புதன், 14 மே, 2014

சுமக்க வேண்டிய சிலுவை


.

சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது .- (1 கொரிந்தியர் 1:18).

,
ஒரு மோட்சப்பிரயாணி வாக்குதத்தம் செய்யப்பட்ட மகிமையான தேசத்தை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தான். தன்னுடைய பாரமான சிலுவையை சுமந்துக் கொண்டு அவன் மகிழ்ச்சியாக பயணம் செய்துக் கொண்டிருந்தான்.

.

பயணத்தில் ஏற்பட்ட களைப்பின் காரணமாக ஒரு நிழலைக் கண்டு அங்கு ஓய்வெடுக்கும்படி தங்கினான். ஓய்வாக படுத்திருக்கும்போது, அருகிலுள்ள காட்டில் ஒரு மனிதன் மரத்தை வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

.

அந்த மனிதனிடம், 'நண்பா, என்னுடைய இந்த சிலுவை மிகவும் பாரமாக இருக்கிறது. அதை நான் கொஞ்சம் வெட்டித்தள்ளட்டும். பின் அதை சுமப்பதற்கு எனக்கு இலகுவாக இருக்கும்' என்று சொல்லி, அந்த மனிதனிடம் கோடாரியை வாங்கி, தன்னுடைய சிலுவையின் நீளத்தை வெட்டி, சிறிதாக்கி, தன்னுடைய பாரத்தை குறைத்துக் கொண்டான்.

.

சிலுவையின் பாரம் குறைவாக இருந்தபடியால் பிரயாணம் எளிதாக இருந்தது. வெகுசீக்கிரமே வாக்குததத்தம் செய்யப்பட்ட தேசத்தின் அருகாமையில் வந்து விடடான். அங்கு தூரத்தில் மகிமையான தேசத்தை பார்த்த அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 'என் தேவனை முகமுகமாக காணப்போகிறேனே' என்று பேரானந்தம் கொண்டான்.

.

அவன் அருகில் வந்து சேர்ந்தபோது, அந்த மகிமையான தேசத்தை கடக்க ஒரு பிளவு காணப்பட்டது. அதை எப்படி கடப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, 'உன் சிலுவையை இணைப்புப் பாலமாக வைத்து அந்த பிளவைத்தாண்டி வா' என்ற சத்தம் கேட்டது. உடனே மகிழ்ச்சி நிறைந்தவனாக தன் சிலுவையை எடுத்து அந்த பிளவில் வைத்தபோது, அதன் நீளம் பற்றாமல் போனது.

.

அவன் பாரமாக இருக்கிறது என்று எந்த அளவு நீளத்தை குறைத்தானோ அதே அளவு அந்த பிளவை தாண்ட தேவைப்பட்டது. 'ஐயோ என் சிலுவையை வெட்டி சிறிதாக்காமல் இருந்திருந்தேனானால் நான் மகிமையின் தேசத்தை இந்நேரம் சென்று சேர்ந்திருப்பேனே, இபபோது நான் என்ன செய்வேன்' என்று கதறினான்.

.

திடீரென்று கண் விழித்து எழுந்தான். தான் கண்டது சொப்பனம்தான் என்று அவனுக்கு புரிந்தது. தன் அருகிலிருந்த பாரசிலுவையை கட்டி அணைத்துக் கொண்டான். எந்த சூழ்நிலையிலும் எனக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை நான் குறைக்க நினைக்க மாட்டேன் என்று தீர்மானித்தான். தன் பயணத்தை தொடர்ந்து, மகிமையான தேசத்தை சென்றடைந்தான். அல்லேலூயா!

.

பிரியமானவர்களே, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்களில் சிலர் நாம் சிலுவையை சுமக்க வேண்டியதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இயேசுகிறிஸ்து 'அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்' (மத்தேயு 16:24) என்று கூறினார்.

.

கிறிஸ்துவை பின்பற்ற விரும்பினால் நாம் நம்மை வெறுத்து, நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு அவரை பின்பற்ற வேண்டும். கர்த்தருடைய சிலுவையை அல்ல, நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டுதான் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றும்போது, நம்முடைய சிலுவை பாரமாக இருக்கிறது என்று சிலுவையை எடுத்துச் செல்லாமல் இருப்போமானால், ஒருவேளை நாம் மகிமையான தேசத்தை சென்று சேர முடியாமற் போகலாம்.சிலுவையை எடுத்துச் செல்லாமல் இருப்பது என்பது எந்த நாளும் நம் குறைகளையும், பாடுகளையும், துன்பங்களையும், வேதனைகளையும் முறுமுறுத்துக் கொண்டே இருப்போமானால் அது நாம் சிலுவை சுமக்க தயங்குவதற்கு ஒப்பாகும்.

.

'தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்' (லூக்கா 14:27) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாம் அவருடைய சீஷர்களாக இருக்க வேண்டுமானால், நம் சிலுவையை சுமந்து அவருக்கு பின் செல்ல வேண்டும்.

.

நம் வாழ்க்கையில் சிலுவையை போன்ற துன்பங்களும், துக்கங்களும், துயரங்களும் வந்து சேர்ந்தாலும், நாம் அவற்றை சுமந்து, கர்த்தருடைய வழியில் அவரை பின்பற்றும்போது, 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' (மத்தேயு 1:28) என்று சொன்னவர் நமக்கு இளைப்பாறுதலை நிச்சயமாக தருவார். அல்லேலூயா!

.

கிறிஸ்தவ வாழ்க்கை ரோஜாப்பூக்கள் விரிக்கப்பட்ட வாழ்க்கை அல்ல, அது பாடு நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும், கர்த்தர் அதன் நடுவில் இருந்து நம் பாதையை செவ்வைப்படுத்துவார். நம்முடைய பாரங்களை பாடுகளை அவர் ஏற்றுக் கொள்வார். அல்லது சுமப்பதற்கு தாங்குவதற்கு ஏற்ற பெலனை தருவார். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக