.
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. - (நீதிமொழிகள் 3:27).
.
திடீரென்று ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதில் ஒரு பெண் அடித்து செல்லப்பட்டு தத்தளித்து கொண்டிருந்தாள். அதை அவ்வழியே வந்த துறவி ஒருவர் கவனித்தார். உடனே தாமதமின்றி ஆற்றில் குதித்து அப்பெண்ணை தூக்கி தோளில் போட்டு கொண்டு அக்கரைக்கு சென்று அவளை இறக்கி விட்டார். அப்பெண்ணும் தன்னை காப்பாற்றிய துறவிக்கு உள்ளத்திலிருந்து நன்றி கூறினாள். துறவியும் அவருடன் வந்த சீஷனும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். சற்று தொலைவு சென்ற பிறகு சீஷன் மெதுவாக, 'என்ன இருந்தாலும் நீங்கள் அந்த பெண்ணை தொட்டு தூக்கியிருக்க கூடாது' என்றான். அதற்கு துறவி 'எனது துறவறத்தை காட்டிலும் ஒரு உயிர் முக்கியமானதல்லவா? ஆகவே காப்பாற்றினேன், நான் அவளை எப்போதோ இறக்கி விட்டேன். ஆனால் நீயோ இன்னும் சுமந்து கொண்டே இருக்கிறாயே' என்று கூறினார்.
.
நாம் இந்த கதையில் வாசித்தபடி இரண்டு விதமான மக்களை இந்த உலகத்தில் பார்க்க முடியும். ஒன்று அந்த துறவியை போல உடன் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, அல்லது குற்றம் சாட்டுவார்கள் என்றோ பயப்படாமல் மற்றவர்களுக்கு, குறிப்பாக கட்டாயம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்கிறவர்கள். இரண்டாவது அந்த சீஷனை போல நாம் என்ன நல்ல காரியம் செய்தாலும் அதை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து நம்மை எப்பொழுதும் குறை சொல்லும் மக்கள் கூட்டம். இதை படிக்கிற நீங்கள் 'என்னுடைய நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது, ஆபத்தில் உள்ளவர்களுக்கும் தேவையோடும் உள்ளவர்களுக்கும் உதவி செய்ததால் தேவை இல்லாத குற்றச்சாட்டுகளும் நிந்தனைகளும் என்மேல எழும்புகிறது. எனவே இப்பொழுது எனக்கு நன்மை செய்ய ஆசையும் சக்தியும் இருந்தும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என பயந்து யாருக்கும் நான் உதவி செய்வதில்லை' என வாழ்வீர்களானால் இன்றைக்கே அந்த மனுஷ பயத்தில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உதவி செய்ததை தவறாக புரிந்து கொண்டு குற்றம் சாட்டுபவர்களையும் அந்த குற்றச்சாட்டையும் மறந்துவிட்டு அடுத்து ஆண்டவருக்காக என்ன செய்யமுடியுமோ அந்த வேலையில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். அப்பொழுதுதான் நீங்கள் தெளிந்த புத்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியும்.
.
ஒருமுறை அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணனிடம், ' நான் கர்த்தருக்காக செய்கிற காரியங்களை விமரிசித்து, என்னை மோசமாய் பேசுகிற ஆட்கள் இங்கு உண்டே, என்ன செய்வது' என்றபோது, அவர், 'நீ மற்றவர்கள் என்ன விமரிசிக்கிறார்கள் என்று கேட்டு, எதையும் செய்யாதே, மற்றவர்கள் கர்த்தருக்காக எதையும் செய்யாவிட்டால், நீ போய் அதை செய்' என்று கூறினார். நாம் 'ஐயோ இவர் இப்படி சொல்லிவிட்டாரே, இனிமேல் நான் எதையும் செய்ய மாட்டேன்' என்று மனம் உடைந்து உட்கார்ந்தால், அவ்வளவுதான், உங்கள் தரிசனமும், நீங்கள் கர்த்தருக்காக எழும்பி பிரகாசிப்பதும் அப்படியே முடிந்து போய்விடும். நாம் எதை செய்தாலும், அதை மோசமாய் பேசுகிற கூட்டம் எப்போதும் உண்டு. நமது ஆண்டவரும் மூன்றறை வருடங்கள் தம்மை தவறாக புரிந்து கொண்டவர்கள் மத்தியிலும், குற்றம் கண்டுபிடித்த மக்கள் மத்தியிலும்தான் ஊழியம் செய்தார். உதாரணமாக, ஒரு ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் சூம்பின கையையுடைய ஒரு மனிதனை இயேசு சுகமாக்க விரும்பி அந்த ஆலயத்தில் உள்ள மக்களிடம் 'ஓய்வுநாளில் நன்மை செய்வது சரிதானே?' என்று கேள்வி கேட்டார். ஆனால் அவர்கள் ஒரு மனிதன் சுகமாவதை விட அந்த மனிதனை ஓய்வுநாளில் இயேசு சுகமாக்கினதால் அவரை குற்றம் சாட்ட வேண்டும் என்ற மனநிலைமையில் இருந்ததால் அவருக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. இவர்கள் குற்றம் சாட்டுவார்கள் என்றும், தன்னை கொலை செய்ய ஆலோசனை பண்ணுவார்கள் என்றும் ஆண்டவர் இயேசு முன்னமே அறிந்திருந்தும் அவர்களுக்கு பயந்து அந்த மனிதனை சுகமாக்காமல் விடவில்லையே!
.
பிரியமானவர்களே, நாமும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை போல, நம்மை தவறாக புரிந்து கொள்ளுகிற, குறை சொல்லுகிற மனிதர்களுக்கு பயப்படாமல், நம்முடைய குறுகிய வாழ்நாளில் நம்மால் எந்த அளவுக்கு கர்த்தருக்காகவும், ஆபத்தில் உள்ளவர்களுக்காகவும், தேவையில் உள்ளவர்களுக்காகவும் உதவி செய்ய முடியுமோ அந்த அளவு செய்து, அவருக்கு சாட்சியாக வாழ்ந்து விடுவோமா? அதை காணும் கர்த்தர் உள்ளம் மகிழும். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக