எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது. - (ஏசாயா 60:1).
.
நம்மிடமில்லாத சில காரியங்களை பிறரிடம் காண நேரிடும்போது நாம் நம்மை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று எண்ணி விடுகிறோம். நம்மில் அநேகருக்கு நம்மை குறித்தே தாழ்வு மனப்பான்மை உள்ளது. இந்த தாழ்வு மனப்பான்மை பிறர் முன்பு நம்மை செயலற்றவர்களாக மாற்றி விடுகிறது. நாம் பெருமையுள்ளவர்களாக இருந்தால் பிறரை மதிக்க மாட்டோம். தாழ்மையுள்ளவர்களாக இருந்தால் எவரையும் உயர்வாய் மதிப்பிடுவோம். ஆனால் நம்மையே மட்டமாக மதிப்பதே தாழ்வு மனப்பான்மை ஆகும். பொதுவாக வாலிபர்களையே அதிகம் தாக்கும் தாழ்வு மனப்பான்மையின் தன்மையை காண்போமா?
.
முதவாவதாக உடலின் நிறம், அழகு, உயரம், ஊனம் இவைகள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். அமெரிக்க அதிபரான ஆபிரகாம் லிங்கன் அவரது முகத்தோற்றத்தினால் பலமுறை கேலிக்கு உள்ளானார். ஒரு முறை ஒரு பெண், லிங்கனிடம், 'நான் பார்த்தவர்களுள் நீதான் மிகவும் அவலட்சணமானவன்' என்றாள். ஆனால் இந்த கேலிகளால் அவர் சோர்ந்து வீட்டிற்குள் முடங்கவில்லை. அடிமைதனத்தை ஒழிக்க துணிந்து செயலாற்றினார். அவருடைய பக்தி வாழ்க்கை, ஜெபம், மன உறுதி, தியாகம் மற்றும் ஏழைகள் மீது கொண்டிருந்த இரக்கம் அவரை அமெரிக்காவின் தலைசிறந்த அதிபராக்கியது.
.
வேதத்திலிருந்து கூற வேண்டுமென்றால் நாலறை அடி உயரமே இருந்த பவுல் உலகத்தையே கலக்கினார். திக்குவாயான மோசே இலட்சக்கணக்கான இஸ்ரவேல் இஸ்ரவேல் மக்களை நடத்தி சென்றார். சாலமோன் ராஜாவுக்கு அநேக அழகு மிகுந்த மனைவிமார் இருந்தாலும், கறுப்பு நிறமாயிருந்த சூலமித்தியாள் மீதே அதிக பிரியம் வைத்திருந்தார். அழகு என்பது நிறத்திலும் உடல் அமைப்பிலும் இல்லை. உள்ளத்தில் காணப்படும் நற்குணத்தில் தான் உள்ளது.
.
அடுத்ததாக, நமது பிறப்பு மற்றும் குடும்ப பின்னணியை குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளுகிறவர்கள் அநேகர் உண்டு. ஒரு விபச்சாரியின் மகனாக பிறந்தாலும், உற்றாரால் புறக்கணிக்கப்பட்டாலும் யெப்தாவை தாழ்வு மனப்பான்மை தாக்கவில்லை - (நியாயாதிபதிகள் 11:12,19) சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு இருந்தது. ஏழ்மையான குடும்ப பின்னணியை குறித்து நம்மையே குறைவாக மதிப்பிடாமல், நாம் தேவனின் இராஜரீக கூட்டத்தார் என எண்ணி பெருமிதம் கொள்ளுவோம்.
.
கடைசியாக ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவர்களை அறிவாளிகளாகவும், ஆங்கிலம் தெரிந்தாலும் பேச முடியாவிட்டால் ஒன்றும் தெரியாத அடிமுட்டாள்கள் என்றும் நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு சோர்ந்து போகிறோம். இன்றைய உலகில் ஆங்கில பேச்சறிவு அவசியமே. பேச கற்று கொள்வது கடினமானதோ முடியாததோ அல்ல. நான் படித்த இடத்தில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தவறி தமிழில் பேசினால் அதற்கு அபராதம் உண்டு. ஆகவே பள்ளியில் இருக்கும்போது யாருமே எதுவும் பேச மாட்டோம். ஆனால் படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தபோது, அவசியம் ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னுடைய உறவினர் பிள்ளைகள் வெளிநாட்டில் வளர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழ் பேச வராது. அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் தவறு வந்து, அவர்கள் 'ஐயெ இவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லையே' என்று சொல்வார்களோ என்றும், வெட்கமும், அவமானமும் ஏற்படுமே என்றும் பயந்து பேசாமலேயே இருந்து, கடைசியில் தைரியமாக, தவறாக இருந்தாலும் பேச ஆரம்பித்து, ஆரம்பத்தில் திக்கி திணறி பேசி, இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நன்கு பேச ஆரம்பித்து விட்டேன். ஆகவே ஆங்கிலம் ஒன்றும் பேச முடியாத மொழியல்ல, கஷ்டமான தமிழையே நாம் பேசும்போது ஆங்கிலம் பேசுவது ஒன்றும் பெரிய காரியமல்ல நிச்சயம்! கண்டிப்பாக மற்றவர்களோடு, தவறாக இருந்தாலும் பேச ஆரம்பிக்கும்போது, நிச்சயமாக சீக்கிரம் நீங்களும் பேச ஆரம்பித்து விடுவீர்கள்! உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள்!
.
தெலுங்கு பேசுபவர்களில் அநேகருக்கு ஆங்கிலமோ, ஹிந்தியோ பேச அறவே தெரியாது. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து சம்பாதித்து வருகிறார்கள். அவர்களில் அநேகர் பள்ளி படிப்பை கூட தாண்டாதவர்கள். நீங்கள் நன்கு படித்தவர், எதற்காக ஆங்கிலத்தில பேசுவதற்கு தயங்க வேண்டும்? தைரியமாய் பேச ஆரம்பியுங்கள்.
.
இப்படி தாழ்வு மனப்பான்மையில் வாழும் சகோதர, சகோதரிகளே, பிறரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். தாழ்வு மனப்பான்மையால், உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னை போன்ற அமைப்புடனும், குணத்துடனும் யாருமே உருவாக்கப்படவில்லை, என்னை தனித்தன்மையுடன் தேவன் படைத்துள்ளார் என்ற உண்மையே உள்ளத்தில் இருக்கட்டும். நிறத்தையும், அழகையும் எண்ணி சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து போகாதீர்கள். சந்தர்ப்பம் வரும்போது, தாழ்வு மனப்பான்மை கொண்டு அமைதியாயிருக்காமல் தைரியமாக உங்கள் தாலந்துகளை வெளியே கொண்டு வாருங்கள். உங்களை பற்றிய தேவ திட்டத்தை உணர்ந்து அதை சிறப்பாக செய்ய முயற்சியெடுங்கள். உலகில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை கொண்டுதான் தேவன் பெரிய காரியங்களை செய்தார். உங்களை கொண்டும் பெரிய காரியங்ளை தேவன் செய்வார். எழும்பி கர்த்தருக்காக பிரகாசிப்போம்! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக