புதன், 7 மே, 2014

விழுந்து போகாதபடி விழித்திருப்போம்

.........விழுந்து போகாதபடி விழித்திருப்போம் ..........
.

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். - (1பேதுரு 5:8).

.
சங்கீத புத்தகங்களில் தாவீது ராஜா தேவனோடு எந்த அளவு நெருங்கிய தொடர்புடையவராயிருந்தார் என்பதை நாம் வாசிக்கலாம். எந்த பிரச்சனைகள் வந்தாலும், கர்த்தரிடம் சொல்வார், பின் என் தேவன் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்று அவர் மேல் தன் பாரத்தை வைத்து விடுவார். பிரச்சனைகள் தன்னை சூழ்ந்த போதிலும், கர்த்தரை துதிப்பதை அவர் நிறுத்தவேயில்லை. எந்த பெரிய பிரச்சனைகளின் மத்தியிலும் கர்த்தரை துதித்து கொண்டே இருந்தார்.

.

'தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்' - (அப்போஸ்தலர் 13:22) என்று தேவனே சாட்சி சொல்லும்படியாக வாழ்ந்தவர் தாவீது ராஜா! அப்படிப்பட்ட தாவீது ராஜா தன் வாழ்விலும் பாவத்தில் விழுந்து போனார். பெரிய சத்துருவாக எழும்பி நின்ற கோலியாத்தை தன் சிறுவயதில், ஒரே ஒரு கவண்கல்லினால் கொன்ற பராக்கிரமம் மிகுந்த தாவீது, அழகிய பெண்ணாக நின்ற பத்சேபாளின் முன் படுக்கையில் விழுந்து போனார். போரில் படைக்குமுன், தைரியமாக நின்ற தாவீது, படுக்கையில் பத்சேபாளிடம் தோற்று போனார். அவர் அதற்காக தேவனிடம் மன்றாடி பாவ மன்னிப்பு பெற்றாலும், அதற்கேற்ற தண்டனையை அனுபவியாமல், தேவன் அவரை விட்டுவிடவில்லை. அவர் செய்த பாவத்தை அவருடைய பிள்ளைகளும் செய்தார்கள். என்ன ஒரு பரிதாபம்! கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற மனிதன்தான், ஆனாலும் பாவம் என்று வரும்போது, தேவாதி தேவன் பாவத்தை காணாத சுத்த கண்ணர். அவரில் சற்றேனும் இருளில்லை.

.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில், தாவீது தேவனை துதிக்கவோ, அவரை ஆராதிக்கவோ இல்லை. போருக்கு செல்லாமல், வீட்டில் பால்கனியில் நின்று கொண்டு, தன் கண்களை சுழல விட்டார். அவர் மனம் பெலவீனமாய் இருந்த அந்த நேரத்தில் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிந்து கொண்டிருந்த சாத்தான், அவருடைய பெலவீனத்தை கண்டு கொண்டான். எப்போது அந்த தருணம் வரும் என்று காத்திருந்தவன் போல உடனே அந்த சமயத்தை அவன் மிகவும் அருமையாக பயன்படுத்தி, தாவீதை பாவத்திற்கு உட்பட பண்ணினான். தன்னை எப்போது தாவீது ராஜா காத்து கொள்ளாமல் போனாரோ, தேவன் மேல் இருந்த அன்பு சற்று குறைந்து போனதோ, உடனே பிசாசின் தந்திரங்களுக்கு பலியாகி போனார்.

.

பிரியமானவர்களே, இந்த கடைசி காலங்களில் நாம் விழித்திருந்து, தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் என்று ஏற்கனவே வேதம் நம்மை எச்சரித்திருக்கிறபடியால், நாம் நம்மை தேவனுடைய அன்பில் எப்பொழுதும் வைத்து காத்து கொள்ள வேண்டும். எப்போது நாம் நம் நினைவில், நம் கண்களில் இச்சை கொள்ள ஆரம்பிப்போமோ, அப்போதே பிசாசானவன் அதை பயன்படுத்தி கொள்ள ஆரம்பிப்பான். இலசவமாகவே பாவம் உங்களை தேடி வரும். உங்களை பாவத்தில் விழ வைக்க அவன் தன்னால் இயன்றதை செய்வான்.

.

இந்த கடைசி நாட்களில் இந்த பாவத்தில் விழாதபடி தங்களை காத்து கொள்பவர்கள் வெகு சிலரே. ஊழியக்காரர்களாயிருக்கட்டும், தேவனை அதிகமாய் தேடுகிறவர்களாயிருக்கட்டும், யார் பெலவீனப்பட்டு போகிறார்களோ அவர்களில் ஒருவரையும் பிசாசானவன் விட்டுவைப்பதில்லை. அவன் அதிகமாய் பிடிக்கும்படியாய் தேடி கொண்டிருப்பது தேவனுடைய பிள்ளைகளையே. ஆகையால் ஜாக்கிரதையாய் இருப்போம். பாவத்தில் விழுந்து, அதன் பலனாக தண்டனைகளும் அது மட்டுமல்ல நம் பிள்ளைகளும் அதினால் பாதிக்கப்பட்டு போவார்களானால் நாம் ஏன் அந்த சிறு நேர இன்பத்திற்காக தேவ பிரசன்னத்தை இழக்க வேண்டும்? தேவ மகிமையை இழக்க வேண்டும்? நம்மை காத்து கொள்வோம்.

.

யாரெல்லாம் கர்த்தரை நோக்கி முன்னேறி கொண்டே இருக்கிறார்களோ, எப்போதும் அவரை துதித்து இருதயத்தை காத்து கொள்கிறார்களோ அவர்களிடம் சாத்தானுக்கு வேலை கிடையாது. எப்போது ஒரு தேவ பிள்ளை கர்த்தரை தூரத்தில் வைத்து விட்டு, உலக இன்பத்தில், கவர்ச்சியில் இழுக்கப்படுகிறார்களோ, அவர்களை அவன் குறிவைத்து, பாவத்தில் விழ வைப்பான். நாம் ஒரு இடத்திலும் நில்லாதபடி, தேவனை நோக்கி முன்னேறி கொண்டே இருப்போம். பாவத்தில் விழாதபடி நம் எண்ணங்களை, இருதயத்தை, கண்களை காத்து கொள்வோம். அப்போது தேவன் நாம் பாவத்தில் விழாதபடி காத்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக