புதன், 7 மே, 2014

மணவாளன் வருகிறார்

.......................மணவாளன் வருகிறார்.....................
.

திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். - (யாக்கோபு 1:22).

..
ஒரு அருமையான ஊழியர் பிரசங்கத்திற்கு அவர் ஜெபித்து கொண்டிருந்த போது, பிரசங்கத்திற்கு சற்று முன்பு தேவன் ஒரு தரிசனத்தை அவருக்கு காண்பித்தார். தன் திருமணத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தாள் ஒரு மணப்பெண். சபைமுன் மண மேடைக்கு வந்து மணமகனை கைப்பிடிக்க போகும் அந்த தருணத்திற்காக தன்னை  அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். முகத்திற்கு செய்ய வேண்டிய அலங்காரம், சிகைக்கு செய்ய வேண்டிய அலங்காரம், அணியப்பட வேண்டிய அணிகலன்கள், ஆடை, உதடுக்கு செய்ய வேண்டிய மெருகு என்று மணிக்கணக்காக அலங்காரம் செய்து கொண்டு தன்னையே கண்ணாடியில் பார்த்து பார்த்து ரசித்தவளாய் இருந்தாள். இங்கே மணவாளன் மேடையில் மணவாட்டியை சந்திக்கும்படி ஆவலாய் காத்து கொண்டிருக்கிறான். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று மணித்துளிகள் நகர்ந்து கொண்டே போனது. அந்தோ பரிதாபம்! மணப்பெண் வரவேயில்லை. மணப்பெண் தான் இருந்த இடத்திலே தன்னை அலங்கரித்து கொண்டேயிருந்தாளே ஒழிய மணவாளனை சந்திக்க புறப்படவேயில்லை.

.

இதேப்போலத்தான் இன்று ஒவவொரு கிறிஸ்தவர்களின் நிலையும், திருச்சபையின் நிலையும் உள்ளது. அநேக சத்தியங்களை தினந்தோறும் கேட்கிறோம். கேட்டு கேட்டு நம்மை சரிப்படுத்தி கொள்வது உண்மைதான். இருப்பினும்  நான் இன்னும் தகுதியடையவில்லை, தகுதியான பின் ஊழியம் செய்கிறேன் என்று நம்மில் நாமே கூறிகொண்டு உட்கார்ந்து விடுகிறோம்.

.

நம்மை நாம் அலங்கரித்து கொண்டிருப்பதிலேயே திருப்தியடைந்து விடாமல் செயல்படுகிறவர்களாய் மாறுவோம். உதாரணமாக, சமைப்பது எப்படி என்ற புத்தகத்தை ஆர்வமாய் படித்து படித்து அதை மூளை அறிவில் வைத்திருந்தால் சமைக்க கற்று கொள்ள முடியாது. படித்தவற்றை செயல்படுத்தி பார்த்தால்தான் பிரயோஜனம் உண்டாகும். நாம் செயல்படுகிறவர்களாய் மாறும்படி தேவன் நம்மை எதிர்ப்பார்க்கிறார்.

.

கர்த்தரின் வருகைக்கான அடையாளங்கள் அவர் வருகை மிகவும் சீக்கிரம் என்பதை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கின்றன. சுனாமி அடித்து ஓய்ந்த பின்பு ஜப்பானியரில் அநேகர் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டிருக்கின்றனர். மத்திய கிழக்கு பகுதிகளில் அனுதினமும் நடைபெறும் கலவரங்களும் போராட்டங்களும், சாவுகளும் கர்த்தரின் வருகையை தெரிவிக்கினறன அல்லவா? நாம் இன்னும் ஆயத்தமாகவில்லை என்று உட்கார்ந்து கொண்டிருந்தால், எப்போது மற்றவர்களை ஆயத்தப்படுத்த முடியும்? இன்னும் எத்தனையோ பேர் நீங்கள் இருக்கும் தெருவிலேயே கர்த்தரை குறித்து கேள்விப்படவில்லையே! 'எங்களுக்கு யாரும் கிறிஸ்துவை குறித்து கூறவில்லை, கூறியிருந்தால் நாங்களும் இரட்சிக்கப்பட்டிருப்போம்' என்று யாரும் உங்களை குறைகூறாதபடி, ஒரு நாளில் ஒருவருக்காவது சுவிசேஷம் சொல்வோமா?

.

பிரியமானவர்களே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கொஞ்ச காலத்தில் மணவாட்டியாகிய நாம் மணவாளனாகிய கிறிஸ்துவுக்காக எதையாவது செய்வோமா? மணவாளன் நம்மை கண்டு களிகூறும்படியாக, என் பிரியமே என் உத்தமியே என்று நம்மை புகழும்படியாக அவருக்காக எதையாவது நம்மால் இயன்றதை செய்வோமா? 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' - (வெளிப்படுத்தின விசேஷம் 22:12) என்ற இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம், ஆயத்தப்படுத்துவோம். மாரநாதா! ஆமென் அல்லேலூயா!    ( Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக