செவ்வாய், 8 ஏப்ரல், 2014

விளையும் பயிர்

.....................................விளையும் பயிர்..........................

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். - (நீதிமொழிகள் 22:6).

.

ஒருநம் ஆண்டவர் சிறுபிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறவர். உலகத்தார் சிறுபிள்ளைதானே என அற்பமாய் எண்ணினாலும், நமது ஆண்டவர் பெருந்திரள் கூட்டத்திற்கு முன்பாக ஒரு சிறு பிள்ளையை தூக்கி, நீங்கள் மனம் திரும்பி சிறுப் பிள்ளையைப் போலாகாவிட்டால் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று அவர்களை பெரியவர்களுக்கு முன்மாதிரியாய் நிறுத்தினார்.

.
சிறுபிள்ளைகளின் இருதயம் கள்ளம் கபடற்றது, வைராக்கியம் பாராட்ட தெரியாதது, பிறருடைய தவறுகளை மனதில் வைத்துக் கொண்டு, அவர்களை குறையாய் மதிப்பிடாது. நாம் சொல்லிக் கொடுப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளும். ஒருவன் தனது பதினைந்து வயதிற்குள் கர்த்தரை ஏற்றுக் கொள்வதற்கும், அறுபது வயதில் ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசமுண்டு. சிறுவயதில் இயேசுவின் கரத்தை பிடித்து நடக்கக் கற்றுக் கொண்டவன் வாலிப வயதில் கெட்ட பழக்கங்களில் சிக்காமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறான். பாவ உலகில் வாழ்ந்தாலும், பரிசுத்தமே அவன் வாழ்வின் வாஞ்சையாயிருக்கும். பெற்றோரும் வாலிப வயதில் அவர்களின் போக்கை எண்ணி அழுது புலம்ப அவசியமிராது. ஆகவே சிறுபிள்ளைகளாய் இருக்கும்போதே நல்ல நிலமாகிய அவர்களுடைய இருதயத்தில் கர்த்தருக்கு பயப்படும் பயத்தையும், வேத வசனத்தையும் விதைத்து விட வேண்டும்.
.
நம் பிள்ளைகளுக்கு மூன்று வயது ஆகிறதோ இல்லையோ அதற்குள் பிள்ளயில் சேர்த்து விடுகிறோம். அது கத்தி கதறினாலும் விடுகிறோமா? இல்லையே! ஆனால் இதே தீவிரத்தோடு நமது பிள்ளைகளை ஞாயிறு பள்ளிக்கு அனுப்புகிறோமா? அழுகிறான் என்று எளிதாக பதில் கூறிவிடுகிறோம். பள்ளிக்கு போகும் நம் பிள்ளைக்கு வீட்டுப் பாடங்களை அன்றாடம் சொல்லிக் கொடுக்க எத்தனை பிரயாசப்படுகிறோம்? ஆனால் தினமும் வேதத்தை எழுத்துக் கூட்டி வாசிக்க பிள்ளையை உற்சாகப்படுத்துகிறோமா? அவனுக்கு அருகில் பொறுமையாய் உடகார்ந்து வேதத்தை வாசிக்க உதவுகிறோமா? சிந்திப்போம்.
.
இன்னும் சில வீடுகளில் நான் கண்டது, குடும்ப ஜெபத்தை பிள்ளைகள் இல்லாமல் செய்வது. கணவனும் மனைவியும் மாத்திரம் அமர்ந்து ஜெபித்து படுக்க செல்வார்கள். ஏனெனில் பிள்ளைகள் சாப்பிட்டவுடன் உண்ட மயக்கம், படுக்க சென்று விடுவார்கள். ஆகவே பிள்ளைகள் இல்லாமலேயே குடும்ப ஜெபம் நடக்கும். பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறாகும். இப்படி வளரும் பிள்ளைகள் நாளை பெரியவர்களாகும்போது, குடும்ப ஜெபத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தை அறியாமலேயே ஜெபத்திற்கு முக்கியத்துவத்தை கொடுக்காமலேயே போய் விடுவார்கள். நிச்சயம் பிள்ளைகளையும் சேர்த்து வைத்து ஜெபிக்க வேண்டும்.
.
பிரியமானவர்களே, விளையும் பயிராய் நிற்கும் நம் பிள்ளைகளை இப்போதே வளைத்து நிமிர்த்து நல்வழிப்படுத்தி விடுவோமாக. மரமாகி விட்டால் அவர்களை சரிப்படுத்துவது கடினமாகி விடும். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாமற் போய் விடும். ஆகவே சிறுபிள்ளையிலிருந்தே அவர்களை வேத வசனப்பிலும், ஜெபிப்பதிலும் கற்றுக் கொடுத்து பழக்க வேண்டும்.
.
வேத வசனங்களை மனப்பாடம் செய்யச் சொல்லி பழக்க வேண்டும். வேதத்தின் புத்தக அட்டவணையை மனப்பாடம் செய்ய சொல்ல வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அதை செய்ய சொல்லலாம். சிறுவயதிலேயே கர்த்தரை பற்றிக் கொள்ள பழகி விட்டால், வாலிப வயதில் கெட்ட வழக்கங்களில் அவர்கள் சிக்கி விடாமல் தங்களை பரிசுத்தமாய் வேத வாக்கியங்களின்படி காத்துக் கொள்வார்கள்.
.
ஆம், நம் பிள்ளைகளை சபைக்கும், சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் பிரயோஜனமாக வளர்ப்போம். கர்த்தர் நாமம் அவர்களால் மகிமைப்படும்படி அவர்கள் வளரட்டும். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகளாக அவர்கள் இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக