வெள்ளி, 28 மார்ச், 2014

நடப்பதெல்லாம் நன்மைக்கே

.....................நடப்பதெல்லாம் நன்மைக்கே......................

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

- (ரோமர் 8:28).

.
ஆப்பிரிக்க நாட்டிற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக ஒரு ஊழியர் புறப்பட்டார். எதிர்பாராத விதமாக அவர் ஒரு விபத்துக்குள்ளானார். அதில் அவர் தன் காலை இழக்க வேண்டிதாயிற்று. அதனால் அவருடைய உறவினர்களு;ம், நண்பர்களும் அவரை மனம் சோர்ந்து போகப் பண்ணினது மாத்திரமல்லாமல், மிஷனெரி பணிக்கு போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவரோ மரக்கால் ஒன்றைப் பொருத்திக் கொண்டு மிஷனெரியாக ஆப்ரிக்க நாட்டிற்கு சென்றார்.

.

ஒருமுறை அங்கே இருந்த காட்டுமிராண்டி ஜாதியார் அவரைப் பிடித்து தாங்கள் வசித்த அடந்த காட்டு பகுதிக்கு இழுத்துச் சென்றனர். அவர் தன் ஜீவனுக்காக அந்த மக்களிடம் மன்றாடிப் பார்த்தார். ஆனால் அவர்களோ அவருடைய மாமிசத்தை புசிக்கும் நோக்கத்திலே கருத்தாயிருந்தார்கள்.

.

அந்த காட்ட மிராண்டியின் தலைவன் அவருடைய காலை கத்தியால் ஓங்கி வெட்டினான். என்ன ஆச்சரியம்! இரத்தம் வரவில்லை, காரணம், அது மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. மரத்திலான கால்களை அவர்கள் அதற்கு முன்பு பார்த்தேயில்லை. ஆகையால் அவரை தெய்வீகப்பிறவி என்றும் கடவுளின் அவதாரம் என்றும் எண்ணி, அவருக்கு பயந்து நடுங்கினார்கள்.

.

மட்டுமல்ல, அவர் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கும் செவிக் கொடுத்தார்கள். அப்பொழுதுதான் அந்த ஊழியருக்கு கர்த்தர் ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தை அனுமதித்தார் என்பதை உணர முடிந்தது. பின் முப்பது ஆண்டுகள் வெற்றிகரமாக ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்.

.

சில வேளைகளில் நாம் அறியாத சில காரியங்களை தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிப்பார். அது ஒருவேளை வியாதி, பெலவீனம், கவலை, இழப்பு, துன்பம் இப்படி எதுவாகிலும் இருக்கலாம். அப்பொழுதெல்லாம் ஏன் ஆண்டவரே இப்படி நடக்கிறது என்று அங்கலாய்க்கிறோம். சிலவேளைகளில் முறுமுறுக்கவும் செய்கிறோம்.

.

'அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்' என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் நம்முடைய வாழ்வில் நடப்பது எல்லாமே அவருடைய சித்தத்தின்படியும், அவருடைய திட்டத்தின்படியும்தான். அதுவும் எல்லாம் நன்மைக்கு ஏதுவாகவே இருக்கும்.

.

ஆகவே அவருடைய திட்டத்திற்கும், சித்தத்திற்கும் நம்மை ஒப்புக் கொடுத்து, அவருடைய வழிநடத்துதலுக்கு நம்மை அர்ப்பணிப்போம். எல்லாவற்றையும் நன்மையாக தேவன் மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3791-18th-2014-&Itemid=56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக