புதன், 30 ஏப்ரல், 2014

நான்கு பேரின் விசுவாசம்

.........................நான்கு பேரின் விசுவாசம்...............................
.

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். - (மாற்கு 2:5).

.

இயேசுகிறிஸ்து கப்பர்நகூம் என்று சொல்லப்படும் தம்முடைய பட்டணத்திற்கு வந்து, ஒரு வீட்டில் இருந்து ஜனங்களுக்கு போதிக்க ஆரம்பித்தார். அங்கு நிற்க இடமில்லாதபடி அநேகர் கூடி வந்திருந்தார்கள். அங்கு ஜனம் நிற்கவே இடம் இல்லாமல் இருக்கும்போது, நான்கு பேர் ஒரு திமிர்வாதக்காரனை ஒரு கட்டிலில் கிடத்தி, எப்படியாவது இயேசுகிறிஸ்துவிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள்.

.

திமிர்வாதக்காரன் என்றால் படுக்கை கிடப்பானவன். அவனுக்கு தன்னால் எழுந்து எதுவும் செய்ய முடியாது. யாராவது உதவி செய்துதான் அவன் சாப்பிடவே முடியும். கைகளும், கால்களும் மடங்கப்பட்டு, கண்கள் மட்டும் திறந்து பார்த்து, கொண்டு இருப்பவனாகவே இருந்திருக்க முடியும்.

.

அந்த இரண்டு கால்கள் எழுந்து நடக்க வேண்டும் என்று எட்டுக் கால்கள் அவனை சுமந்துக் கொண்டு இயேசுவிடம் கொண்டு வந்தன. அங்கு கொண்டு வந்துப் பார்த்தால் அந்த வீட்டின் முன் ஒரே கூட்டம்! அவர்கள் நிச்சயமாக அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டிருக்க வேண்டும், 'கொஞ்சம் வழிகொடுங்கள், நாங்கள் இந்த மனிதனை இயேசுவிடம் கொண்டு செல்ல வேண்டும்' என்று. ஆனால் ஒருவருக்கும் விருப்பமில்லை, 'நாங்களே எப்போது அவர் எங்களுக்கு உதவி செய்வார் என்று காத்துக் கொண்டு, நிற்க இடமில்லாமல் கஷ்டப்பட்டு நின்றுக் கொண்டிருக்கிறோம், நீங்க வேற ஒரு கட்டிலையே கொண்டு வந்து எங்களிடம் இடம் கேட்கிறீர்களா?' என்று மிரட்டி இருப்பார்கள்.

.

அந்த நான்கு பேரும் யோசித்தார்கள், என்ன செய்வது, எப்படி கிறிஸ்துவிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று. அவர்களில் ஒருவர் 'நாம் இவரை வீட்டின் மேலே கொண்டுபோய், ஓட்டை பிரித்து, கீழே இறக்கினால் என்ன' என்று சொல்ல, மற்றவர்களும், ஆம், வேறு வழியே இல்லை என்று தடதடவென்று வீட்டின் மேலே ஏறினார்கள். ஓட்டைப் பிரிக்க தொடங்கினார்கள். அதைப் பார்த்து வீட்டு சொந்தக்காரர் சும்மா இருந்திருப்பாரா? நம் வீட்டை யாராவது உள்ளே நுழைந்தாலே நாயை விட்டு விரட்டுகிறோம். ஆனால் அந்த வீட்டுக்காரர், இந்த நான்கு பேரின் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பார்த்து, சரி ஓட்டைப் பிரிக்கட்டும், ஆனால் முடிந்த பிறகு திரும்ப சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். (என் கற்பனைதான் இது).

.

அவர்கள் நான்கு பேரும், அந்த திமிர்வாதக்காரனை மெதுவாக மேலேயிருந்து, கிறிஸ்து நிற்கும் இடத்தில் இறக்கினார்கள். அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும், இதுவரை யாரும் இப்படிப்பட்ட காரியத்தை செய்திருக்க முடியாது என்று.

.

'இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்' (5ம் வசனம்). ஆம், திமிர்வாதக்காரனின் விசுவாசத்தைக் கொண்டு அல்ல, அவரை சுமந்து வந்த நான்கு பேரின் விசுவாசத்தைக் கண்டு, இயேசு திமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார்;. அல்லேலூயா!

.

மட்டுமல்ல, 'நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்' (11-12 வசனங்கள்).

.

பிரியமானவர்களே, அந்த திமிர்வாதக்காரனைப் போல நம்மோடு இருக்கும் ஜனங்களில் அநேகர் கிறிஸ்துவிடம் சேரும்படி எந்தவித உதவியும் அற்றவர்களாக, நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறவர்களாக, தாங்கள் இருக்கும் பரிதாபமான நிலையில் வாழ்ந்து மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். நம் நாடு, நம் தேசம், நம் சகோதரர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்திய மக்களில் அநேகர் இப்படித்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவாரும் இல்லை, கர்த்தரைக் குறித்து அறிவிப்பாரும் இல்லை.

.

அந்த நான்கு பேர் அவர்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை, தங்களை யார் என்ன நினைத்தாலும், சொன்னாலும் சரி, எப்படியாவது தங்களுடைய நண்பனோ, உறவினரோ தெரியவில்லை, அந்த திமிர்வாதக்காரன் சுகமடைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கிறிஸ்துவிடம் கொண்டு வந்ததுப் போல் நாமும் நம்மோடு இருக்கும், நம்மோடு வேலை செய்யும், நம்முடைய உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ கிறிஸ்துவை அறிவித்து, அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமல்லவா? நாம் அவரிடம் கொண்டு போய் சேர்த்தால் போதும் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.

.

அந்த திமிர்வாதக்காரன் உடல் சுகம் பெற்றது மட்டுமல்ல, தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இரட்சிப்பையும் பெற்றுக் கொண்டான். கிறிஸ்துவினிடத்தில் வரும்போது, உடல்சுகம் மட்டுமல்ல, உள்ளத்தின் சுகமும் பெற்று, பரலோக இராஜ்யத்திற்கு பங்குள்ளவர்களாக மாறி, நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்வார்கள். அப்போது அதை காண்பவர்கள் அதை செய்ய வல்லமையுள்ள தேவனுக்கு மகிமையை செலுத்துவார்கள். அந்த நான்கு பேரைப் போல நாமும் உதவியற்று, நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவோமா? நாம் பெற்ற இரட்சிப்பை அவர்களும் பெற்றுக் கொள்ள உதவுவோமா? ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக