புதன், 19 மார்ச், 2014

நாம் எப்படி பட்டவராயுனும் கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்

நாம் எப்படி பட்டவராயுனும் கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். - (ரோமர் 8:16-17).

நாம் அனைவரும் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டுள்ளோம். ஆனால் நம்முடைய
பாவங்களினால் நாம் அவரை விட்டு தூரப் போய், அலைந்து திரிந்தாலும், நாம் நம் பாவங்களை விட்டு திரும்பி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, திரும்பவும் தேவனிடத்தில் வரும்போது, பரலோகத்தின் ஆசீர்வாதங்களுக்கு நாம் சுதந்தரவாளிகளாக மாறுகிறோம். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே என்று வசனம் நமக்கு கூறுகிறது.

கெட்ட குமாரன் தன் தந்தையின் சொத்துக்களில் தன்னுடைய பங்கை வாங்கிக் கொண்டு, ஊதாரியாக செலவழித்து, கடைசியில் பணமெல்லாம் செலவழிந்து, பன்றி சாப்பிடும் தவிட்டை சாப்பிட வாஞ்சித்தும் அது கிடைக்காதபடியால், மனம் திரும்பி, ‘எப்படியாவது என் தகப்பனிடம் போய் அவருடைய வேலையாட்களில் ஒருவனாக இருப்பேன்; என்று நினைத்துதான் அவன் தன் தகப்பனிடம் வந்தான். ஆனால் தகப்பனோ, எத்தனை கரிசனையுள்ளவராய்; அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக்
கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். - (லூக்கா 15:20-24) என்று பார்க்கிறோம். நாம் நம் பாவங்களில் மடிவதை விரும்பாத தேவன் அவரிடத்தில் திரும்பி வருவதையே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறவராய், அந்த கெட்ட குமாரன் திரும்பி வந்தபோது எப்படி மகிழ்ந்தாரோ அதைப் போலவே நம் தேவனும் மகிழ்கிறவராய் இருக்கிறார்.

இன்று நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம்? ஒருவேளை கெட்டக்குமாரனைப் போல
இருக்கிறோமா? நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை ஏற்றுக் கொள்ள நம் தகப்பன் ஆவலாய் காத்திருக்கிறார். நாம் எத்தனை பாவம் செய்தவர்களாயிருந்தாலும் நம்மை கழுவி ஏற்றுக் கொள்ள தேவன் கிருபை உள்ளவராயிருக்கிறார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த
மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும் என்று ஏசாயா 1:18ல் பார்க்கிறோம். நாம் இருக்கிறவண்ணமாகவே தேவனிடத்தில் வருவோம், அவர் நம்மை ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளைகளாய் நம்மை மாற்றுவார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே. ஆமென் அல்லேலூயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக