புதன், 7 மே, 2014

சிறு காரியங்களிலும் உண்மை

.......................சிறு காரியங்களிலும் உண்மை.........................
.

ஆதலால் பழைய புளித்தமாவோடேஅல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். - (1 கொரிந்தியர் 5:8).

.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக மிக கொடூரமாக ஆட்சி நடத்திய காலத்தில் கிறிஸ்தவர்கள் தேச துரோகிகளாக கருதப்பட்டனர். எப்படியும் சிறிய குற்றத்தையாவது அவர்களிடமிருந்து கண்டு பிடித்து அதை மிகைப்படுத்தி சிறையில் அடைத்தனர். கிறிஸ்தவர்கள் என சந்தேகப்படுகிறவர்களையும் இரகசிய இராணுவ பிரிவு விழிப்போடு கண்காணித்தது.

.

இப்படிப்பட்ட சூழலில் கிராமத்திலுள்ள ஒரு கிறிஸ்தவரது வீட்டிலிருந்து பெட்டை கோழி ஒன்று வெளியே வந்தது. அதன் காலில் ஒரு தாள் சுற்றி கட்டப்பட்டிருந்தது. இதை கண்ட கண்காணிப்பாளர்கள், 'இவன் நம்முடைய கழுகு கண்களையும் தாண்டி யாருக்கோ இரகசிய செய்திகளை அனுப்புகிறான்' என்ற ஆர்வத்தில் கோழியை விரட்டி பிடித்து அதன் காலிலுள்ள தாளை பிரித்து படித்தனர். அதில், 'இந்த கோழி யாருடையது என்று தெரியவில்லை. இன்று அது என் வீட்டிற்குள் வந்து முட்டையிட்டு விட்டது. இதன் உரிமையாளர் வந்து முட்டையை பெற்று சொள்ளுங்கள்' என்று எழுதி அவரது பெயரையும் வீட்டு எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். குற்றத்திற்கு ஆதாரம் தேட சென்ற அவர்கள் அவரது உண்மைக்கு ஆதாரம் கண்டு வியந்தனர் ஒரு முட்டையை கூட தனக்கென்று எடுத்து கொள்ளாமல் அதை உரிமையாளரிடம் சேர்க்க முயற்சி எடுக்கிறானே என ஆச்சரியப்பட்டனர். அவர் மீதான கண்காணிப்பை விட்டு விட்டனர்.

.

தேவன் நம்மிடம் சிறு சிறு காரியங்களிலும் உண்மையை எதிர்ப்பார்க்கிறார். ஆம் அவர் நம்மிடம் சிறிய காரியத்தை கொடுத்து அதை நாம் எவ்வளவு பொறுப்போடும், உண்மையேடும், கரிசனையோடும் செய்கிறோம் என்பதை பார்க்கிறார். அந்த கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாயிருப்போமானால், அநேக பெரிய பொறுப்புகளை நம்மை நம்பி கொடுக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். ஆனால் நம்மில் அநேகர் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறிய பொறுப்புகளில் அலட்சியம் காண்பிப்பதினால்தான் நம்மை நம்பி தேவன் பெரிய காரியங்களை கொடுப்பதில்லை ஆகவே சின்ன சின்ன காரியமானாலும் உண்மையாய் இருப்போம். உதாரணமாக கடைக்காரர் மீதம் கொடுத்த சில்லறையில் அதிகமாயுள்ள ஒரு ரூபாயையும் நேர்மையாய் திருப்பி கொடுக்கும் எண்ணம் வேண்டும்.

.

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகத்தாரால் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்பட்டு வரும் காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் உலகத்தாரால் குற்றப்படுத்தப்படும் நிலையில் இருந்தால் பாதிக்கப்படுவது நாம் மாத்திரமல்ல, கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே அது அவதூறை உண்டாக்கும். ஆனால் நம்மிலுள்ள உண்மையையும் உத்தமத்தையும் அவர்கள் காணும்போது அது அவர்களுக்குள்ளும் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணும். அப்படிப்பட்டதான உத்தமத்தில் நடக்க, நிலைத்திருக்க வாஞ்சிப்போம். நம்மை காண்பவர்கள் நம்மில் வாழும் கிறிஸ்துவை காணட்டும். நம் நடை உடை பாவனை சொல் செயல் எல்லாம் கிறிஸ்துவையே பிரதிபலிக்கட்டும். அவரையே வெளிப்படுத்துவோம். அவரையே மகிமைப்படுத்துவோம். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக