திங்கள், 7 ஏப்ரல், 2014

வாசலண்டை நின்று கதவை தட்டும் நேசர்

................வாசலண்டை நின்று கதவை தட்டும் நேசர்.....................

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். - (வெளிப்படுத்தின விசேஷம் 3:20).

.
சபை போதகர் ஒருவர் தன் சபையிலுள்ள ஒரு ஏழை விதவை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்தார். வாடகை முழு பாக்கிக்கும் போதுமான பணத்தை அன்பளிப்பாக எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்குச் சென்றார். அவள் வீட்டை பல முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. அதிக நேரமாய் நின்று கதவை தட்டிய போதகர் பதில் வராததால் சென்று விட்டார். சில நாட்கள் கழித்து, அந்த ஏழை விதவையை தெருவில் பார்த்தார். 'சகோதரி உங்கள் வாடகைக்கு போதுமான பணத்தை அன்பளிப்பாக நான் உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தேன். ஆனால் உங்கள் வீட்டுக் கதவை தட்டியும் ஒருவரும் திறக்கவில்லை' என்று கூறினார். அதற்கு அந்த சகோதரி, 'அப்படியா, நீங்கள் வீட்டிற்கு வந்த சமயத்தில் நான் வீட்டிற்குள்தான் இருந்தேன். வீட்டு சொந்தக்காரர்தான் வாடகை பாக்கியை வாங்க வந்து விட்டாரோ என்று பயந்து கதவை திறக்காமல் இருந்து விட்டேன்' என்று கூறினாள்.

.
இதைப் போலதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மைத்தேடி வந்தபோது எதையும் நம்மிடத்தில் கேட்காமல், தம்மை கொடுப்பதற்கே வந்தார். தம்மிடமுள்ள யாவற்றையும் நமக்கு பகிர்தளித்திடவே ஆண்டவர் விரும்புகிறார். ஆனால் நமக்கு ஒரு பயம் உண்டு, 'என்னையே நான் ஆண்டவருக்கு முழுவதும் அர்ப்பணித்து விடடால் அவ்வளவுதான், ஆண்டவர் என்னிடத்தில் எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார், மகிழ்ச்சி என்பதே எனக்கு இருக்காது' என தவறாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை அதை வெளிப்படையாய் சொல்லாவிட்டாலும், நமக்குள் அப்படியொரு பயம் இருக்கிறது, ஆகவேதான் நம்மை முழுமையாக எந்த நிபந்தனையுமின்றி தேவனிடம் அர்ப்பணிக்க நம்மால் முடியவில்லை.
.
அன்று ஆபிரகாமிடம், 'உன் புத்திரனும், உன் ஏக சுதனும் உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை தகனபலியாக ஒப்புக் கொடு' என்று தேவன் கூறியதுக்கூட ஈசாக்கை எடுத்துக் கொள் அல்ல, ஆபிரகாமின் விசுவாத்தை சோதித்து, மீண்டும் ஈசாக்கை கொடுக்கவே! உண்மை என்னவென்றால் பிசாசதான் நம்மிடம் உள்ள அனைத்தையும் திருடிக்கொள்ள வரும் திருடன். ஆனால் நம் தேவனோ தம்மையே நமக்காக தந்தவர். அவரை முழுவதுமாக நம்பி, நம் வாழ்வை அவருக்கு அப்படியே ஒப்புக் கொடுப்போம்.
.
நமது நம்பிக்கைக்கு பாத்திரர் அவர் ஒருவர்தான் நான் இழக்க வேண்டியதிருக்குமோ என பயந்து நிற்க தேவை இல்லை. அவர் வானாதி வானங்களையும், அண்ட சராசரங்களையும் படைத்தவர். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்கு பிரியம். அசவே தேவன் தரும் நன்மையை பெற முடியாதபடி நம் வாழ்வை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டாம்.

.
இன்னும் அவர் உங்கள் இதயக்கதவை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்றால், தயங்காமல் திறவுங்கள். அவர் உங்களுடையதொன்றையும் கேட்கமாட்டார். ஆனால் உலகம் தரக்கூடாத சந்தோஷத்தையும் அவருடைய சமாதானத்தையும் உங்களுக்கு தருவார். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3578-20th-january-2014-&Itemid=56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக