வெள்ளி, 18 ஏப்ரல், 2014

அடிமையின் ரூபமெடுத்தவர்

........................அடிமையின் ரூபமெடுத்தவர்.........................

இயேசுகிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - (பிலிப்பியர் 2:6-8).

.
ஆப்பிரிக்க தேசத்திலே வீட்டு சபை ஒன்றிலே ஒரு மிஷனெரி ஞாயிறு ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார். பிரசங்கத்திலே இயேசுகிறிஸ்து எப்படியெல்லாம் பாடுகளை சகித்தார் என்பதை சொல்ல ஆரம்பித்தார். முள்முடி சூட்டப்பட்டு, கசை அடிபட்டு, ஆணிகள் கடாவப்பட்டவராக சிலுவையில் தொங்கினார் என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கறுப்பு இன வாலிபப் பெண், ஆராதனை முடிந்தவுடன் அழுதுக் கொண்டே வெளியே ஓடினாள். கை நிறைய பணத்தோடு திரும்பினாள்.

.

அந்த பணத்தை மிஷனெரியிடம் பணிவோடு நீட்டி, 'என் வாஞ்சை ஆசையெல்லாம் எனக்காக இரத்தம் சிந்திய என்இயேசுவுக்குத்தான். என் பணத்தையெல்லாம் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பதுதான். ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றாள். மிஷனெரி அந்த பணத்தை வாங்க தயங்கினார். இந்த பெண்ணே பரம ஏழை, சில்லரை காசுக்கூட காணிக்கைத்தர முடியாத வறுமை. அப்படியிருக்க இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று எண்ணினார், அவள் சொன்னாள், 'ஐயா நீங்கள் இயேசுகிறிஸ்து எனக்காக அடிமையின் ரூபமெடுத்து வந்தார் என்று சொன்னீர்கள். அவருக்கு ஏதாவது நான் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். உடனே ஓடிப்போய் நான் வேலை பார்க்கும் தேயிலை தோட்ட முதலாளியிடம் என்னை வாழ்நாள் முழுவதும் அடிமையாக விற்று விட்டேன். என்றென்றும் அடிமை வேலை செய்வதற்கு. அவர் கொடுத்த பணம்தான் இது' என்றாள். மிஷனெரி கண்கலங்கினவராக, 'மகளே நான் இங்கிலாந்தை விட்டு மிஷனெரியாக வந்ததுதான் பெரிய தியாகம் என்று நினைத்தேன், நீ என்னை விட அதிகமாய் தியாகம் செய்து விட்டாயே' என்றார்.

.

இயேசுகிறிஸ்து நமக்காக பரலோக சிங்காசனத்தை துறந்து, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷ சாயலானவர், சிலுவையின் மரண பரியந்தம் தம்மை தாழ்த்தினார். தேவனுக்கு ஒப்பாக அவர் பரலோகத்தில் போற்றப்பட்டவர், மனுஷ சாயலாகி, ஒரு அடிமையைப் போலாகி, அநேக பாடுகள் பட்டு, தம் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நமக்கு இரட்சிப்பை உண்டுபண்ணினார்.

.

அப்படிப்பட்ட அருமையான தேவனுக்கு நாம் என்ன செலுத்துகிறோம்? நம்முடைய சிறந்ததை அவருக்கு கொடுக்க வேண்டுமல்லவா? சபை கூடுதலில் மட்டுமல்ல, லெந்து நாட்களில் மட்டுமல்ல, நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும், அவருடைய தியாகத்தை மனதில் வைத்து, பாவத்தை வெறுத்து, பரிசுத்தமாய் வாழ வேண்டும்.

.

எத்தனையோப் பேர் தங்கள் ஜீவனை துச்சமாக நினைத்து, கர்த்தருக்காக கோதுமைமணிப் போல் மடிந்திருக்கிறார்கள். பெரும் பாடுகளை சகித்திருக்கிறார்கள். ஏராளமாய் இழந்திருக்கிறார்கள். ஆனால் நாம் கர்த்தருக்காக எதை இழந்திருக்கிறோம்? எதை சகித்திருக்கிறோம்? நம் சக விசுவாசி எதையாவது சொன்னாலே மூக்குக்கு மேல் கோபப்பட்டு விடுகிறோமே! கிறிஸ்துவின் அன்பை நாம் எந்த முறையில், எந்த வகையில் வெளிப்படுத்துகிறோம்?

.

கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிப்பது மட்டுமல்ல, உருகிப் பாடுவது மட்டுமல்ல, நம் அனுதின ஜீவியத்தில் அவருக்காக வாழ்வோம். அவருக்காக சகிப்போம், அவருக்காக இழப்போம். அதில்தான் தேவன் பிரியப்படுவார். பாரம்பரிய காரியங்களைவிட உண்மையான தேவ அன்பு நம் இருதயத்தில் பிறக்கட்டும். அதை வெளிக்காட்டுவோம். கர்த்தருக்காக வாழ்வோம். கர்த்தர் சிலுவையில் மரித்து உயிர்த்தது நம் வாழ்வில் அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கட்டும். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக