இயேசுவைக்
கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்?
பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. - (1யோவான் 2:22).
இந்நாட்களில்
அந்திக்கிறிஸ்து யார் என்பதைக் குறித்து, பெரிய சர்சசையே
உண்டாகி கொண்டிருக்கிறது. வேதத்தில்,அந்திக்கிறிஸ்துவைப்பற்றி
என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று நாம் ஆராய்ந்தால்,அப்போஸ்தலனாகிய யோவான்
மட்டுமே அந்திக்கிறிஸ்து என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார். அதுவும்
நான்கு இடங்களில் மட்டுமே அந்தப் பதம் வருகிறது. அவை 1யோவான் 2:18, 2:22,
4:3, மற்றும் 2யோவான் 1:7.
இந்த
வாக்கியங்களிலிருந்து, அநேக அந்திக்கிறிஸ்துகள், இயேசுகிறிஸ்துவின்
முதலாம், இரண்டாம் வருகைக்கு இடையில் காணப்பட்டாலும், கடைசி காலத்தில் ஒரு
பெரிய அந்திக்கிறிஸ்து தோன்றுவான். அவன் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனாகவும், பொய்யனாகவும், ஏமாற்றுகிறவனாகவம் இருப்பான் என்று 1யோவான் 2ம் அதிகாரத்தில் காண்கிறோம்.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால்,
நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று
சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த
இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால்
உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது என்று 1 யோவான் 4:1-3 வசனங்கள் நம்மை எச்சரிக்கின்றன.
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில்விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும்,தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் என்று 2தெசலோனிக்கேயர் 2:3-4 ல் பார்க்கிறறோம். அவன் தேவனைப் போல தேவாலயத்தில் அமர்ந்து, தன்னை தேவனென்று காண்பித்து, அவனுக்கு ஆராதனை செய்யும்படியாக
மற்றவர்களை கட்டாயப்படுத்துவான்.
அவன் மிருகம் என்று வெளிப்படுத்தின விசேஷம் 13:5-8வரை உள்ள வசனங்களில் ‘அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி,
மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும்
பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது’ எனக் காண்கிறோம்.
இந்த அந்திக்கிறிஸ்து வரும்போது, அரசியலிலும் மதத்தின் நிலையிலும் தலைவனாகக்
காணப்படுவான். அவன் அந்த நிலைக்கு உலகத்தில் நடக்கும் பல்வேறு சூழ்நிலைகளால்
உயர்த்தப்படுவான். அவன் உலகத்தை ஏழு வருடங்கள் அரசாளுவான். கடைசி மூன்றறை
வருடங்கள், உபத்திரவ காலம் மற்றும் மகா உபத்திர காலங்களுக்குள் உலகம் அவனிமித்தமாக கடந்துச் செல்லும்.
அந்திக்கிறிஸ்து சின்னக் கொம்பு என்று தானியேல் 7,8,9 ம் அதிகாரங்களில் நாம் காண்கிறோம்.
இப்படி அவன் பலவிதப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும் நாம் நினைக்கிற மாதிரி அவன் இரண்டு கொம்புள்ளவனாய் பயங்கர தோற்றமுள்ளவனாய் இராமல், அழகிய தோற்றமும், எல்லாரையும் கவர்திழுக்கத்தக்கவானாகவும், உலக பொருளாதாரத்தைக் குறித்து நன்கு
அறிந்தவனாகவும் அதில் ஏற்படும் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொண்டு வருகிறவனாகவும் காணப்படுவான் என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அவன் யாராக இருந்தாலும், அவனது குணாதிசயங்களைக் குறித்து வேதம் நமக்கு
திட்டவட்டமாகப் போதிக்கிறபடியால் அவனைப் பற்றி மேற்கண்ட வசனங்களில் பார்த்தோம்.
அவன் இப்போது உலகத்தில் இருக்கிறானா? என்பது யாருக்கும் தெரியாது. அவன் வெளிப்பட
தேவன் குறித்திருக்கும் நாளில் அவன் வெளிப்படுவான். அவனால் நாம் மோசம்போகாமல்
காத்துக் கொள்ளப்பட வேண்டுமானால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக
ஏற்றுக்கொண்டு அவருடைய வருகையில் எடுததுக் கொள்ளப்பட்டால், அந்திக்கிறிஸ்துவின்
ஆளுகைக்கும் உபத்திரவ காலத்திற்கும் நாம் தப்பலாம் ஆமென்.
இருள் சூழும் காலம் இனி வருதே அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் திறவுண்ட வாசல் அடைபடு முன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? நாட்கள் கொடியதாய் மாறிடுமே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=227:2009-08-25-07-01-11&catid=24:2009-05-23-20-54-58&Itemid=43
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக