.
'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை'. - (ஏசாயா 49:15).
.
தாயின் அன்பிற்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு அன்பில்லை என்று கூறுவார்கள். தாயின் அன்பு அத்தனை வலியது, உண்மையானது. வேதமும் தாயின் அன்பை குறித்து அருமையாக வெளிப்படுத்துகிறது. ஒரு தாய் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் இருப்பாளோ? அப்படி ஒரு நாளும் நடப்பதில்லை. ஆனாலும் அப்படியே நடந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று தேவன் நம்மை பார்த்து கூறுகிறார்.
.
சமீபத்தில் நான் பார்த்த ஒரு காட்சி என் மனதை உருக்கியது. ஒரு 38 வயதுள்ள பெண் மூளை வளர்ச்சி குன்றியவள், அவளுக்கு வலிப்பு வியாதியும் உண்டு. அவளால் சரியாக பேச முடியாது. அவளுக்கு வலியானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, பசியானாலும் சரி, அவளால் கத்ததான் முடியும். வார்த்தைகள் வாயிலிருந்து வராது. நன்கு சாப்பிட்டு, உடல் பருமனாக காணப்பட்டது. அவளை பார்த்து கொள்ளும்படி ஒரு பெண் இருந்தாள். இருப்பினும் அவளுடைய வயது சென்ற தாயார் அவள் அருகிலேயே உட்கார்ந்து, அவள் கத்தும்போதெல்லாம் அவள் தலையை வருடி, அவளை தேற்றி. அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.
.
அந்த வயதான தாயாரை பார்த்த போது என் மனம் பரிதாபம் கொண்டது. அவர்களிடம் போய் 'இந்த உங்கள் மகள் இப்படி ஆவதற்கு என்ன காரணம்?' என்று விசாரிக்க ஆரம்பித்தேன். அவர்கள் சொன்ன சம்பவம் என்னை உருக்கிற்று. இந்த பெண் வயிற்றில் இருக்கும்போது, அவர்களுடைய ஒரே மகன், நான்கு வயதுள்ளவன், தெருவை கடக்க முயன்றபோது, காரில் மோதி, அந்த இடத்திலேயே மரித்து போனான். அதை கண்ட அவர்களின் இருதயம் நொறுங்குண்டது. வயிற்றிலும் வாயிலும் அடித்து அழுது அழுது மிகவும் கலங்கி எப்பொழுதும் அழுதபடி இருந்தார்கள். அவர்களின் அந்த நிலை வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கியது. அந்த குழந்தை பிறந்த போது மூளை வளர்ச்சி குன்றியதாக, எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாததாக பிறந்தது. அதற்கு பின் பிறந்த குழந்தைகள் சாதாரணமானதாக பிறந்தாலும், இ;ந்த குழந்தையை பராமரிப்பது பெரிய காரியமாக காணப்பட்டது.
.
மற்ற பிள்ளைகள் எல்லாரும் திருமணமாகி கணவர் வீட்டிற்கு போய் விட்டார்கள். இப்போது தனித்து விடப்பட்டவர்கள் தகப்பனும் தாயும் அந்த பிள்ளையும் மாத்திரமே. தகப்பனும் அந்த பெண்ணின் 30ஆவது வயதில் மரித்து போனார். தாய் மிகவும் நலிந்த சரீரமும், பெலவீனமுமானவர்கள். அவர்களுக்கும் இருதய நோய் இருந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த வயதிலும் அவர்கள் அந்த பெண்ணை குளிப்பாட்டி, கழுவி, உணவு ஊட்டி பராமரித்து வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு சிறு காய்ச்சல் என்றாலும், நமக்கு பாரமாயிருக்கிறாளே, மரித்து போகட்டும் என்று விட்டுவிடாமல், டாக்டரிடம் கூட்டி சென்று மருந்துகளை வாங்கி கொடுத்து கவனித்து கொள்கிறார்கள். அந்த நிலையை பார்த்த போது என் கண்கள் கலங்கியது. இன்னும் எத்தனை காலம் இப்படி நடக்குமோ தெரியாது.
.
ஒரு தாய் தன் பிள்ளைக்கு தன் வியாதியின் மத்தியிலும், பெலவீனத்தின் மத்தியிலும் ஒன்றுக்குமே பிரயோஜனமில்லாத போதும் தன் பிள்ளை என்ற ஒரே காரணத்தினால், அது உயிரோடு இருப்பது தனக்கு பாரம் என்று நினையாதபடி தன் உயிரையே கொடுத்து வளர்க்கும் தாய்க்கு நிகரான அன்பு யாருக்கு உண்டு? நம் தேவனுக்கு மாத்திரமே உண்டு!!!
.
வேதம் சொல்கிறது, அப்படிப்பட்ட 'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை' என்று. நம் தேவன் அந்த தாயிலும் மேலான அன்புள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விரோதமாக காரியங்ளை செய்யலாம். பெற்றோரை குறித்து அனுதினமன்னாவில் எழுதியிருந்தபோது, ஒரு வாசகர் தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டார். அவருடைய தாயார் அவர்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல், மகன் காதலித்த பெண்ணை மணந்ததற்காக மகனுக்கு விரோதமாக அநேக உபத்திரவங்களையும், மந்திரங்களையும் ஏவி விட்டதாக எழுதியிருந்தார். அப்படிப்பட்ட பெற்றோரும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சில தாய்மார், பிறந்த குழந்தை திருமண கட்டிற்கு வெளியே பிறந்ததால் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு விட்டு செல்கிறார்கள்.
.
அப்படிபட்டதாக தாயானவள் மறந்தாலும், கெட்ட செயல்களை செய்தாலும், நம் தேவன் நம்மை மறப்பதில்லை. அவர் நம் மேல் வைத்த அன்பு குறைவதில்லை. உலகத்தில் யார் நம்மை கைவிட்டாலும் நம்மை கைவிடாத தேவன் ஒருவர் உண்டு. நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மை ஒரு நாளும் திக்கற்றவர்களாய் விடவே மாட்டார். தாயினும் தந்தையினும் நம் மேல் அதிகமாய் அன்பு கூர்ந்து, நம்மை அணைத்து கொள்வார். நம் கண்ணீரை துடைப்பார். என் தகப்பன் எங்களைவிட்டு மரித்து போனபோதும், என் தாய் என்னை விட்டு கடந்து போன போதிலும், என் தேவன் என்னை கைவிடாமல், என் வாஞ்சைகளை அறிந்து, என் தேவைகளை சந்தித்து, என்னை கரம் பிடித்து என்னை வழிநடத்தின தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு அவரே தகப்பன் என்ற வசனத்தின்படி அவரே தகப்பனாக தாயாக இருந்து வழிநடத்தி வருகிறார்.
.
ஒருவேளை நீங்கள் நினைக்கிறீர்களோ, எனக்கு யாரும் இல்லை, என் தகப்பனும் என் தாயும் என்னை கைவிட்டார்கள் என்று? 'என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்' (சங்கீதம் 27:10) என்று தாவீது சொல்வது போல நம் நம்பியிருக்கிற அனைவரும் நம்மை கைவிட்டாலும் நம் தேவன் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மை சேர்த்து கொள்வார். மனம் தளர்ந்து போகாதிருங்கள். யாருமே எனக்கு இல்லையே என்ற அங்கலாய்ப்பு வேண்டாம். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் உங்களுக்கு தகப்பனாக இருந்து உங்களை தாங்குவார், உங்களை தேற்றுவார், உங்களை ஆற்றுவார், உங்களை விசாரிப்பார். என்னை தேற்றி வழிநடத்தின தேவன் உங்களையும் தேற்றி, உங்கள் கண்ணீரையும் துடைப்பார். அவருடைய அன்பில் மூழ்கி, அவரை நாமும் நேசிப்போமா? அவர் நம்மை அன்புகூர்ந்தபடி நாமும் அவரில் அன்புகூருவோமா?
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக