.
துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பை செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. - (பிரசங்கி 8:11).
.
ஒருவர் தான் எப்போதும் வாங்கும் புத்தக கடையில் புதிதாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஆர்டர் பண்ணியிருந்தார். அதை கண்ட புத்தக கடைக்காரர், அவர் அதற்கு முன் வாங்கியிருந்த புத்தகத்திற்கு இன்னும் பணத்தை செலுத்தவில்லை என்று கண்டு, அவருக்கு ' பாக்கி பணத்தை கொடுத்தப்பின் அடுத்த புத்தகம் அனுப்பப்படும் ' என்று பதில் அனுப்பினார். அதற்கு அந்த மனிதர், ' நான் அனுப்பிய ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள், அத்தனை நாள் வரை நான் காத்திருக்க முடியாது ' என்று பதில் அனுப்பினார்.
.
நாம் இப்போது வாழ்கிற நாட்களில் மக்கள் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கு உடனே பணத்தை செலுத்த விரும்புவதில்லை. அதனால்தான் கிரடிட் கார்ட்கள் இப்போது மிகவும் அதிகமாக உபபோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
.
கார்கள் வாங்குவோர்க்கு செய்திதாளில் வினம்பரம், ' நீங்கள் இப்போது பணத்தை செலுத்த தேவையில்லை, ஆறு மாதம் கழித்து முதல் தவணையை செலுத்தினால் போதும் ' என்று புத்தம் புது காரை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். கம்பெனிகளுக்கு தெரியும், பணத்தை கொஞ்ச நாட்கள் கழித்து செலுத்துவது மக்களுக்கு மிகவும் பிடித்ததாக இருப்பதால் இந்த மாதிரி சலுகைகளை காட்டி தங்கள் பொருட்களை வாங்க வைக்கின்றனர்.
.
சாத்தானும் இந்த மாதிரியை தான் பின்பற்றுகிறான். நாம் செய்த பாவத்திற்கு ஏற்ற தண்டனை உடனே கிடைக்காமல் போவதால், இன்னும் நாட்கள் இருக்கிறது, தண்டனை வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று மனிதனை துணிகரமாக பாவம் செய்ய வைக்கிறான். ஒருவன் பாவம் செய்யும்போது உடனே தண்டனை கிடைத்;தால் எந்த மனிதனும் பாவம் செய்வதற்கு முன் ஒரு தரம் யோசிப்பான். ஆனால் உடனே தண்டனை வராததால் அவன் தன்னை பாவத்திற்கு விற்று போடுகிறான். ' துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பை செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது ' என்று சாலொமோன் ஞானி கூறுகிறான்.
.
ஆனால் நாம் வாங்கிய பொருட்களுக்கான பட்டியலோ, பில்லோ நாளடைவில் நமக்கு வந்து நாம் ஒரு நாள் அதற்கான பணத்தை கட்ட வேண்டி இருப்பதுப்போல நாம் செய்த பாவத்திற்கு தக்க தண்டனையை நாம் ஒருநாள் அனுபவிக்க வேண்டி வரும். ' பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுககு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை: அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை ' - (பிரசங்கி 8:12-13).
.
' பாவத்தின் சம்பளம் மரணம்: தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய காத்தாராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்திய ஜீவன் ' - (ரோமர் 6:23). பாவத்தின் விளைவு எப்போதும் மரணமும், துயரமும் நஷ்டமுமே. அந்த பயங்கர பாவத்தை துணிகரமாக செய்யும்போது, அதற்கான விளைவுகளை எதிர்பார்த்தே ஒருவன் செய்கிறபடியால், அதற்கேற்ற தண்டனையை அவன் பெறத்தான் வேண்டும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கொலை செய்தான் என்றால், அவன் அதற்கேற்ற தண்டனையை பெறுவான் என்று அவன் அறிந்தே துணிகரமாக அந்த பாவத்தை செய்கிறான்.
.
இப்படி ஒவ்வொரு பாவத்தின் விளைவுகளும் மரணத்தையே விளைவிக்கும். ஆனால் தேவனுடைய கிருபையால், நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு, தேவனிடம் மன்னிப்பு பெற்றால், இரண்டாம் மரணமாகிய நரக அக்கினிக்கு தப்புவிக்கப்படுவோம்.
.
' ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாக பாவத்திற்கு ஒப்புகொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் ' - (ரோமர் 6:12-13). அப்படி நீங்கள் செய்யும்போது, ' இப்போது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானாதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்கு கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன் ' - (ரோமர் 6:22). ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக