புதன், 14 மே, 2014

பாடுகளை பொறுமையோடு சகித்தல்



நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். - (1 பேதுரு 2:20).

.
கர்த்தருக்கு பயந்த ஒரு சகோதரன் வேலை செய்யும் இடத்தில் அவருடன் வேலை செய்யும் சிலர் அவருக்கு மிகவும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அவருக்கு சேர வேண்டிய விடுமுறையை தடுத்தும், கிடைக்க வேண்டிய பங்குகளை கொடாமலும், அவர் மேல் குறைகளாக மேலிடத்திற்கு தெரிவித்தும் மிகவும் இடைஞ்சலாக இருந்து வந்தார்கள். அவர்களின் அநீதியான பொய் காரியங்கள் அவர்களிடமிருந்து மாறும்படியாக இந்த சகோதரன் கர்த்தரிடம் தினமும் மன்றாடியும் எந்த மாற்றமும் அவர்களிடம் ஏற்படவில்லை. ஒரு நாள் மிகவும் சோர்ந்து போய் ஆண்டவரிடம் ஜெபித்து, 'ஏன் ஆண்டவரே நான் எத்தனை நாட்களாக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், ஏன் அவர்களை மாற்ற மாட்டேன் என்கிறீர்' என்று மிகவும் சோர்வுடன் கேட்டார். அதற்கு ஆண்டவர், 'மகனே, நீ அவர்களை மாற்றும்படி மன்றாடிக் கொண்டிருக்கிறாய். ஆனால் நானோ உன்னை மாற்றுவதில் தீவிரமாயிருக்கிறேன்' என்றார். இதுபோன்ற சோதனைகளின் வழியாக தேவன் அவரை தாம் விரும்பும்படி தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து பெரிய சமாதானத்தை பெற்றார்.
.
சில நேரங்களில் மற்றவர்களின் மாறாத, தவறான மனநிலைகளின், அவர்கள் படுத்தும் பாடுகளின் வழியாக தேவன் தம்முடைய பிள்ளைகளை தமக்கேற்றபடி மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. சவுல் தாவீதின் மேல் எந்தக் காரணமும் இல்லாமல் எரிச்சல் கொண்டார். அவருடைய தேவையற்ற கோபம், பொறாமை, எரிச்சல், விரோதம் ஆகிய தவறான மனநிலைகளால் தாவீது பெரிதும் பாதிக்கப்பட்டார். தேவன் நினைத்திருந்தால் சவுலின் பொல்லாத மன இயல்புகளை மாற்றி தாவீதிற்கு உதவி செய்திருக்க முடியும்
.
ஆனால் தேவனுடைய பார்வை வித்தியாசமாயிருந்தது. சவுலின் கோபம், பொறாமை, விரோதம் ஆகிய நெருப்புகளை தாவீதைப் புடமிடுவதற்கு அவர் உபயோகித்துக் கொண்டார். சவுலை மாற்றுவதை விட தாவீதை தம்முடைய நோக்கத்திற்கும் திட்டத்திற்கும் ஏற்ப மாற்றி அவரை ஒரு சிறந்த இராஜாவாக பக்குவப்படுத்துவதே அவருடைய பிரதான நோக்கமாயிருந்தது.
.
மற்றவர்களின் அநீதியான எரிச்சல், கோபம், பொறாமை ஆகியவற்றை மாற்றுவதைவிட, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு பொறுமை, தாழ்மை, சாந்தம், சகிப்புத்தன்மை ஆகிய விசேஷித்த குணங்களை உடையவர்களாக மாற்றும்படியாகத்தான் தேவன் விரும்புகிறார்.
.
நம்முடைய ஜெபங்கள் மற்றவர்களின் பொல்லாத மன நிலைகளை மாற்றவில்லை என்றால், நாம் அவைகளை பொறுமையாய் சகிக்கவும், ஏற்கவும் தாங்கவும் தக்கதாக நம்மை தேவன் மாற்றிவிட ஒப்புக் கொடுக்க வேண்டும். அது ஒரு பெரிய சமாதானத்தை நமக்கு கொண்டு வரும்.
இந்த உண்மையை நாம் புரிந்துக் கொண்டால், நமக்கு விரோதமாக எத்தனைப் பேர் எத்தனைத்தான் பேசினாலும், காரியங்களை செய்தாலும் நாம் பொறுமையாக சகிக்க முடியும். அதன் பின் பெரிய ஆசீர்வாதத்தினால் தேவன் நம்மை நிறைக்க இருக்கிறார் என்று உணரும்போது, நாம் அனுபவிக்கிற பாடுகள் யாவும் ஒன்றுமில்லாதவைகளைப் போல ஆகும்.
.
ஒருவேளை நீங்கள் வேலை செய்யுமிடத்திலும் இதுப்போன்ற நிலைமைகளில் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறீர்களோ? 'நான் எத்தனையோ நாளாக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அவன் நன்றாகத்தான் இருக்கிறான். இன்னும் அதிகமாக எனக்கு விரோதமாக செயல் படுகிறான்' என்று சொல்கிறீர்களோ, அவன் மூலமாக தேவன் நமக்கு சகிப்புத்தன்மை, பொறுமை, தாழ்மை ஆகியவற்றை கற்றுக் கொடுத்து, நம்மை அவர் விரும்பும் பாத்திரமாக மாற்ற விரும்புகிறார் என்பதே உண்மை.
.
'நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்' என்ற வசனத்தின்படி பாடுகளை பொறுமையோடே சகித்து, தேவன் விரும்புகிற பாத்திரங்களாக மாறி, அவருக்கு பிரயோஜனமாயிருப்போமா? ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக