புதன், 16 ஏப்ரல், 2014

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது

..........................பரலோகத்தின் குடிமகன்..................

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். - (பிலிப்பியர்3:20).

.
ஒரு மனிதர் ஒரு கிராமப்புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் அவர் செல்லும் வழி தவறி விட்டது. யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தவராக ஒரு வீட்டின் கதவை தட்டினார். அங்கு இருந்த ஒரு மூதாட்டி கதவை திறந்தார்கள். என்ன என்று கேட்டபோது, வழி தவறிவிட்டதாகவும், வழி கேட்க வேண்டி கதவை தட்டியதாகவும் அந்த மனிதர் கூறினார்.
.
அப்போது அந்த வயதான அம்மா அவரை வீட்டிற்குள் அழைத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறினார். உள்ளே வந்த மனிதருக்கு ஆச்சரியம், அந்த வீட்டில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள், ஒரு பழைய கட்டில் வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட அவர், அந்த தாயாரிடம், 'என்னம்மா வீட்டில் ஒன்றுமே இல்லை?' என்றுக் கேட்டார்.
.
அதற்கு அந்த தாயார், 'உன்னுடைய பொருட்கள் எல்லாம் எங்கே' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், 'நான் எப்படி என் பொருட்களை நான் போகும் இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும்? நான் வழிபோக்கனாயிற்றே?' என்று கூறினார்.  அப்போது அந்த தாயார், 'நானும் அப்படித்தான்' என்றுக் கூறினார்கள்.
.
பிரியமானவர்களே, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, நாம் வழிப்போக்கர்களைப் போலதான் இங்கு வாழ வேண்டும், ஜீவிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய குடியிருப்பு இந்த உலகத்தில் அல்ல, பரலோகத்தில் இருக்கிறது.
.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள் (எபிரேயர் 11:13). அவர்கள் எத்தனையோ செல்வமிக்கவர்களும், செல்வ சீமான்களாயிருந்தும், அவர்கள் இந்த பூமியை தங்களுக்குத்தான்  என்றென்றும் என்று சொல்லவில்லை. அவர்கள் இந்த பூமியில் தங்களை அந்நியர்கள் என்றும், பரதேசிகள் என்றும் சொல்லி, இந்த பூமியைப் பாhக்கிலும் எல்லா விதத்திலும் அதிக மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள். சிலருக்கு பரதேசி என்று சொன்னால் கோபம் வரும். ஆனால் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களை பரதேசிகள் என்றுதான் சொல்லிக் கொண்டார்கள்.  அதைப்போலவே நாமும் இந்த உலகத்திற்குரிய காரியங்கள் யாவும் அழிந்து போகப்போகிறதை நினைவு கூர்ந்தவர்களாக பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடக்கடவோம்.
.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது என்பதற்கு அர்த்தம் நம்முடைய குடியுரிமை மற்றும் குடிமகன் எல்லாமே பரலோகம்தான். நாம் இந்தியாவின் குடிமகன் என்பதிலோ அமெரிக்காவின் குடிமகன் என்பதிலோ பெருமையடையலாம். ஆனால் பரலோகத்தின் குடிமகன் என்பது மற்ற எந்த நாட்டின் குடியுரிமையைக் காட்டிலும் சிறந்தது.
.
ஆகவே பரலோகத்தின் குடியுரிமை பெறவும், குடிமகனாக மாறுவதற்கும் நமக்கு தகுதி வேண்டும். எல்லாருமே அந்த தகுதியை பெற்று விட முடியாது. ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டுமானால், பாஸ்போர்ட், விசா போன்றவை எத்தனை முக்கியமோ அதைப் போல பரலோகம் செல்வதற்கும் நமக்கு தகுதி இருக்க வேண்டும். முதலாவது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும். கழுவப்படாவிட்டால் நமக்கு அந்த உரிமை என்றுமே கிடையாது.
.
அடுத்து, இந்த உலகத்தில் வாழும்போது நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும். பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை தரிசிக்க முடியாது என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. பரலோகம் செல்வதற்கு பரிசுத்தம் மிக அவசியம். தேவன் ஏதோ கண்களை மறைத்து நம்மை பரலோத்திற்கு விட்டுவிடுவார் என்பது நம்முடைய எண்ணமே தவிர, கர்த்தர் அசுத்தத்தை காணாத சுத்தக் கண்ணர். அவரிடம் எந்த அசுத்தமும் செல்லாது. மேலும் பல தகுதிகள் இருந்தாலும், இந்த இரண்டு தகுதிகளும் மிகவும் முக்கியமானது.
.
பிரியமானவர்களே, நாம் இந்த உலகத்தில் வாழ்வதே பரலோகம் போய் சேர வேண்டும் என்பதற்காகவே. ஆகவே கொடுக்கப்பட்டிருக்கிற நாட்களில் நாம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமாய் நம்மைக் காத்துக் கொள்வோம். அப்போது கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவோம். அவரோடு என்றென்றும் வாழுவோம். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக