செவ்வாய், 8 ஏப்ரல், 2014

திறப்பின் வாசலில் நிற்கும் மனிதன் யார்?

..........திறப்பின் வாசலில் நிற்கும் மனிதன் யார்?..........

இயேசு சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். - (மத்தேயு 26:40-41).

இஸ்ரவேலில் கெத்சமெனே தோட்டத்தில் உள்ளே நுழையும் முன்பு நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? என்ற வசனத்தை பொறித்திருக்கிறார்கள். தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட இராத்திரியில் இயேசுகிறிஸ்து தம் வியர்வை இரத்தமாய் சிந்தப்பட, வியாகுலமுள்ளவராய் தம் சீஷர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டார். அவர்களோ நித்திரை மயக்கமாய் இருந்தார்கள். அதே கேள்வியை இயேசுகிறிஸ்து நம்மைப்பார்த்துக் கேட்டால், அன்றைய சீஷர்களைப்போலவே நாமும் நித்திரை மயக்கமாய் இருக்கிறோம் என்று நம்மை காண்பிக்கிறவர்களாக இருப்போமா?


சபைகளுக்கு வரும்போதுதான் அவர்களுக்குள் இருக்கும் அசுத்த ஆவிகள் ஆட ஆரம்பிக்கின்றன. இவற்றை துரத்துவதற்கு பயப்படும் கிறிஸ்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அநேக பெரிய பெரிய சபைகளில் இவை தெரிவதில்லை. ஆனால் நகரத்தை விட்டு வெளியே வந்து பார்க்கும்போது அநேக சபைகளில் கிராமங்களில் இருந்து வரும் மக்களை பிசாசானவன் பிடித்து ஆட்டி அலைகழிக்கிறான். இவர்களின் விடுதலைக்காக சில வேளைகளில் ஊழியர்கள் போராடி ஜெபிக்க வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் அவை உன்னையே அழிக்கிறேன் என்று சபதம் எடுக்கின்றன. அவைகளுக்கு பயப்படாமல், இயேசுவின் நாமத்தில் அவைகளின் மேல் வெற்றி எடுக்கும் ஊழியர்கள் இன்று நமக்கு அதிகமாய் தேவைப்படுகின்றார்கள்.

சாத்தானோடு உள்ள யுத்தத்தில் நேரடியாக போராடும் ஊழியர்களுக்காக ஜெபிக்கும் மக்கள் தேவை. ஆத்தும பாரம் நிறைந்தவர்களாக சாத்தானின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டுமே என்று திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிற கிறிஸ்தவர்கள் ஆயிரமாயிரமாய் இன்று தேவை.
.
கிறிஸ்தவர்கள் இவற்றை எல்லாம் அறியாமல், தங்களுடைய வீடுகளிலும், சபைகளிலும், மிகவும் மெத்தனமாக தாங்கள் உண்டு, தங்கள் குடும்பங்கள் உண்டு என்று வந்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நம் கண்களை திறந்து பார்த்தால் நிறைய காரியங்களை காண முடியும். உங்கள் அருகிலுள்ள பள்ளிக்கூடத்தண்டை நின்று பாருங்கள், பள்ளியில் படிக்கும் எத்தனை சிறுவர்கள் சிகரெட் வாங்கி, மறைமுகமாக நின்று குடிப்பது தெரியும், டாஸ்மாக் மற்றும் மதுபான கடைகளில், படிக்கும் வாலிபர்கள் மதுபானங்களை வாங்கி பதுங்கி நின்று குடிப்பது தெரியும்.
.
இப்படிப்பட்டவர்களுக்காகத்தான் தேவன் பரிதபிக்கிறார். இவர்கள் பிசாசின் பிடியிலிருந்தும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் வெளிவர வேண்டும் என்றே அவர் வாஞ்சிக்கிறார். இவர்களுக்காக திறப்பில் நின்று தேவனிடம் மன்றாட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமல்லவா? ஒரு மணி நேரமாவது எனக்காக விழித்திருந்து ஜெபிக்கக் கூடாதா? என்று நம்மைப் பார்த்து கேட்கும் ஆண்டவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?
.
பிரியமானவர்களே, நம் ஒவ்வொருவருக்கும் ஆத்தும பாரம் வர வேண்டும். நமக்கு தெரிந்த, பிசாசின் கட்டுக்குள் இருப்பவர்களுக்காக, அவர்களோடு முன் வரிசையில் நின்று போராடும் ஊழியர்களுக்காக, வாலிபர்கள் பாவக்கட்டிலிருந்து வெளிவரும்படியாக, அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை காணும்படியாக நமக்கு தெரிந்த முறையில் ஆண்டவரிடம் மன்றாடுவோமா? யோபு தன் சிநேகிதருக்காக மன்றாடினபோது, தேவன் அவருடைய சிறையிருப்பை மாற்றினார் அல்லவா? நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது தேவன் நம் தேவைகளை சந்திப்பார். ஜெபிப்போம், சாத்தானின் மேல் வெற்றி எடுப்போம். ஆமென் அல்லேலூயா!

( Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக