் அதை கட்டி முடிக்கும்வரை திட்டமிட்டு அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும். திட்டமில்லாமல் வேலையை ஆரம்பித்து, பின் அது பாதியில் நிறுத்தபட்டு போகும் என்றால், இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று மற்றவர்கள் பரிகாசம் செய்வார்கள். ஆகையால் எந்த ஒரு வேலை செய்வதற்கு முன்னும் சரியான திட்டம் நிச்சயமாக இருக்க வேண்டும். திட்டமில்லாமல் செய்யும் எந்த காரியமும் சரியாக வாய்க்காது. உதாரணமாக சிலர் ஆலயத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக சரியான நேரத்தில் எழுந்து புறப்பட ஆரம்பிப்பார்கள். ஆனால் சரியான திட்டம் இல்லாதபடியால், நேரத்தை எப்படி ஒதுக்க வேண்டும் என்கிற ஞானமில்லாதபடியால், எத்தனை அவசர அவசரமாக செய்தாலும், நேரம் கடந்து தான் ஆலயத்திற்கு வருவார்கள். எழுந்தரிக்கும்போதே, இன்ன இன்ன நேரத்தில் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று சரியான நேரத்தை தீர்மானித்து அதன்படி செய்யும்போது நிச்சயமாக சரியான நேரத்தில் அதை செய்து முடிக்க முடியும். அநேகர் அந்த திட்டம் இல்லாமல் காரியங்களை செய்வதால் நேரம் வீணாக கழிகிறது. உருப்படியாக வேலை செய்து முடிக்க முடிவதில்லை. இந்த காரியம் மட்டுமல்ல, எந்த காரியம் செய்வதற்கும் ஒரு திட்டம் அவசியம்.
.
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் அவர்களை கடிந்து கொண்டு, 'ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?' (கலாத்தியர்3:3) என்று கேட்கிறார். ஆவியிலே நம் ஓட்டத்தை ஆரம்பம் செய்த நாம் பாதியில் நிறுத்திவிட்டு, உலக வழிகளிலே செல்வோமென்றால், நாம் புத்தியீனர்களாகத்தான் இருப்போம்.
.
பின், தேவன் நமக்கு கொடுத்த வேலையில் நாம் எப்படி அந்த வேலையை செய்து முடிக்கிறோம் என்பதும் முக்கியமானது. ஏதோ செய்தோம், முடித்தோம் என்று இல்லாமல், அந்த வேலையை நம்முடைய முழு திறமையையும் காட்டி, சிறந்ததாக செய்து முடிக்க வேண்டும். அதை காணும் மற்றவர்கள் ஆச்சரியப்பட்டு, 'நீங்கள் இப்படி செய்ய எந்த காரியம் உங்களை தூண்டியது' என்று ஆச்சரியப்படும் விதத்தில் இருக்க வேண்டும். அப்போது நீங்கள் தேவனுடைய கிருபையை குறித்து சாட்சி சொல்லும்படியாக அது அமையும்.
.
ஆகவே நாம் ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கும்போது, தேவ ஞானத்தோடும், ஜெபத்தோடும், சரியான திட்டத்தோடும், மாம்சீகத்தில் செய்யாமல், தேவ பெலத்தோடு செய்யும்போது, அது சிறந்ததாக, எல்லாரும் பாராட்டும் வகையில் தேவ நாமம் மகிமைப்படும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படிப்பட்டதாக நாம் நம் எல்லா வேலைகளையும் செய்ய தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக