புதன், 30 ஏப்ரல், 2014

ஆவிக்குரிய மனிதன்

...............................ஆவிக்குரிய மனிதன்..........................
.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். - (1கொரிந்தியர்2:15).

.
பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் மூன்று வகையான மக்களைக் குறித்து எழுதுவதை 1கொரிந்தியர் 2:14 லிருந்து 3:3 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்த மூன்று வகை மக்களில் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று நம்மை நாமே ஆராய்ந்து அறிந்து நம்மை திருத்திக் கொள்ள முற்படுவோம்.
.
1. ஜென்மசுபாவமுள்ள மனிதன்: 'ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்' (1 கொரிந்தியர் 2:14). ஜென்மசுபாவமுள்ள மனிதன் உலகப்பிரகாரமான மனிதன். தேவனை ஆண்டவர் என்றும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளாதவன். தேவனைக் குறித்த காரியங்கள் அவனுக்கு பைத்தியமாக தோன்றும். அவைகளை அவனுக்கு சொன்னாலும், கிண்டலும் கேலியும் செய்து, அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டான். அவனே ஜென்மசுபாவமுள்ள மனிதன். இவன் பரலோகத்திற்கு செல்வது என்பது மிகவும் அரிது. 'இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' (யோவான் 14:6) என்று சொன்னதை அவன் ஏற்றுக் கொள்ளாததால் அவன் பிதாவினிடத்தில் செல்ல முடியாது.
.
2. மாம்சத்துக்குரிய மனிதன்: 'மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று' (1கொரிந்தியர் 3:1). இந்த வகையை சேர்ந்தவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள். ஆனால் மாம்சீகத்திற்குரியவர்கள், அல்லது கிறிஸ்துவுக்குள் குழந்தைகள். மறுபடியும் பிறந்தவர்கள், ஆனால் கிறிஸ்துவுக்குள் வளராமல் இன்னும் குழந்தைகளாகவே இருப்பவர்கள். ஒரு குழந்தை பிறந்து 18 வருடம் ஆகியும் குழந்தைத்தனமாகவே இருந்தால், அல்லது ஒரு வயது குழந்தைப் போலவே நடந்துக் கொண்டால் அதை பெற்ற பெற்றோருக்கு எத்தனை வேதனை? அப்படித்தான் நான் மறுபடியும் பிறந்தேன் என்று சொல்லியும், இன்னும் கிறிஸ்துவுக்குள் குழந்தையாகவே இருந்தால் நம் தேவனும் வேதனைப்படுவார்.
.
அவர்களுடைய குணாதிசயங்கள், 'பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?' (1 கொரிந்தியர் 3:3). பொறாமையும், வாக்குவாதமும், பேதகங்களும் நம்மிடத்தில் இருந்தால் நாம் இன்னும் மாம்சத்துக்குரியவர்களாகவே இருப்போம். கிறிஸ்தவர்களில் அநேகர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறோம். நம்மிடத்தில் கிறிஸ்துவில் பூரண வளர்ச்சிக் கிடையாது. நம்மோடுக் கூட இருக்கும் சகவிசுவாசிகளோடு, வாக்குவாதங்களையும், பேதகங்களையும் வைத்துக் கொண்டு, ஆலயத்திற்கு வந்து கர்த்தரை தொழுதுக் கொண்டு இருக்கிறோம்;. நம்மைக் கண்டு தேவன் மிகவும் வருத்தப்படுவார். எத்தனை வருடங்களாகியும், இன்னும் வளரவே இல்லையே என்று! நாம் இப்படி இருப்பதால் சக விசுவாசிகளுக்கும் வேதனை, போதகருக்கும் வேதனை! நம் இந்த நிலை மாறவேண்டும். நாம் மாம்சத்திற்குரியவர்களாக இல்லாமல் கர்த்தருக்குள் வளருவோமாக!
.
3. ஆவிக்குரிய மனிதன்: 'ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்' என்று வசனத்தில் பார்க்கிறோம். ஆம், ஆவிக்குரியவனுக்கு கள்ள போதகங்களைக் குறித்து தெரியும், அவற்றை கேட்டு விலகுவான். தேவனுக்கேற்ற வழிகளில் நடப்பான். கர்த்தருக்கு எதுப் பிரியம் என்று அறிந்து அதன்படி தன் வழிகளை சீர்ப்படுத்துவான். 'மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்,..' (எபேசியர் 4:11) என்ற வசனத்தின்படி, நாம் பூரணபுருஷர்களாக விளங்க வேண்டும் என்பதே தேவனுக்கு நம்மைக் குறித்த சித்தமாயிருக்கிறது. விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமனமாக சகவிசுவாசிகளோடு நாம் வளர்ந்து பூரண புருஷர்களாக நாம் கனிக் கொடுக்க வேண்டும். தேவனுடைய சாயலை ஒவ்வொரு நாளும் நாம் அணிந்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆவிக்குரிய மனிதனே இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் அவரோடுக்கூட எடுத்துக் கொள்ளப்படுவான்.
.
பிரியமானவர்களே, நாம் இதில் எந்த வகையில் இருக்கிறோம்? ஜென்மசுபாவமுள்ளவர்களாயிருந்தால் நாம் பரலோகம் செல்ல முடியாது. மாம்சத்துக்குரியவர்களாக இருந்தால், கிறிஸ்துவின் வருகையில் நாம் கைவிடப்படலாம், ஆனால் ஆவிக்குரியவர்களாக இருந்தால், தேவனால் பிறந்தவன் பாவஞ்செய்யான் என்ற வசனத்தின்படி நம்மை பரிசுத்தமாய்க் காத்துக் கொண்டு, அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தமாக முடியும். நம்மை நாமே ஆராய்ந்து, விட வேண்டியதை விட்டு, ஆவிக்குரியவர்களாக கர்த்தரோடு என்றென்றும் வாழ்கிறவர்களாக தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக