திங்கள், 7 ஏப்ரல், 2014

தேடி வந்த தெய்வம் இயேசு

.....................தேடி வந்த தெய்வம் இயேசு ..................

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். - (வெளிப்படுத்தின விசேஷம் 3:20).

இந்த நாட்களில் தேவையற்ற புத்தகங்களை படித்து, தேவன் இல்லை என்கிற எண்ணம் வாலிபர் பலருக்கு உருவாகி இருக்கிறது. அவர்கள் தேவையுள்ள புத்தகமாகிய வேதத்தை விட்டுவிட்டு, தேவையற்ற, குப்பையும், ஒன்றுக்கும் உதவாததுமாகிய தத்துவங்களை ஏற்று கொண்டு, தங்களுக்கே கேடு விளைவித்து கொண்டிருக்கிறார்கள்.

.

மனிதன் படைக்கப்படும்போதே அவனுடைய இருதயத்தில் தேவனை தேடும்படியான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் தேவன் இல்லை என்று சொல்லும்போது, அந்த இடம் வெற்றிடமாக மாறி விடுகிறது. வெற்றிடமாக உள்ள அந்த இடத்தில் வேறு எதை வைத்தாலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது.

.

மற்றும், உண்மையான தேவனை அவன் கண்டுபிடிக்கும் வரை அவனது இருதயத்தில் வெற்றிடமே காணப்படுகிறது. அதை அவன் நிரப்புவதற்காக எங்கெங்கோ தேவனை தேடி அலைகிறான். 'இருக்கின்ற இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞான தங்கமே' என்று பண்டைய புலவன் பாடி வைத்து போனான். ஆம், அவர் இருக்கும் இடம் நம் இருதயமே. அதில் அவரை அழையாதபடி, இல்லாத இடங்களை நோக்கி, எங்கெங்கோ சென்று, தவமிருந்து அந்த தெய்வத்தை, தன்னுடைய வெற்றிடமாகிய இருதயத்தில் வைக்கும்படி தேடி கொண்டிருக்கிறான். உண்மையான தெய்வம், அவர்கள் தேடி செல்லும் இடங்களில் அல்ல என்ற உண்மையை அந்த மனிதன் அறிந்து கொள்வது மிகவும் கடினமானதொன்றாகும்.

.

மனிதனை தேடி வந்த தெய்வம் ஒருவர் உண்டு என்பதை அவன் அறிந்தானானால் எத்தனை நலமாயிருக்கும்! மற்ற தெய்வங்களை தேடி அவன் ஒவ்வொரு இடமாக செல்கிறான். ஆனால், நம்மை தேடி வந்த தெய்வம் ஒருவர் உண்டு. அவர் தான் இயேசுகிறிஸ்து. 'நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்' - (யோவான் 15:16) என்று சொன்ன ஒரே தேவன் இயேசுகிறிஸ்து மட்டும்தான். நாம் இருக்கிற இடத்தை தேடி வந்து, தம்மை வெளிப்படுத்த சித்தம் கொண்டு, இப்போது நீங்கள் படிக்கும் இந்த வார்த்தைகள் மூலம் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறாரே, நீங்கள் அவரை தேடி போகவில்லை, அவர் உங்களை தேடி வந்திருக்கிறார். நீங்கள் அவரை ஏற்று கொள்ளும்போது, அவர் உங்களுக்குள்ளே வந்து உங்கள் வாழ்க்கையை மாற்றி, வெறுமையாயிருக்கிற காலியிடத்தை நிரப்பி, உங்களை அற்புதமாக நடத்துவார். 'இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்' - (வெளிப்படுத்தின விசேஷம் 3:20) என்று நம் இருதய கதவை தட்டி கொண்டிருக்கும் தேவனுக்கு நம் இருதய கதவுகளை திறப்போமா? நாம் திறக்கும்பட்சத்தில் அவர் உள்ளே பிரவேசித்து, நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக