திங்கள், 7 ஏப்ரல், 2014

மனம் சோர்ந்துப் போகாதீர்கள்

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – ஏசாயா. 40:31.
ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வியா? மனம் சோர்ந்துப் போகாதீர்கள். என்ன வாழ்க்கை என்று கசந்துக் கொள்ளாதிருங்கள். விடா முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்று இப்போது புகழ் பெற்று விளங்குகிறவர்கள் யாருக்கும் வெற்றி உடனே வந்து விடவில்லை, அவர்களுடைய விடா முயற்சியும், கர்த்தர் மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையுமே அவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். ஏசாயா 40:31 என்று வசனம் கூறுகிறது. கர்த்தர் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். நாம் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போமானால், தோல்வியைக் கண்டு துவள மாட்டோம். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று சங்கீதம் 37:5 -ல் வாசிக்கிறோம். நமது தேவன் யெகோவா நிசி, நம் ஜெயக் கொடியானவர். நமக்கு ஜெயத்தை தராமல் யாருக்கு ஜெயத்தை தரப் போகிறார்? கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கும்போது நாம் தோல்வியைக் கண்டு கலங்கத் தேவையில்லை. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் ரோமர் 8:28. ஆகையால் மனம் கலங்காதீர்கள். அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது. யெகோவாநிசியையே நோக்கிப் பார்ப்போம் வெற்றி நமக்குத்தான். அல்லேலூயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக