திங்கள், 21 ஏப்ரல், 2014

பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம்

பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம் 
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். - (பிரசங்கி 3:11-12).

ஒரு தகப்பன் தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர் அவர்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது என்று மிகவும் கடினமாக உழைத்தார். வேலை செய்து முடித்து விட்டு, சாயங்கால வேளைகளில் படிக்க ஆரம்பித்தார். இப்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் விடாது படிக்க ஆரம்பித்தார். அவரது குடும்பம் அவரிடம், 'நீங்கள் எங்களோடு சரியாக நேரம் செலவழிப்பதில்லை' என்று முறையிட்டபோது, 'நான் எதற்கு இவற்றை எல்லாம் செய்கிறேன், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே' என்று தேற்றுவார். தன் குடும்பத்தோடு இருப்பதை வாஞ்சிப்பார், ஆனால் படிப்பினிமித்தம் முடியாமல் போய்விடும்.
.
படித்த பாடங்களில் பரிட்சை எழுதி அதில் நல்ல மதிப்பெண்களோடு அவர் வெற்றி பெற்றார். மிகுந்த சந்தோஷத்தோடு வீடு வந்தார். 'பாருங்கள் நான் பட்ட பாட்டிற்கு கிடைத்த பரிசை!' என்று கூறினார். அவருடைய வேலை இடத்தில் அவருக்கு வேலை உயர்வு கிடைத்தது. நல்ல சம்பளமும் கிடைத்தது. குடும்பத்திற்கு இன்னும் வசதிகளை செய்து கொடுத்தார். பிள்ளைகளுக்கு நல்ல உடையும், உணவும் அவர்களுடைய தேவைகளும் சந்திக்கப்பட்டன.
.
இதோடு முடிந்தபாடில்லை, எப்படியாவது மேனேஜர் பதவி வேண்டும் என்று அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அதற்காக திரும்பவும் வீட்டிலிருந்தே படிக்கும்படியாக ஓபன் யூனிவர்சிட்டியில் சேர்ந்தார். பிள்ளைகள் மீண்டும் தங்கள் தகப்பனிடம் முறையிட்டனர், 'நீங்கள் எங்களோடு இருக்கும் நேரம் மிகவும் குறைவு' என்று. அப்போதும் அவர் சொன்னார், 'நான் படும் கஷ்டங்கள் யாருக்காக? உங்களுக்காகத்தானே, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!' என்று கூறினார். அவர் பட்டபாடுகளுக்கு பலனாக அவருக்கு மேனேஜர் பதவியும் கிடைத்தது. வீட்டிற்கு ஒரு வேலைக்காரியும் வைத்து மனைவிக்கு உதவி செய்தார்.
.
மீண்டும் இரவும் பகலும் உழைத்து, ஒரு பெரிய பங்களாவை மிகவும் பிரபலமான இடத்தில் நகரத்தில் வாங்கினார். கடைசியாக சொன்னார், 'இனிமேல் நான் எதுவும் படிக்க போவதில்லை, கடினமாக உழைக்க போவதில்லை, வருகிற சமபளத்தில் நாம் சந்தோஷமாக இருக்க போகிறோம், இனிமேல் நான் உங்களோடு அதிகமான நேரத்தை செலவிட போகிறேன்' என்று கூறினார். மனைவியும் பிள்ளைகளும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அடுத்த நாள் காலை அவர் எழுந்திரிக்கவில்லை, போய் எழுப்பி விட்டபோது, அவர் உயிரோடு இல்லை!
.
பிரியமானவர்களே, 'பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை' (பிரசங்கி 5:10) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு திருப்தி உண்டாவதே இல்லை. இன்னும் இருந்தால் நலமாக இருக்குமே என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய, போதும்  என்று ஒருபோதும் நினைப்பதில்லை. நமக்கு இருக்க ஒரு வீடு நிச்சயமாக வேண்டும். அதற்காக நாம் கண்டிப்பாக உழைக்கத்தான் வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு நமது நேரத்தை கொடுக்காதபடி, எப்பொழுதும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று அதற்காக நமது பிரயாசத்தை எல்லாம் செலுத்தி, நமது உடல் நிலையை கெடுத்து கொள்வது கூடாது. அந்த தகப்பன் எப்பொழுது பார்த்தாலும் உழைத்து, உழைத்து தன் உடல் நிலையை கூட கவனிக்காது, பின்னர் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் அவற்றை அனுபவியாமற் போனது எத்தனை பரிதாபமான காரியம்!
.
நாம் எத்தனை தான் சம்பாதித்தாலும், நாம் அவற்றை அனுபவிக்கவும் வேண்டும். தகாதவிதமாக அல்ல, நல்ல உணவை உண்டு, நல்ல உடை உடுத்தி, தேவன் கொடுத்த சம்பாத்தியத்தை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு குடும்பம், வெளிநாட்டில் தாங்கள் இருக்கிற வீட்டை தங்கள் குடும்பம் (கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள்) மற்றும் மூன்று பேருக்கு வாடகை கொடுத்து, (இரண்டு அறைகள் கொண்ட வீடு) வாழ்ந்து வந்தார்கள். சிலர் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை அப்படியே நாட்டிற்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டில் சரியாக உண்ணாமலும், தங்களை கவனித்து கொள்ளாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன் என்ற வசனத்தின்படி, கர்த்தர் நமக்கு கொடுத்த வருமானத்தை ஏற்றபடி செலவு செய்யும் போது, அந்த வேலையை நமக்கு கொடுத்த தேவனும் மகிழ்வார், நாமும் சந்தோஷமாய் இருக்க முடியும். அதை நாம் தகாதவிதமாக பயன்படுத்தினால், வயிற்றை கட்டி, வாயை கட்டி பணம் எப்படியாவது சேர்ந்தால் போதும் என்று நினைத்தால், நமக்கு தேவன் கொடுத்த வேலைக்காக அவரே வேதனைப்படுவார், இந்த மனிதனுக்கு போய் இந்த நல்ல வேலையை கொடுத்தேனே என்று!  'இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம் (பிரசங்கி 5:18-19). ஆகவே அந்த அநுக்கிரகத்தை நாம் நல்லவிதமாக பயன்படுத்த தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

Anudhina Manna, A Free Daily Devotional

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக