புதன், 23 ஏப்ரல், 2014

ஆறுதல்களின் தேவன்

...........................ஆறுதல்களின் தேவன்.........................
.

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர் - (2 கொரிந்தியர். 1:3-4).

.

நெப்போலியன் ரஷிய நாட்டை கைப்பற்ற யுத்தம் நடத்தியபோது எப்படியோ தன் போர் வீரர்களிடமிருந்து தனித்து பிரிக்கப்பட்டார். அப்போது அவரை கண்ட எதிரி படைவீரர்கள் அவரை துரத்த ஆரம்பித்தனர். அவர் வேகமாய் ஓடி, குளிர்காலத்திற்கு இறகுகளால் செய்யப்பட்ட உடையை தயாரிக்கும் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த கடைக்காரரிடம், 'தயவுசெய்து எனக்கு உதவுங்கள், நான் எங்கே ஒளிவது என்று காட்டுங்கள்' என்று கெஞ்சினார். அந்த கடைக்காரரும், அவரை அங்கிருந்த இறகுகள் நிறைய இருந்த இடத்தில் அவரை பதுங்கி கொள்ள செய்து, அவரைச் சுற்றிலும் இறகுகளை தூவி, மறைத்து வைத்தார். சிறிது நேரத்தில் எதிரி படை வீரர்கள் அந்த கடைக்குள் நுழைந்து, எல்லாவற்றையும் நொறுக்கி உடைத்து தேடினார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் இருந்த இடம் தெரியவில்லை. அவர் இல்லை என்று நினைத்து அந்த இடத்தை கடந்து சென்றார்கள். அதற்குள் அவரை தேடி அவருடைய வீரர்களும் மற்றவர்களும் வந்து, அவரை கூட்டிக்கொண்டு சென்றனர். அப்படி கூட்டி செல்லும் போது, அந்த கடைக்காரர், 'வீர நெப்போலியனே, நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்பதற்கு மன்னிக்கவும், அந்த இறகுகளின் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்தபோது, அந்த எதிரி வீரர்கள் வந்து உங்களை தேடும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?' என்று கேட்டார். அப்போது நெப்போலியன், 'பேரரசனான என்னிடம் இந்த கேள்வியை கேட்க உனக்கு எப்படி துணிவு வந்தது' என்று கூறி, தன் படை வீரர்களிடம், 'இவனை பிடித்து கட்டுங்கள், இவன் கண்களை கட்டி, ஒரு இடத்தில் வைத்து, அவனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துங்கள். ஆனால் சுடுவதற்கு நானே கட்டளை கொடுப்பேன்' என்று கட்டளையிட்டான். அப்போது அந்த மனிதனின் கண்களை கட்டி, தூரத்தில் நிற்க வைத்து தங்கள் துப்பாக்கியை குறி வைக்க தொடங்கும்போது, நெப்போலியன், குறி வையுங்கள் என்று சொல்லும் சத்தம் கேட்டது. அந்த மனிதனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அடுத்த விநாடி அந்த மனிதனின் கண்களின் கட்டு அவிழ்த்து விடப்பட்டது. நெப்போலியன் தன் அருகில் நின்று தன் கண்களையே உற்று நோக்கி கொண்டிருந்ததை அந்த மனிதன் கண்டான். அப்போது நெப்பொலியன், 'இப்போது உனக்கு புரியும் என்ற நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு தன் குதிரையில் ஏறி பறந்து சென்றான்.

.

சில காரியங்கள் மற்றவர்கள் சொல்வதினால் நமக்கு புரியாது. அதன் வழியாக நாம் கடந்து செல்லும்போதே அதனுடைய வலியும் வேதனையும் புரியும். உதாரணத்திற்கு கேன்சர் வந்த ஒரு மனிதனோ அல்லது மனுஷியின் பக்கத்தில் இருந்து பார்த்தால்தான், அவர்கள் கடந்து செல்லும் வேதனையின் அளவு புரியும். தங்கள் உயிரானவர்களை இழக்க கொடுத்தவர்களுக்குத்தான் அதனுடைய வேதனை புரியும். தன் மகளோ, மகனோ கொடும் வியாதிக்குள் பாடுபடுவதை கண்ட பெற்றோருக்குத்தான் அந்த வேதனையுடைய ஆழம் புரியும். மற்றவர்கள் எனக்கு புரிகிறது என்று ஆறுதல் சொன்னாலும், அது வெறும் ஆறுதலுக்காக சொல்லும் வார்த்தையே தவிர உண்மையான வார்த்தை இல்லை.

.

ஒருவேளை நீங்கள் அந்த பாதையின் வழிகளில் சென்றிருப்பீர்களானால், அந்த பாதையில் செல்லும் மற்றவர்களுக்கு வழிகாட்ட தேவன் உங்களை பயன்படுத்த இடம் கொடுங்கள். நீங்கள் அந்த வழியே சென்ற படியால், உங்களுக்கு அந்த வேதனையின் கொடூரம் தெரியும். அப்படி செல்லும் மற்றவர்களை ஆற்றி தேற்ற கர்த்தர்தாமே உங்களை உபயோகிப்பாராக!

.

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். ஆமென்! நம் கர்த்தர் சகலவித ஆறுதல்களின் தேவன். அவர் நம் வேதனைகளை அறிந்திருக்கிறார். அவரே நம்மை ஆறுதல் படுத்த வல்லவராயிருக்கிறார். அவருடைய ஆறுதல்கள் நம்மை தேற்றுவதாக. அவர் அந்த பாதைகளின் நடுவே நடந்து சென்றபடியால் நம்மை தேற்ற எல்லாவிதத்திலும் போதுமானவராய் இருக்கிறார். 'உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்' (சங்கீதம் 84:5,6). ஒருவேளை அழுகையின் பள்ளத்தாக்கில் நீங்கள் நடந்து கொண்டிருக்கலாம். கர்த்தர் அருளும் ஆறுதல்கள் உங்களை தேற்றி, அந்த அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை அரும் நீருற்றாய் மாற்றி, உங்களை அரவணைத்து கொள்வதாக! அந்த பதையில் செல்லும் மற்றவர்களுக்கு ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி உங்களை மாற்றுவதாக! ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக