திங்கள், 7 ஏப்ரல், 2014

தேவனுடைய வழி

.............................. தேவனுடைய வழி........................

நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். - (ஏசாயா43:19).

உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்' (உபாகமம்2:7). இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலே நடந்து வரும்போது அவர்களுக்கு வழியை காண்பித்து, பகலிலே மேகஸ்தம்பமாகவும், இரவிலே அக்கினிஸ்தம்பமாகவும் வழிநடத்தின தேவன், அவர்களோடே இருந்தார். அவர் அவர்களோடு இருந்ததினால் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாமல், அவர்களுடைய தேவைகளை அதிசயமாக சந்தித்தார்.
.
பிரியமானவர்களே, ஒருவேளை 2013 ஆம் ஆண்டு வனாந்தரமாய் உங்களுக்கு காணப்பட்டதோ? எந்த பக்கம் செல்வது என்று தெரியாதபடி திகைத்துப் போய் இருந்தீர்களோ? என்னுடைய எதிர்காலம் என்ன என்று தெரியாதபடி கலங்கி இருக்கிறீர்களோ? கர்த்தர் சொல்லுகிறார் 'நான் வனாந்தரத்திலே வழியை உண்டாக்குவேன்' என்று. நாற்பது வருடங்கள் ஆறு இலட்சம் இஸ்ரவேலரையும், அவர்களுடைய குடும்பங்களையும் அதிசயமாய் வனாந்தரத்திலே வழிநடத்தியவர் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நம்முடைய வாழ்க்கை வனாந்தரமாயிருந்தாலும், நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் இருந்தால், நாம் நடந்து வரும் வழியை அவர் நிச்சயமாய் அறிவார். அந்த வனாந்தர வாழ்க்கையிலும் கர்த்தர் நம்மோடே இருந்தால் நாம் எதிலும் குறைவுப்பட மாட்டோம். எல்லாவற்றிலும் திருப்தியாக நம்மை தேவன் வழிநடத்துவார்.
.
சாராள் ஆபிரகாமிடம் 'அடிமைப்பெண்ணாகிய ஆகாரையும், அவளுடைய பிள்ளையையும் புறம்பே தள்ளும்' என்று சொன்னபோது, ஆபிரகாம் அப்படியே ஆகாருக்கு அப்பத்தையும், ஒரு துருத்தி தண்ணீரையும் கொடுத்து அனுப்பி விட்டார். ஆகார் தன் பிள்ளையோடே வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள் (ஆதியாகமம் 21:10-14). அவள் கொண்டு வந்திருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, குடிக்க தண்ணீர் இல்லாமற்போனபோது, நான் என் மகன் சாவதை காணமாட்டேன் என்று சொல்லி, அம்பு பாயும் தூரத்தில் அமர்ந்து சத்தமிட்டு அழுதாள். பிள்ளையின் தாய் அழுதபோது, 'தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்' (17ம் வசனம்). தேவன் அவளுடைய கண்களை திறந்தபோது, அங்கு தண்ணீர் துரவைக் கண்டாள்.
.
ஆம் நம் தேவன் வனாந்தமான அவாந்தர வெளியிலே ஆறுகளை உண்டாக்குகிறவர். அல்லேலூயா! பிரியமானவர்களே, ஒருவேளை உங்கள் மகனுடைய மகளுடைய நிலைமையைக் குறித்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? தாய் அழுதபோது, தேவன் பிள்ளையின் சத்தத்தை கேட்டதுப்போல இந்த புதிய வருடத்திலும், பெற்றோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக விடும் கண்ணீரை அவர் காண்கிறார். அவர்களின் எதிர்காலத்தை ஆசீர்வதிப்பார். பிரகாசமான எதிர்காலத்தை தருவார்.

.
இந்த வருடத்தில் இதுவரை வனாந்திரமாக அவாந்தர வெளியாக இருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், கர்த்தர் வழியையும், ஆறுகளையும் நிச்சயமாகவே உண்டாக்குவார். ஆனால் நாம் அவரிடம் உண்மையான இருதயத்தோடு கேட்கும்போது, தம் மகிமை விளங்கும்படியாக தேவன் இந்த பெரிய காரியங்களை நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் செய்வார்.
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3534-02nd-january-2014-&Itemid=56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக