.
...பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகியதூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து.. - (வெளிப்படுத்தின விசேஷம் 5:8).
.
ஜெபிக்க மனமற்ற கிறிஸ்தவனை தண்ணீரில்லாத கிணற்றிற்கும், உயிரில்லாத உடம்பிற்கும் ஒப்பிடலாம். அப்படியென்றால் ஜெபம் ஒரு கிறிஸ்தவனுக்கு அவ்வளவு முக்கியமா? ஆம், இதை குறித்து லியோனார்டு ரேவன்ஹில் என்ற தேவ மனிதர் கூறுகிறார், 'பரிசுத்த வாழ்விற்கு ஜெபம் முக்கியமானது என்றார் ஒருவர். உண்மைதான். ஆனால் ஜெபத்திற்கு பரிசுத்த வாழ்வே இன்றியமையாதது என்பது அதிலும் உண்மை. ஜெபத்தின் இரகசியமே இரகசியமாய் ஜெபிப்பது. ஜெபத்தை குறித்த புத்தகங்கள் படிப்பது நல்லது. ஆனால் அது போதாது. சமைக்க பொருளின்றி சமையற்கலை படிப்பினால் என்ன பயன்? அப்படித்தான் ஜெபமும். ஜெபத்தை குறித்து ஆயிரமாயிரமான புத்தகங்களை படித்தும் ஜெபத்தின் வல்லமையை உணராமலிருக்கவும் வாய்ப்புண்டு. ஜெபிக்க கற்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கான அநேக புத்தகங்களை ஒருவர் வாசித்து, வாசித்து அதை கடைப்பிடிக்காமல் நலிந்தும் போகலாம். இதய பாரத்தினால் ஜெபிக்காத எந்த ஜெபத்தினாலும் பயன் இல்லை'
.
ஒரு பழம்பெரும் எழுத்தாளர் சொன்னார், 'ஒரு வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டு வீட்டுக்காரர் கதவை திறப்பதற்கு முன் ஓடிவிடும் சிறுவனை போலவே நாம் அநேக நேரம் ஜெபிக்கிறோம்' என்றார். ஆத்திரம் தோத்திரம் ஆமென் ஜெபம் என்று பழைய காலத்தில் சொல்வார்கள். அப்படித்தான் 'ஆண்டவரே நான் வேலைக்கு போகிறேன், என்னை ஆசீர்வதியும். பிரச்சனை வராதபடி காத்து கொள்ளும்' என்று அவசர அவசரமாக ஜெபித்து போகிறவர்களாகவே நம்மில் அநேகர் காணப்படுகிறோம்.
.
தேவன் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். எனவே ஜெபமும் தேவனைப்போல பரந்தது. பதிலளிக்க தேவன் வாக்குதத்தஙகள் அநேகம் கொடுத்து இருக்கிறார். ஆகவே ஜெபமும் தேவனை போல வலியது. தேவன் தன்மீது ஒளி வீசும்படி தனி அறையில் தனித்திராதவன் காரிருளில் தத்தளிக்கிறான் என்பது உண்மை. கிறிஸ்துவின் நியாயசன சிங்காசனத்தின் முன் நம்மை வெட்கப்பட வைக்கப்போவது நமது ஜெப குறைவாகவே இருக்கும். எலியா தீர்க்கதரிசி நம்மை போல ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் அவர் ஜெபித்த போது, அக்கினி பரத்திலிருந்து வந்து இறங்கியது. இயற்கை அவர் சொல் கேட்டு கீழ்ப்படிந்தது. மழை பெய்யாது என்றார். பெய்யவில்லை. இப்போது மழை பொழியும் என்றார். உடனே பொழிந்தது.
.
இன்றைய தேவை அப்படி ஜெபிக்கிற ஆட்களே! சபைகளில் ஜெபக்குறைவு அதிகமாய் காணப்படுகிறது. சுவிசேஷ விதைகள் முளைக்காதபடி சபைகள் வறண்டு விட்டன. கண்ணீரின்றி பலிபீடங்க்ள வறண்டு விட்டன. அதிகாரத்தோடு ஜெபிக்கிற எலியாக்கள் இந்நாட்களில் எங்கே?
.
ஜெப அறை என்பது நமது தேவைகளை ஆண்டவரிடம் சமர்ப்பிக்கும் இடம் மாத்திரம் அல்ல, நம்முடைய ஜெபத்தினால் மனிதர்கள் மாற முடியும்! நாம் இருக்கும் இடத்தை தலைகீழாக மாற்ற நம் ஜெபத்தினால் முடியும்! நம் தேசத்தில் எழுப்புதல் அக்கினியை கொண்டு வர முடியும்! அந்தரங்கத்தில் நாம் தேவனை நோக்கி சிந்தும் கண்ணீருக்கு வெளியரங்கமான பதில் நிச்சயமாய் உண்டு. கர்த்தரே தேவன் என்று மக்களை சொல்ல வைக்கும் எலியாக்கள் இன்று நம் நாட்டிற்கு தேவை. நம் வீட்டிற்கு தேவை. ஜெபிக்க ஆரம்பிப்போமா? நம் நாட்டை ஜெபத்தினால் கலக்குகிறவர்களாக மாற்றுவோமா? 'அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்' (அப்போஸ்தலர் 4:31) என்ற வசனத்தின்படி, நாம் ஜெபிக்கிற போது நாம் கூடியிருக்கிற இடம் அசையட்டும், நாம் தைரியமாய் கர்த்தருடைய வார்த்தையை சொல்லும்படி பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக