புதன், 19 மார்ச், 2014

விசுவாசத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

விசுவாசத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என வேதாகமம் கூறுகிறது எபேசியர் 2

நமக்கு உதவியையும் ஆசீர்வாதங்களையும் தரும்படி நம்மை நோக்கி நீட்டும் தேவகரமே கிருபையாகும். தேவனுடைய கரத்தில் இருக்கும் உதவியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி நம்முடைய கரத்தை உயர்த்துவதே விசுவாசமாகும்!

தேவன் நல்லவர் என்றும் அவர் உங்களை அளவுக்கடங்காது அன்பு கூறுகிறாரென்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் தன்னுடைய குமாரனாகிய ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பதற்கு அனுப்பினார் என்றும், மரித்து மூன்று நாட்களுக்குப் பின் தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்றும், அவர் பரலோகத்தில் இன்றும் ஜீவிக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்ஙனம் நீங்கள் விசுவாசித்தால் தேவன் உங்களுக்கு வழங்கும் பாவமன்னிப்பை இப்போதே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஆம், நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!

நீங்கள் இப்போதே முழங்கால் படியிட்டு உங்கள் கண்களை மூடி கீழ்கண்ட வாக்கியங்களை தேவனிடத்தில் கூறுங்கள்:

"ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, நான் ஒரு பாவி. நான் மெய்யாகவே என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் திரும்ப விரும்புகிறேன். நீர் என்னுடைய எல்லா பாவங்களுக்காகவும் மரித்து மரணத்திலிருந்து உயிரோடு எழும்பி இன்றும் உயிரோடு இருக்கிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். தயவுசெய்து என்னுடைய இருதயத்திற்குள்ளும் ஜீவியத்திற்குள்ளும் தயவாய் வந்து, என் முழு வாழ்க்கைக்கும் இன்றிலிருந்து நீரே ஆண்டவராய் இருந்தருளும். வேறு எல்லா தேவர்களையும் நான் விட்டு விட்டு இப்போதிருந்து உம்மை மாத்திரமே நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன், ஆமென்."

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகையில், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்றார் (யோவான் 6).

சற்று முன்பு ஜெபித்த ஜெபத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் உண்மையாய் ஜெபித்தீர்களா?

அப்படியானால் நீங்கள் மெய்யாகவே அவரிடத்தில் வந்துவிட்டீர்கள். இவ்வேளையில், அவர் உங்களைப் புறம்பே தள்ளவில்லை என்ற நிச்சயத்தை நீங்கள் அடைந்திட முடியும். ஆம், அவர் உங்களை ஏற்றுக்கொண்டார்! அவரிடத்தில் கிட்டிச்சேரும் உங்கள் பகுதியை நீங்கள் செய்து முடிக்கும்போது, உங்களை ஏற்றுக்கொள்ளும் தம்முடைய பகுதியை தேவன் செய்துவிட்டார் என்ற நிச்சயத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!!

நீங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டீர்களா அல்லது இல்லையா எனபதை அறிவதற்கு உங்கள் உணர்வுகளைச் சார்ந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சிகள் நம் சரீரத்திற்கடுத்த காரியங்களுக்கு உரியதாகும். ஆனால் ஆவிகுரிய விஶயங்களுக்கு உணர்ச்சிகள் அதிக வஞ்சகம் நிறைந்ததாகும். நாம் உணர்ச்சிகளை நம்புவதென்பது, ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை மணலின்மீது போடுவதற்கொப்பாகும். நாமோ நம்முடைய நம்பிக்கையை அல்லது விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையில் காணப்படும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதே வைத்திட வேண்டும். இதுவே ஒரு கன்மலையின்மேல் கட்டுவதற்கொப்பாகும்!

நீங்கள் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிட்டீர்கள் என்ற நிச்சயத்தைப் பெற்றவுடன், இந்த மாற்றத்தை மற்றவர்களுக்கும் நீங்கள் அறிக்கை செய்யவேண்டும். இருதயத்தில் நீங்கள் விசுவாசிக்கிறவைகளை நாவினால் அறிக்கை செய்யவேண்டும் என வேதம் கூறுகிறது. உங்கள் நண்பரிடத்திலும், உறவினரிடத்திலும், "கிறிஸ்து என்னுடைய பாவங்களை மன்னித்துவிட்டார்! இப்போது என்னுடைய வாழ்க்கைக்கு அவர் ஒருவரே ஆண்டவர்!!" எனக் கூற வேண்டும்.

இதற்குப் பின்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவை "ஞானஸ்நானத்தின்" மூலமாகவும் அறிக்கை செய்யவேண்டும். நீங்கள் கிறிஸ்துவிடம் உங்கள் இருதயத்தையும், ஜீவியத்தையும் அர்ப்பணித்திட தீர்மானித்த பின்பு துரிதமாய் நீங்கள் ஞானஸ்நானம் பெறவேண்டும். ஞானஸ்நானம் ஒரு மார்க்க சடங்காச்சாரம் அல்ல! அது தேவனுக்கும் மனுஶர்களுக்கும் தூதர்களுக்கும் சாத்தானுக்கும் முன்பாக, "நான் இப்போது இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே சொந்தம்!" என பகிரங்கமாய் சாட்சி கொடுப்பதாகும்.

ஞானஸ்நானத்தில், இன்னொரு கிறிஸ்தவர், உங்களை முழுவதுமாய் தண்ணீருக்குள் (ஒரு ஆறு அல்லது ஒரு நீர்த்தொட்டியில்) பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினாலே மூழ்கவைத்து, உங்களை மீண்டும் தண்ணீரிலிருந்து தூக்கிவிடுவார். இந்த மிகச் சாதாரண செயலின் மூலமாக, பழைய மனிதனாய் வாழ்ந்த நீங்கள் மரித்துவிட்டீர்கள், என்ற உண்மையை சாட்சி பகருகின்றீர்கள்! இந்த பழைய மனிதனை, நீங்கள் ஒரு அடையாளமாக தண்ணீருக்குள் மூழ்க வைத்ததன் மூலமாய் "அடக்கம்" செய்துவிட்டீர்கள். தண்ணீரிலிருந்து மீண்டும் வெளியே வந்த நீங்கள், "இன்றிலிருந்து நான் ஓர் புதிய மனிதன் (அதாவது, ஆவிக்குரிய கூற்றின்படி மரித்து மீண்டும் எழுந்தவன்!). புதிய மனிதனாகிவிட்ட நான் இனி தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி வாழ விரும்புகிறேன்" என உங்கள் நிலையை ஒப்புதல் செய்கிறீர்கள்.

ஆம், நீங்கள் ஒரு பரலோக பிரஜையாகவும், ஒர் தேவப்பிள்ளையாகவும் மாறிவிட்டீர்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக