திங்கள், 14 ஏப்ரல், 2014

இடறல் உண்டாக்குகிறவன்

......................இடறல் உண்டாக்குகிறவன்......................

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். - (மாற்கு 9:42).

.
நாம் வழியில் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு கல் நமக்கு இடறல் உண்டாக்கினால், அல்லது, ஒரு கல் தடுக்கி நாம் கீழே விழுந்து போவோமானால், அந்த கல்லை நாம் எடுத்து, முத்தம் கொடுத்து கொண்டிருக்க மாட்டோம். அதை எடுத்து தூர எறிந்து விடுவோம். இந்த உலகத்திற்கு இடறலாக இருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு, பின் சங்கிலிகளால் கட்டப்பட்டு, கடலின் ஆழத்தில் எறிந்து போடப்பட்டதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். அவன் கொல்லப்பட்டப்பின் தான் கடலின் ஆழத்தில் போடப்பட்டான். ஆனால் கர்த்தர் இந்த இடத்தில் சொல்கிறார், உயிரோடு இருக்கும்போது தானே, இடறல் உண்டாக்குகிறவனை கழுத்தில் ஏந்திர கல்லை கட்டி கடலின் ஆழத்தில் தள்ளிவிட சொல்கிறார்.

.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் கர்த்தரோடு நாம் இணைய கூடாதபடி வரும் எந்தவித தடைகளையும் நாம் தூர எறிந்து விட்டு, தொடர்ந்து நாம் கர்த்தரோடு நடக்க வேண்டும்.

.

மேற்கண்ட வசனத்தில் இயேசுகிறிஸ்து சொல்கிறார், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்! என்று. இயேசுகிறிஸ்து சொன்ன கடினமான வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஏந்திர கல்லை அவனுடைய கழுத்தில் கட்டி, சமுத்திரத்தில் அவனை தள்ளி விடுங்கள், அவன் மேலே திரும்ப எழுந்து வரவே வேண்டாம். அப்படியே கடலின் அடியில் போய் விடட்டும் என்று சொல்கிறார்.

.

சிறியர் என்றால் யார்? சிறு குழந்தைகளோ? அவர்களும் உண்டு என்றாலும், ஆவிக்குரிய வாழ்வில் புதிதாய் பிறந்தவர்கள், விசுவாசத்தில் பெலவீனமானவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். இந்த நாட்களில் சிறு குழந்தைகளுக்கு தவறானதை போதித்து, அந்த எண்ணங்களிலேயே வளரும் குழந்தைகள் ஒருபுறம். மற்றொரு புறம் புதிதாய் கர்த்தரை ஏற்று கொள்கிறவர்களுக்கு விசுவாசிகளே, இடறலாய் இருப்பது மறுபுறம்!

.

விசுவாசிகள் எப்படி இடறலாய் இருக்கிறோம்? மற்றவர்களை நேரடியாக பாவம் செய்ய தூண்டிவிடுகிற விசுவாசிகளும் உண்டு. ஏவாள் தானும் பாவம் செய்து, தன் கணவரையும் பாவம் செய்ய வைத்தாள். ஆரோன் இஸ்ரவேல் மக்களை பொன்னையும் நகைகளையும் கொண்டு வர செய்து, அதை கொண்டு, ஒரு பொன் கன்றுகுட்டியை உருவாக்கி, அதை தொழ வைத்தான். இப்படி தாங்களும் பாவம் செய்து, மற்ற விசுவாசிகளையும் பாவம் செய்ய வைக்கிற விசுவாசிகள் அநேகர் இந்நாட்களில் சபைகளில் உண்டு. அவர்கள் சொல்வார்கள், இது சின்ன பாவம் தானே, கர்த்தர் கண்களை மூடிக்கொள்வார் என்று! இதை என்னோடு செய், யாரும் பார்க்க மாட்டார்கள் என்று திருட்டுத்தனமாய் பாவத்தை செய்ய வைக்கிறவர்களும், தூண்டுகிறவர்களும் சபைக்குள்ளும் அநேகர் உண்டு. இவர்கள் யாவரும் இடறல் உண்டாக்குகிறவர்களே!

.

மற்ற கூட்டம் உண்டு, அவர்கள் தாங்கள் உடுத்துகிற உடைகளினால், மற்றவர்களை இடறல் அடைய செய்கிறவர்கள். 'எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராதுளூ எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்' (1 கொரிந்தியர் 6:12) என்று பவுல் கூறியிருக்கிறபடி, எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரமும், வசதியும் இருந்தாலும், நாம் அதற்கு அடிமைப்படாமல், மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்குகிறவர்களாக இல்லாதபடி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும்.

.

மற்றவர்கள், தங்களுடைய மோசமான வார்த்தைகளினால், மற்றவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை பேசி, அல்லது மற்றவர்களை புண்படுத்தும் செய்கைகளை செய்து, அதனால் மற்றவரின் இருதயம் புண்படுத்தப்பட்டு அவர்களை இடறல் அடைய செய்கிறவர்கள்.

.

சிலர் தங்களுடைய அகங்காரமான, பெருமையான வார்த்தைகளினால் மற்றவர்களை இடறல் அடைய செய்கிறவர்களும் உண்டு.

.

துர்உபதேசங்களினால் மற்றவர்களை இடறல் அடைய செய்து, கர்த்தரிடமிருந்து அவர்களை பிரித்து விடுகிற விசுவாசிகளின் கூட்டமும் உண்டு.

.

நாம் புதிதாய் வருகிற விசுவாசிகளுக்கோ, விசுவாசத்தில் பெலவீனமானவர்களோ பாவமோ, தவறோ செய்யும்போது, அவர்களுக்கு அது தவறு என்று கூறாமல் போனாலோ, அவர்களை சரியான வழிக்கு கொண்டு வராமல் போனாலோ கூட நாம் அவர்கள் கர்த்தருக்குள் வளருவதற்கு தடை செய்கிறவர்களாக காணப்படுவோம்.

.

நம்மில் யாராவது இந்த கூட்டத்தில் ஒருவராக இருக்கிறோமா? விசுவாசத்தில் பெலவீனமானவர்களையோ, புதிதாய் கர்த்தரை ஏற்று வருகிறவர்களையோ நம்முடைய காரியங்கள் எதுவாகிலும் இடறலாய் இருக்கிறதோ? நம்மையே ஆராய்ந்து பார்ப்போம். 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்' என்று இயேசுகிறிஸ்து நம்மை பார்த்து கூறாதபடி எந்தவிதத்திலும் நாம் மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்காதபடி, நம்மை காத்து கொள்வோம். நம் செய்கைகள் எல்லாவற்றிலும் கர்த்தரை பிரதிபலிப்போம். நம்மை கண்டு மற்றவர்கள் கர்த்தரை பற்றி கொள்ளத்தக்கதாக நம் வாழ்வு காணப்படட்டும். ஆமென் அல்லேலூயா! ( Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக