புதன், 23 ஏப்ரல், 2014

குருடாயிருக்கும் மனக்கண்கள்

....................குருடாயிருக்கும் மனக்கண்கள்.....................
.
மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். - (யோவான் 16:2-3).
தீவிரவாத சக்திகளுக்கு, மனித உயிரின் அருமையை அறியாதபடி அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறபடியால், அருமையான உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு முன்பே இயேசுகிறிஸ்து இவர்களைப் பற்றி 'மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்' என்று சொல்லி விட்டார். கொலை செய்கிறவர்கள் கிறிஸ்துவையும், பிதாவையும் அறியாபடியினால் இப்படி செய்வார்கள் என்று காரணத்தையும் அவரே சொல்லி விட்டார்.
.
காலாகாலமாய் நாம் இதுப் போன்ற தீயசக்திகள் சாதாரண மக்களை கொல்வதுப் போன்ற செய்திகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது இதுப் போன்ற செய்திகள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கின்றன. இயேசுக்கிறிஸ்து கடைசிக் கால நிகழ்ச்சிகளைக் குறித்து தீர்க்கதரிசனமாக கூறும்போது, 'ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; .. உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்' (மத்தேயு 24:7,9) என்றுக் கூறினார். அதன்படி இந்த நாட்களில் நடந்து வருகிறது.
.
இதற்கு விசுவாசிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது நாம் ஜெபிக்க வேண்டும். தீவிரவாதிகளின், மதவாதிகளின் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். 'தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்' (2கொரிந்தியர் 4:4). இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் குருடாக்கியருக்கிற இவர்களின் மனக்கண்களை கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கும்படியாக இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பார்வையற்ற மனிதனால் இயற்கை காட்சிகளையோ, நிறங்களையோ, அழகையோ இரசிக்க முடியாது. எல்லாமே இருளாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனம் குருடாகியிருக்கிற இந்த மனிதர்களுக்கு மனிதனின் ஆத்துமாவின் அருமையோ, உயிரின் விலையே தெரியாது. ஆனால் அவர்களின் மனக் கண்கள் திறக்கப்படும்போது, அவர்கள் அதன் அருமையை அறிந்துக் கொள்வார்கள். ஆகவே அவர்களின் மனக்கண்கள் கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியைக் காண வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
இரண்டாவது, சுவிசேஷம் அவர்களை சென்றடையும்படியாக வாசல்கள் திறக்கப்படும்படியாகவும், அவர்களை நற்செய்தி சென்றடையும்படியாகவும் ஜெபிக்க வேண்டும். 'அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?' (ரோமர் 10:14). ஆகவே அவர்கள் சுவிசேஷத்தை கேள்விப்படும்படியாக வாசல்கள் திறக்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் சத்தியத்தை கேள்விப்பட்டு, அவரை விசுவாசிக்கத்தக்கதாக ஜெபிக்க வேண்டும்.
.
மூன்றாவதாக, நாம் நம் சாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். நாம் பாவத்தின் மேல் பாவம் செய்துக் கொண்டு, கிறிஸ்துவை பிரசங்கித்தால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துக் கொண்டோ, மற்றவர்கள் கேட்கும் சாதாரண உதவிக்கூட செய்யாமல், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சொன்னால் அவர்கள் விசுவாசிப்பார்களா? நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மாதிரியாக வாழ்ந்தால் நம்மைக் காண்பவர்கள் நம்மில் வாழும் கிறிஸ்துவைக் காண்பார்களல்லவா? இருளில் வாழும் அவர்களுக்கு வெளிச்சமாக நம் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். 'இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16).
.
பிரியமானவர்களே, இவற்றை நாம் உண்மையாக செய்வோமானால் தீவிரவாத சக்திகள் செயலற்றுப் போகும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி செய்பவர்களாக நம்மை மாற்றுவோம். கர்த்தர் மற்றவற்றை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக