.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.(I கொரிந்தியர் 2:15).
.
நான் செய்யும் வேலை சரியா? இப்படி செய்யலாமா? நான் எடுத்த தீர்மானம் சரியா? தவறா? என்னுடைய இந்த பழக்கம் சரிதானா? தனிமையில் இந்த சேனலை அல்லது சிடியை பார்ப்பது சரியா? குறுக்கு வழியில் பணம் வாங்கலாமா? பணி மாற்றம் அல்து பணி உயர்வு குறுக்கு வழயில்தான் பெற வேண்டுமா? பணம் சொடுத்து சீட் வாங்கலாமா? என்பன போன்ற கேள்விகள் நம்மை ஒவ்வொரு நாளும் விரட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இவையனைத்திற்கும் நாம் நம்முடைய சுயாதீனத்தின் மூலம் பதில் கண்டு கொள்கிறோம். சுயாதீனம் என்பது நன்மை, தீமை அறிந்து கொள்ளும் மனிதனின் அறிவு. இது தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஈவு. ஆனால் சுயாதீனத்தின்படி நாம் எடுக்கும் முடிவுகள் வேதத்தின்படி சரியானதா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நம்முடைய அனுதின வாழ்க்கையானாலும் சரி, ஆவிக்குரிய வாழ்கையானாலும் சரி, சோதனைகள், போராட்டங்கள், நெருக்கங்கள் நடுவே நடக்கும்போது நாம் நிதானமாய் செயல்பட கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி செய்யலாமா? என்ற சந்கேதம் கலந்த கேள்வி எழும்பும்போது அதை வேதத்தின் வெளிச்சத்தில் வைத்து சீர்தூக்கி பார்க்க வேண்டியது மிக முக்கியம்.
.
தேவன் எந்த ஒரு காரியத்தையும், அவசர அவசரமாக செய்து விட விரும்புவதில்லை. தாயின் வயிற்றில் நம்மை கருவாக்கி, பின் நாம் வளர பத்து மாதங்களை கொடுக்கிறார். உலகம் முழுவதையும் தன் வார்த்தையால் ஒரு சில வினாடிகளிலேயே உருவாக்கியிருக்கலாம். ஆனால் ஆறு நாட்களை எடுக்கிறார். ஆனால் நாம்தான் நம் சுய அறிவிற்கு என்ன தோன்றுகிறதோ அதை தாமதமின்றி நல்லதோ கெட்டதோ என்று கூட சோதித்துப் பார்க்காமல் பேசி விடுகிறோம், காரியங்களை செய்து விடுகிறோம். நம்முடைய சுயாதீனம் தேவனுடைய சித்தத்திற்கும் மேல் எப்போதும் சென்று விடக்கூடாது.
.
பிரியமானவர்களே, எப்பொழுதெல்லாம் நமக்கு ஒரு காரியத்தை செய்யும்முன் சந்தேகம் வருகிறதோ அதை உடனே செய்து விடாமல் நிதானமாய் யோசிக்க வேண்டும். வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டும். சந்தேகம் வரும் எந்த காரியமும் அநேகமாக தவறானாக இருக்கலாம். இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட சந்தேக கேள்விகள் உங்கள் உள்ளத்தில் எழும்பினால் அந்த காரியங்களை அப்படியே விட்டு விடுங்கள். இதுவே சிறந்தது. நாம் தேவனை நோக்கி ஜெபிக்கும்போதெல்லாம் நமக்கு சமீபமாய் இருக்கிற தேவனிடத்தில் நம்முடைய காரியங்களில் தம்முடைய ஞானத்தை தந்து உதவி செய்யும்படி கேட்போம். தேவன் காட்டுகிற வழியில் நடப்போம். நம்முடைய கிரியைகளினால் தேவனை மகிமைப்படுத்துவோம். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக