.
நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும்,
விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. - (1தீமோத்தேயு 4:12).
ஒரு கிறிஸ்தவர் ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். அவரிடம் நிறைய கிறிஸ்தவ கைப்பிரதிகள் இருந்தன. தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு கிறிஸ்துவின் அன்பைக் குறித்து கூற ஆரம்பித்தார். அப்போது வயதான ஒருவர் அவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு, 'தம்பி, என் கால் வலிக்கிறது, தயவு செய்து இடம் கொடுங்கள்' என்று கேட்டார். அதற்கு கிறிஸ்தவர், 'எனக்கும் கால் வலிக்கிறது, நான் எப்படி இடம் கொடுப்பது' என்று சொல்லி விட்டு, தொடர்ந்து சுவிசேஷத்தை கூற ஆரம்பித்தார்.
.
ஆனால் அதை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழுந்து அந்த பெரியவருக்கு இடம் கொடுத்தார். இப்போது கிறிஸ்தவரின் நிலைமை சங்கடமானது. பெரியவருக்கும் அவர் சுவிசேஷம் சொல்ல முடியாது. ஏனெனில் அவருடைய கிரியை கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவில்லை.
.
அநேக கிறிஸ்தவர்கள் அவர்களை பேச சொன்னாலும், ஜெபிக்க சொன்னாலும் உலகமே அதிசயிக்கும் வண்ணம் பேசுவார்கள், ஜெபிப்பார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும்போது, அவர்கள் சொல்வதற்கும், ஜெபிப்பதற்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.
.
கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்காதவரை நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி சொல்கிற காரியங்கள் எல்லாம் வீணாகவே இருக்கும். மற்றவர்கள் 'எப்படி பேசினான் பார், ஆனால் மற்றவர்களை மன்னிக்க முடியவில்லை, மற்றவர்களுக்கு சிறிய உதவிக்கூட செய்ய முடியவில்லை' என்று பேசுவார்கள்.
.
'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆனால் அநேகர் நமககுள் இருக்கிற கிறிஸ்துவாகிய ஒளியை காண்பிப்பதற்கு பதிலாக நம்மையே அல்லது நம்முடைய ஜென்ம சுபாவத்தையே காண்பித்து கொண்டிருக்கிறோம்.
.
'ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான், பழையவை ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின' என்று வேதம் கூறுகிறது. ஆனாலும் நாம் நம்முடைய பழைய சுபாவங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் கிறிஸ்து நமக்குள் இல்லை என்பதே அர்த்தமாகும்.
.
கிறிஸ்தவர் ஒவ்வொருவருமே மற்றவர்கள் வாசிக்கும் வேதம் என்று கூறுவார்கள். நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே மற்றவர்கள் இவர்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை உடையவர்கள் என்று தீர்மானிப்பார்கள்.
.
ஒருவர் ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது, ஒரு ஹோட்டலில் தங்கும்படி சென்றபோது, அங்கிருந்த ரிஷப்ஷனிஸ்ட் அவரிடம் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டாள். அப்போது அவர் அவளிடம் சொன்னார், 'நீ இந்த இடத்தில் வேலை செய்வதைக் கண்டுதான் உன்னுடைய நாட்டைக் குறித்து வெளிநாட்டவர்களாகிய நாங்கள் இது நல்ல நாடா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும். நீ இவ்வாறு அலட்சியம் செய்தால், உங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் அனைவருமே இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒருவேளை நான் நிதானிக்கக்கூடும். ஆகவே வெளிநாட்டவர்களை மதிக்க கற்றுக் கொள்' என்று அறிவுரை கூறினார்.
.
ஆம், நாம் நம் கிரியைகளில் கிறிஸ்துவை வெளிப்படுத்தாதவரை நாம் சொல்லும் எந்த காரியமும் எடுபடாது. ஆகையால் நம்முடைய நற்கிரியைகளை கண்டு மற்றவர்கள் கிறிஸ்துவை அறியும்படி மற்றவர்களுக்கு முன் ஒரு நல்ல எடுத்துக்காட்டுகளாக ஜீவிப்போம். அது ஆயிரம் சொற்பொழிவுகளை விட அதிகமானதாக இருக்கும். 'நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு' என்ற பவுலின் அறிவுரைப்படி நடப்போம். கிறிஸ்து அதனால்
மகிமைப்படுவார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக