.
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். – (அப்போஸ்தலர் - 9:16).
.
சிலுவையை சுமக்காமல் கிரீடம் பெற விரும்புவதும், பாடுகள் இல்லாமல் பரலோகம் செல்ல விரும்புவதும் நமக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இன்றைய தியான செய்தியில் தேவன் அவருடைய ஆவிக்குரிய பயிற்சி களத்தில் எவ்வாறு நம்மை பக்குவப்படுத்தி மெருகேற்ற விரும்புகிறார் என்பதை பார்ப்போம்.
.
வட அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் 'கூழாங்கற்கடற்கரை' என்று அழைக்கபடும் ஒரு கடற்கரை பகுதி உள்ளது. இக்கடலின் நீண்ட அலைகள் கரையில் வந்து மோதும் போது கடற்கரையிலுள்ள கூழாங்கற்கள் ஒன்றோடொன்று மோதி ஒரு பெரிய ஓசையை உண்டாக்குகிறது. மேலும் அலைகளின் கையில் அகப்பட்ட கற்கள் கடினமான பாறைகளின் மேல் உருட்டியடிக்கப்பட்டும், ஒன்றோடொன்று உரசியும் பளபளப்பாக்கப்படுகின்றன. இவ்வழகிய கற்களைக் காணவும், அதன் ஓசையை கேட்கவும் உலகெங்குமுள்ள சுற்றுலா பயணிகள் அங்கு வருவதுண்டு. இக்கற்களை எடுத்துச்சென்று தங்கள் வீடுகளின் அலங்கார பொருட்களுடன் வைத்து அலங்கரிப்பர். இக்கடற்கரையிலிருந்து சற்றுத் தொலைவிலும் பாதுகாப்பான இடத்தில் அநேக கற்கள் காணப்படுகின்றன. இவைகளுக்கு கடல் அலைகளின் மோதலோ, உராய்வுகளோ இல்லாததால் அழகற்று காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இதை விரும்புவதில்லை.
.
கடற்கரையின் இரண்டாவது பகுதியில் காணப்பட்ட கூழாங்கற்களைப் போல இன்றைக்கு நாம் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம். பாடுகளும், கஷ்டங்களும் வேண்டாம் என்கிறோம். யாருடைய கேள்விக்கோ, நிர்பந்தத்திற்கோ உட்படாமல் யாரும் நம்மேல் அதிகாரம் செலுத்துவதையும் விரும்பாமல் சுயாதீனமாக இருக்க ஆசைப்படுகிறோம். சொல்லப்போனால் சுகமாக, பாதுகாப்பாக இருப்பதையே அதிகம் விரும்புகிறோம். அதோடு எல்லோரும் என்னை கனம் பண்ணவேண்டும், மேன்மையான ஸ்தானத்தில் நான் வைக்கப்பட வேண்டுமென்ற (நப்) ஆசையும் இருக்கிறது.
.
பரிசுத்த வேதாகமத்தில் தேவன் பயன்படுத்திய மனுஷர்கள் அனைவரும் இக்கூழாங்கற்களைப் போல மிகவும் அலசடிபட்டவர்கள் தான். எகிப்தின் பிரதான தலைவனாக உயர்த்தப்படும் முன்பு அவன் அனுபவித்தப் பாடுகளை வேதம் நமக்கு ஒரு சரித்திரமாகவே கூறியுள்ளது. அதுபோலவே அப். பவுலைக் குறித்து தேவன் கூறும்போது 'என் நாமத்திற்காக எவ்வளவாய் பாடுபடவேண்டும்' என குறிப்பிட்டு பேசினார். ஆம் இந்த செய்தியின் மூலம் தேவன் உங்களை மீண்டும் அழைக்கிறார்.
.
தேவ சித்தத்தை விட்டு வழி விலகி உலகத்தோடு சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களைத் தான் தேவன் அழைக்கிறார். குயவனாகிய என்னிடம் உன்னைக் கொடுத்தால் நான் உன்னை எனக்கேற்ற பாத்திரமாக வனைந்து உன்னை சிறந்திருக்கப்பண்ணுவேன் என்று தேவன் கூறுகிறார். இவ்வார்த்தைகளை நம்பி தேவனுக்காக பாடுபட ஆயத்தம் என ஒரு அடி நீங்கள் எடுத்துவைக்க முன்வந்தால், உங்களுக்கு உதவி செய்யும்படி தேவன் இரண்டு அடி முன்வருவது நிச்சயம். ஆமென்! அல்லேலுயா!(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக