திங்கள், 14 ஏப்ரல், 2014

போராட்டத்தில் ஜெயிப்பவர்கள் நாமே

...........போராட்டத்தில் ஜெயிப்பவர்கள் நாமே...............


ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. - (எபேசியர் 6:12).

.
நம்முடைய ராஜ்யமும், அரசாங்கமும் இப்போது நாம் வாழ்கிற இந்த பூமியில் இல்லை. 'நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' - (பிலிப்பியர் 3:20). நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் இருப்பதால், இந்த உலகத்தில் நாம் இருப்பது தற்காலிகமானதுதான். இது நிரந்தரமானது அல்ல.

.

அப்படி தற்காலிகமாக இந்த உலகத்தில் வாழ்கிற நாம், யாரோடும் சண்டையோ வாதங்களோ செய்வது கூடாது. சாத்தான் நம்மை இந்த உலகத்திற்குரியவர்களாக மாற்றும்படியாக தந்திரமாக இந்த உலகத்தாரை நமக்கு விரோதமாக எழுப்புகிறான். அதை உணராத நாம், அவர்களோடு வழக்கிடுகிறோம். மட்டுமல்ல, விசுவாசிகளோடு விசுவாசிகளை சண்டையிட வைக்கிறான். ஒரு விசுவாசியை மற்ற விசுவாசி தாக்கி பேசும்போது, அவனுக்கு தான் மிகவும் சந்தோஷம்! அதை அறியாமல் சபைகளில் ஒருவரோடொருவர் வழக்கிட்டு கொள்கிறார்கள்.

.

வசனம் தெளிவாக கூறுகிறது, நம்முடைய போராட்டம், மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல என்று கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக யாராவது பேசினாலோ, அல்லது காரியங்களை செய்தாலோ அது பிசாசினால் உண்டானது என்று அறிந்து கொள்ள வேண்டும். அந்த நபரோடு நாம் தர்க்கமோ, வாதமோ செய்யவே கூடாது. அவர்களுக்கு பின்னால் இருந்து கிரியை செய்கிற அந்தகார சக்திகளின் வல்லமைகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு முன்பாக நாம் அதை செய்ய கூடாது. மனதில் கடிந்து ஜெபிக்க வேண்டும். நம்முடைய ஜெபங்களில் கடிந்து ஜெபிக்க வேண்டும்.

.

'ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு' என்று வேதம் கூறுகிறது. நாம் செய்கிற போராட்டம், உலகத்தில் கண்களுக்கு தெரிந்து செய்கிற போராட்டத்தை அல்ல, ஆவிக்குரிய போராட்டத்தை செய்கிறவர்களாகவே நாம் இருக்கிறோம். யார் யாரோடு நமக்கு போராட்டம் உண்டு என்று பாருங்கள், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் ஆக, நான்கு வகையான சேனைகளோடு நாம் போராட வேண்டி உள்ளது. இது ஆவிக்குரிய போராட்டம்!

.

இந்த உலகத்தில் ஒரு அரசாங்கத்தில் எப்படி படிப்படியாக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை போல சாத்தானின் அரசாங்கத்திலும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகள் தங்கள் வேலைகளை தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரங்களின்படி செய்கின்றன.

.

ஜெய்ப்பூரில் கிறிஸ்தவர்கள் அநியாயமாய் தாக்கப்பட்ட நிகழ்ச்சியை எல்லாரும் பார்த்திருப்பீர்கள். கிறிஸ்தவர்கள் யாருக்கும் எதுவும் செய்வதில்லை. அடித்தால் திருப்பிக்கூட அடிப்பதில்லை. மனதில் வைராக்கியம் வைத்து, யாரையும் துன்புறுத்துவதுமில்லை. ஆனால் அடிக்கப்பட்டு, கீழே விழுந்து கிடக்கும் பாவமான கிறிஸ்தவனை தலையில் எட்டி உதைத்து, இரத்தம் வடிய வடிய பெரிய கம்புகளினால் அடிப்பதை பார்க்கும்போது கண்ணீர் வராமல் இருக்காது.

.

ஆனால் நம்முடைய யுத்தம் இந்த உலகத்திற்குரியதல்ல, நம்முடைய யுத்தம் கண்களுக்கு தெரியாத ஆவிக்குரிய போராட்டம். நாமும் கம்புகளை எடுத்து அவர்களோடு போராட முடியாது, கூடாது.  கிறிஸ்தவனை அடிப்பதால் வெற்றி பெற்றதாக அந்த பொல்லாத கூட்டம் நினைத்தாலும், அவனை அடித்து, வெற்றி எடுக்கவே முடியாது என்று சாத்தானுக்கு தெரியும். ஏனெனில் அவன் ஏற்கனவே சிலுவையில் கர்த்தரிடம் தோற்று போனவன்தானே! 'துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்' (கொலோசேயர் 2:15) அல்லேலூயா!



.தோற்று போனதினால் அவன் கிறிஸ்தவர்கள் மேல் தன் கோபத்தை காட்டும்படியாக அவர்களை துன்புறுத்தினாலும், அவர்கள் எப்பொழுதும் ஜெயம் கொள்கிறவர்களே! கிறிஸ்துவை அநேக பாடுகளின் வழியாக அவரை சாட்டையால் அடித்து, துப்பி, முள்கிரீடத்தை சூட்டி, ஆணிகளை அவருடைய கால்கரங்களில் அடித்து, துன்புறுத்தியவன், இன்று அவருடைய பிள்ளைகளை துன்புறுத்துகிறான். அன்று அவன் படுத்திய பாடுகளை பொறுமையாய் ஏற்று கொண்ட இயேசுகிறிஸ்து, அவனை சபிக்காமல், தம் அதிகாரத்தை பயன்படுத்தி, அவனை அழிக்காமல், சிலுவையில் அவன் மேல் வெற்றி சிறந்தாரே, அதுப்போல இன்று, நாமும் கிறிஸ்தவர்களை அடித்தவர்களை, துன்புறுத்துகிறவர்களை அடிக்காமல், சபிக்காமல் அவர்களை மன்னிப்போம். கிறிஸ்தவர்களின் இரத்தம் கிறிஸ்துவின் இரத்தத்தை போல நன்மையானவற்றை பேசும். அந்த இடத்தை கர்த்தருக்கு சொந்தமாக்கி கொள்ளும்படியாக பேசும். யார் யார் துன்பப்படுத்தினார்களோ, அவர்கள் பவுலை போல தேவனால் சந்திக்கப்பட்டு, அவர்களே வேதத்தை ஏந்தி கர்த்தருக்கு ஊழியம் செய்ய வைக்கும்படியாக தேவன் அவர்களை மாற்றுவார்! அல்லேலூயா!  (Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக