வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தேவதூதர்களின் பணிவிடை

.......................தேவதூதர்களின் பணிவிடை.....................


உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். - (சங்கீதம் 91:11).

.
வேதத்தில் நாம் தூதர்களின் செயல்பாடுகளைகளை குறித்தும், அவர்கள் எப்படியெல்லாம் தேவ மனிதர்களுக்கு உதவினார்கள் என்றும் அநேக இடங்களில் காணலாம். பரிசுத்த தூதர்களும் உண்டு, விழுந்து போன சாத்தானின் தூதர்களும் உண்டு. அவர்களை குறித்தும் நாம் வேதத்தில் காண்கிறோம்.

.

'இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா' - (எபிரேயர் 1:14)-ல் பார்க்கிறோம். தூதர்கள் நமக்கு பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. எப்படியெல்லாம் அவர்கள் நமக்கு பணிவிடை செய்கிறார்கள் என்று வேதத்தின் அடிப்படையில் நோக்குவோம்.

.

தேவைகளில் அவற்றை சந்திக்கிறவர்கள்: எலியா தீர்க்கதரிசி, யேசபேலுக்கு பயந்து, வனாந்திரத்திற்கு சென்று, 'ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப்படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்' - (1 இராஜாக்கள் 19:5-7). எலியா தீர்க்கதரிசிக்கு வனாந்திரத்தில் உணவு எங்கேயிருந்து கிடைக்கும்? தேவன் அவர் பசியாயிருப்பார் என்று தூதனை அனுப்பி, உணவை கொடுக்கிறார். சுவிட்சர்லாந்தில் ஒரு போதகரின் மனைவி, கையில் ஒரு பைசாவும் இன்றி, என்ன சாப்பிடுவது என்று திகைத்த நேரத்தில், முழங்கால் படியிட்டு, 'தேவனே, எனக்கு, மாவு, எண்ணெய், கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு இந்த அளவு வேண்டும்' என்று ஜெபித்தார்களாம். சற்று நேரத்தில் கதவு தடடப்படும் சத்தம் கேட்டது. ஓரு வாலிபன், ஒரு கூடையை அவர்களிடம் கொடுத்து, 'நீங்கள் கேட்டவை யாவும் இந்த கூடையில் இருக்கிறது' என்று கூறி, அவர்கள் பார்த்து கொண்டிருக்கும்போதே, அவன் மறைந்து போனானாம். தம்முடைய பிள்ளைகளின் தேவையை இன்றும் சந்திக்கிற தேவன், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அல்லேலூயா!

.

வழிகாட்டுபவர்கள்: தேவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தம்முடைய தூதர்கள் மூலம் அறிவிக்கிறார். மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரித்தபோது, அதை அறியாத 'அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனiவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது (மத்தேயு 1:19-20) என்று என்ன செய்ய வேண்டும் என்று தூதன் வந்து யோசேப்பிற்கு கற்பித்ததை நாம் காண்கிறோம். அப்போஸ்தலனாகிய பிலிப்புவிடம் தேவ தூதன் வந்து, எத்தியோப்பிய மந்திரியிடம் போய் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளும்படி, கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: 'தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ' என்று வழிகாட்டுவதை பார்க்கிறோம் (அப்போஸ்தலர் 8:26)

.

திடப்படுத்துபவர்கள்: பவுலும் அவரோடே கப்பலில் பயணித்தவர்களும், கடலில் ஏற்பட்ட புயலில் சிக்கி, கப்பல் சேதம் அடைந்து அனைவரின் உயிருக்கும் ஆபத்து என பயந்து இருக்கும் வேளையில், 'என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று:  பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான் (அப்போஸ்தலர் 27: 23-24). மரண பயத்தில் இருந்த ஒவ்வொருரையும் திடப்படுத்தும்படியாக, பவுலுக்கு தூதன் தோன்றி, தேற்றி அவர்கள் மரிப்பதில்லை என்று தேற்றுவதை காண்கிறோம். கேன்சர் வியாதியால் அவதிப்பட்டு கொண்டிருந்த ஒரு சிறுமியில் தாயார், மிகவும் கவலையோடு இருந்த போது, ஒரு உயரமான, கறுப்பு நிறமான ஒரு நர்ஸ் அவர்களோடு, ஒரு இரவு முழுவதும், கூட இருந்து, தேவனுடைய கிருபைகளை குறித்து பேசி கொண்டிருந்தார்களாம். காலையில் அந்த நர்சுக்கு நன்றி சொல்ல தேடினபோது, அப்படி போன்ற தோற்றமுடைய நர்ஸ் அந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்யவே இல்லை என்று தெரிய வந்தது. கவலையோடு இருந்த அந்த தாயாரை திடப்படுத்த தேவன் தம்முடைய தூதரை அனுப்பியிருந்தார். அல்லேலூயா!

.

பாதுகாப்பவர்கள்: பயங்கரங்கள் நிறைந்த இந்த உலகில், தூதர்கள் தேவ பிள்ளைகளுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் அவர்களை பாதுகாக்கிறார்கள். தானியேல் சிங்க கெபியில் எறிந்து போடப்பட்ட போது, சிங்கங்களின் வாயை கட்டியது தூதர்களே! சாத்ராக் மேஷாக், ஆபேத்நேகோ அவர்கள், ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் வீசப்பட்ட போது, கிறிஸ்துவே அங்கு வந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில், அவர்கள் மேல், அக்கினியின் வாசனை கூட வீசாதபடி காத்து, அவர்களை உயிரோடே வெளியே கொண்டு வந்தார். ஒரு வாலிப பெண், தனிமையாக தன் வேலையை முடித்து விட்டு, இரவில் ஒரு இருட்டான தெருவில், தேவனுடைய பாதுகாப்பிற்காக ஜெபித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்த போது, ஒரு வாலிபன் அங்கு நின்று கொண்டிருப்பதை கண்டாள். அவன் தன்னை காண்பதை கவனித்தாள். ஆனால் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவள் கடந்து தன் வீட்டை சென்றடைந்தாள். அடுத்த நாள் அவளுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள், அவள் நடந்து வந்த தெருவில் அவள் கடந்து வந்தபின், ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதை கூறினார்கள். அவளுக்கு ஒரே ஆச்சரியம், ஒரு வேளை அந்த வாலிபனாக இருந்தால், தன்னால் அடையாளம் காட்ட முடியுமே என்று எண்ணி, அவள் போலீசை கூப்பிட்டு, நடந்தவற்றை சொன்னாள். அவர்கள் அந்த மனிதனை அடையாளம் காட்ட சொன்னபோது, அவள் சரியான மனிதனையே காட்டினாள். அவள் போலீஸ் அதிகாரிகளிடம், எப்படி தான் அதே தெருவில் அதே நேரத்தில் வந்த போது தன்னை அவன் ஒன்றும் செய்யவில்லை என்று அவனிடம் கேட்க சொன்னபோது, அவன் சொன்னானாம், 'நான் எப்படி அவளை தொடுவேன்? அவளோடு இரண்டு பெரிய உருவமுள்ள நபர்கள் சென்று கொண்டிருந்தார்கள்' என்று கூறினானாம்.

.

ஆம் பிரியமானவர்களே, நம்முடைய தின அலுவல்களில் தேவனுடைய பாதுகாப்பு மட்டுமன்றி, அவர் தம்முடைய தூதர்களை நமக்காக அனுப்பி நம்மை காக்கிறார். அநேகர் இந்த நாட்களில் சொல்ல முடியும், நான் கார் ஓட்டி கொண்டிருந்தபோது, மயிரிழையில் உயிர் தப்பினேன் என்று. எப்படி நாம் தப்பினோம்? நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் இருந்தபடியால், தேவன் தம்முடைய தூதர்களை அனுப்பி பாதுகாத்ததினால் அல்லவா?

.

தூதர்கள் நமக்கு பணிவிடை செய்யும்படி அனுப்பப்பட்ட ஆவிகளாய் இருப்பதால், அவர்கள் நம்மை திடப்படுத்துகிறவர்களாக, பாதுகாக்கிறவர்களாக, என்ன செய்ய வேண்டும் என்று போதிக்கிறர்களாக, தேவைகளில் தேவ வழிநடத்துதலின்படி, சந்திக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாம் எத்தனை பாக்கியவான்கள்! தேவபிரசன்னம் நம்மை வழிநடத்துவது மட்டுமன்றி, தேவதூதர்களின் பணியும் நமக்கு கிடைக்கிறதல்லவா? தேவ தூதர்கள் தேவனிடத்திலிருந்து கட்டளை பெற்று நமக்கு ஊழியம் செய்கிறபடியால், நாம் தேவனை மாத்திரம் சார்ந்து, அவரிடம் நம் தேவைகளை சொல்ல வேண்டுமே தவிர, தூதர்களிடம் நாம் ஜெபிக்க கூடாது. அவர்களை தொழுது கொள்ளவும் கூடாது.  தொடர்ந்து நாம் நாளையும் அவர்களின் பணிவிடை குறித்தும் சாத்தானின் தூதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை குறித்தும் காண்போம்.
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக