செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மகா ஞானமுள்ள சிலந்தி

..........................மகா ஞானமுள்ள சிலந்தி..........................

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு... தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.- (நீதிமொழிகள் 30:24,28).

.
எட்டுக்கால் பூச்சி என்று அழைக்கும் சிலந்தியை நாமெல்லாரும் பார்த்திருக்கின்றோம். இது தனக்கென்று ஒரு வலையைப் பின்னும். இந்த வலையைக் கட்ட தேவையான நூலிழைகளை உண்டுபண்ணும் சுரப்பிகள் அதன் அடி வயிற்றில் இருக்கின்றன. மேலும் தன் வலையில் சிக்கிய பூச்சிகளையே உணவாக உண்ணுகின்றது. ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள், சிலந்தி தன்னுடைய வலையில் ஒருபோதும் சிக்கி கொள்வதில்லை.
.
இந்த சிறிய எட்டுக்கால் பூச்சிக்குள் இவ்வளவு விஷயமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நேர்த்தியாய் பொறுமையாய் பின்னும் இந்த அழகிய வலையை பின்னி, அவைகள் யாரும் செல்ல முடியாத இராஜ அரண்மனைகளிலும் போய் குடியிருக்கும்.
.
ஒரு பெரிய அரண்மனை இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு சிலந்தி அந்த பெரிய அரண்மனையின் முன் நின்று, 'நான் இதற்குள் எப்படி செல்ல முடியும்' என்று நினைத்துக் கொண்டு அங்கேயே நிற்பதில்லை, அல்லது தன்னை ஒரு வில்லாக நினைத்து, அந்த அரண்மனைக்குள் பாய்ந்து செல்வதுமில்லை.
.
மாறாக, தன் கைகளினால், வலையை பின்னி, மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது. ஒரு வேளை அது நினைத்திருந்தால், இத்தனை பெரிய அரண்மனைக்குள் நான் எப்படி போவது என்று நினைத்திருந்தால் அது அப்படியே இருக்க வேண்டியதுதான். ஆனால் அது நம்பிக்கையை இழக்காமல், மெதுவாக தன் வலையை கொஞ்ச  கொஞ்சமாக கட்டி, மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கிறது. முடிவில் அது அரண்மனையின் உள்ளே சென்று, தன் வீட்டை கட்டி குடியிருக்க ஆரம்பிக்கிறது.
.
பிரியமானவர்களே, ஒரு வேளை தேவன் நமக்கு ஒரு தரிசனத்தை கொடுத்திருக்கலாம், அல்லது, நம் மேல் வைக்கப்பட்டிருக்கிற பொறுப்பு மிகப்பெரியதாக இருக்கலாம், நாம் 'ஐயோ இதை நான் எப்படி செய்து முடிப்பேன்' என்று நினைத்து அப்படியே உட்கார்ந்திருந்தால், ஒன்றுமே செய்து முடிக்க முடியாமல் போய் விடும். ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கையோடு, தேவன் எனக்கு உதவி செய்வார் என்று விசுவாசத்தோடு மெதுவாக நம் செயல்பட ஆரம்பிக்கும்போது, நிச்சயமாகவே அதை செய்து முடிக்க முடியும். 'நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது' என்று வேத வசனம் கூறுகிறதல்லவா?
.
இந்த சிலந்திப்பூச்சி, ஐயோ மனிதர்கள் தங்கள் கால்களால் என்னை மிதித்துப் போடுவார்களே என்று பயப்படுவதில்லை. எத்தனை பெரிய மனிதர்கள் வந்தாலும், பயமே இல்லாமல், தன் கூட்டை கலைத்து விடுவார்கள் என்ற பயமும் இல்லாமல், அது தன் காரியத்தில் கண்ணாக இருந்து வலையை கட்டி முடிக்கிறது.
.
நம்மிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறிய காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் கர்த்தர் நம்மை அநேகத்தின் பேரில் அதிகாரியாக வைப்பது நிச்சயம்! 'ஐயோ மற்றவர்கள் என்ன சொல்வார்கள், ஒருவேளை என் தரிசனத்தில் குறுக்கே வந்த நிறுத்தி விடுவார்களோ' என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கர்த்தர் உங்களுக்கு அந்த தரிசனத்தை கொடுத்திருப்பாரென்றால், நீங்கள் அதை செய்து முடிக்க கவனமாக இருந்தால், அந்த தரிசனம் நிறைவேறி முடியும் வரை அவர் உங்களுடனே கூட இருப்பார். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படாமல், கர்த்தருடைய உதவியுடன் உங்கள் மேல் வைக்கப்பட்டுள்ள பொறுப்பை கவனமாய் செய்து முடியுங்கள்.
.
எப்படியாவது வேலை முடிய வேண்டும் என்று அவசரப்பட்டு, குறுக்கு வழிகளில் செல்லாமல், உலக காரியங்களின் மேலும், உலக மக்களின் மேலும் நம் நம்பிக்கையை வைக்காமல், கர்த்தர் மேல் மாத்திரம் நம்பிக்கை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக,மெதுவாக முன்னேறினாலும், கர்த்தர் அதை வாய்க்க செய்வார். சிலந்தியைப் போல இராஜ அரண்மனைகளில் குடியிருக்க செய்வார்.
.
மகா ஞானமுள்ளவைகளில் ஒன்றாகிய சிலந்தியிடமிருந்து இந்த படிப்பை நாம் கற்றுக் கொண்டு, கர்த்தர் நம்மை நம்பி கொடுத்த பொறுப்பை மகா ஞானமாய், சரியாக செய்து முடிப்போமா? கணக்கு கேட்கும் கர்த்தர் சீக்கிரம் வரப்போகிறார். ஆயத்தமாவோமா? ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3720-27th-feb-2014-&Itemid=56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக