புதன், 7 மே, 2014

கவலைப்படாதிருங்கள்

.......................கவலைப்படாதிருங்கள்..............................
.

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25).

.
சில வீடுகளுக்கு முன் செடிகளை அழகாக வெட்டி, மலர்கள் பூத்து குலுங்கும்படி பார்க்கும்போது வியக்கும் வண்ணம் அருமையாக வளர்த்திருப்பார்கள். சில வீடுகள் முன், மரம் பெரிதாக வளர்ந்து, அதனுடைய இலைகள் வீட்டிற்கு முன் விழுந்து ஒரே குப்பையாக காட்சியளிக்கும்.

.

மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில் வளருவது கடினம். Conocarpus என்னும் ஒரு வகை செடி, அதற்கு தண்ணீரோ, குளிர்ந்த இடமோ தேவையில்லை. அந்த செடி இந்த வனாந்திரமான இடங்களில் கடுமையான வெட்பத்திலும் செழிப்பாக வளருகிறபடியால், எல்லா இடங்களிலும் அவற்றை நட்டு வைத்து, வளர்த்து, ஒவ்வொரு விதமான மிருகங்கள் போல, பறவைகள் போல வெட்டி, அழகுபடுத்தி, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக வைத்திருக்கிறார்கள். யாராவது இந்த நாடுகளுக்கு வருபவர்கள், இது வனாந்தரமா என்று நினைக்குமளவு இந்த மரங்களை எக்கச்சக்கமாக நட்டு, பசுமையாக காட்சி தருமளவு அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து தங்கள் நாடுகளை அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

.

சில இடங்களில் இவைகள் வெட்டப்படாமல், ஒரு லெவல் இல்லாமல் வளர்ந்து, ஒரு புதரை போல காட்சியளிக்கும். வனாந்தர இடமாக இருப்பதால் வனாந்தரத்தில் காணப்படுகிற தேள்கள், மற்ற விஷ பூச்சிகள் இதற்குள் ஓடி ஒளிய வாய்ப்புண்டு. நம் நாட்டிலும், செடிகளை ஒழுங்காக கத்திரித்து விடாதபடியால், கன்னாபின்னாவென்று வளர்ந்து பார்க்கவே அலங்கோலமாய் காணப்படுகிற இடங்கள் அநேகம் உண்டு. செடிகளோடு கூட களைகளும் வளர்ந்து, செடிகளுடைய ஆகாரத்தை உண்டு, செடிகள் சரியாக வளராதபடி இவை வேகமாய் வளர்ந்து, செடியை மூடிக்கொளகின்றன.

.

கவலையும் அதைப்போலத்தான், அந்த களைகளைப் போல, அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், அது வேர்படர்ந்து, பெரிய கிளையாகி, ஆளையே விழுங்கி விடக்கூடியதாக உள்ளது.

.

கவலைப்படுகிறவர்களின் உடலில் சாப்பிடுவதும் ஒட்டாது. அதனால்தான் இயேசுகிறிஸ்து கூறினார், கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? (மத்தேயு 6:27) என்று. சிலருக்கு கவலை என்பது வேண்டும். எதையாவது குறித்து கவலைப்படாவிட்டால், அவர்களுக்கு தூக்கம் வராது. இது நடந்து விடுமோ, அது நடந்து விடுமோ என்று தேவையில்லாத கவலைப்பட்டு கொண்டு இருப்பார்கள்.

.

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? என்று இயேசுகிறிஸ்து கூறினார். இயேசுகிறிஸ்துவின் பேரில் நம்பிக்கை வைத்திருந்தால், நாளைய தினத்தை குறித்தோ, என்ன நடக்கும் என்றோ கவலை படத்தேவையேயில்லை. நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் என்று இயேசுகிறிஸ்து கூறினார். அந்தந்த நாளுக்குரிய காரியங்களில் கவனத்தை செலுத்தி வாழ்ந்தால் போதும், ஒவ்வொரு நாளைக்கு தேவையான கிருபைகளை தேவனிடமிருந்து பெற்று கொண்டு அதன்படி வாழந்தால் போதும்.

.

நம் வாழ்வில் நம்முடைய தேவைகள் உணவும் உடையும்தான். அதைக்குறித்தே கவலைப்பட வேண்டாம் என்று கர்த்தர் சொல்லியிருக்கும்போது, வீணாக கவலைப்பட்டு நம் உடல் நலத்தை கெடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

.

சிலருக்கு தங்களுடைய பிள்ளைகளை குறித்து கவலை, ஹாஸ்டலில் விட்டால் பிள்ளை கெட்டுவிடுமோ என்று. அன்னாள் கர்த்தரிடம் தன் இருதயத்தை ஊற்றி ஜெபித்து பெற்றுக்கொண்ட பிள்ளையை (சாமுவேலை) பால் மறக்கசெய்த பின்பு, (ஆறுமாதம் இருக்கலாம் என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்) ஏலியிடம் விட்டு விட்டு வந்து விட்டார்கள். ஐயோ, வயதான மனிதரிடம் விட்டு விட்டு வந்திருக்கிறேனே, அவர் பிள்ளையை நன்றாக வளர்ப்பாரா? சரியாக உணவு கொடுப்பாரா? என்றெல்லாம் கவலைப்படவில்லை. கர்த்தருக்கு என்று கொடுக்கப்பட்ட பிள்ளைதான், ஆனால் தாயின் அன்பும் பாசமும் ஒரு நாளும் மாறிவிடாது. அவர்கள் வருடம் ஒரு முறை ஒரு சட்டையுடன் வந்து பார்த்துவிட்டு போவார்களாம் (1 சாமுவேல் 2:19). ஒரு வேளை அடிக்கடி போனால், பிள்ளை கர்த்தருடைய ஊழியக்காரனாக வருவதை விட்டு, அன்னாளின் பின்னே வந்து விடலாம், ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல், அவர்கள் வருஷத்தில் ஒருமுறை மாத்திரம் போய் பார்த்து விட்டு வந்தார்கள்.

.

இத்தனைக்கும் ஏலியின் பிள்ளைகள் மிகவும் மோசமானவர்களாக, கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்த்து சிறுவனாகிய சாமுவேல் கெட்ட காரியங்களை கற்று கொள்ளவில்லை. சிறுவயதிலேயே கர்த்தருடைய சத்தத்தை கேட்க கூடிய மகனாக இருந்தான். பின்னாளில் தேவனுடைய வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக மாறினான். அன்னாளின் ஜெபம் அவனை தாங்கியது. பிள்ளைகளை குறித்து கவலைப்படாமல், அவர்களை ஜெபத்தில் தாங்குவோம். கர்த்தர் நம் பிள்ளைகளை பொறுப்பெடுத்து கொள்வார். இப்படி ஒவ்வொரு கவலையை குறித்தும் வேத வசனத்தின்படி தேவையில்லாத ஒன்று என்று காட்டமுடியும்.

.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4:6,7). ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக