புதன், 19 மார்ச், 2014

எதிர்காலத்திலும் வழிநடத்தும் கர்த்தர்

எதிர்காலத்திலும் வழிநடத்தும் கர்த்தர்.

ஒரு கணவர் தன் மனைவியிடம், 'ஐயோ இந்த காலத்தில் மற்ற பிள்ளைகள் படிக்கிறதையும் வாங்குகிற மார்க்குகளையும் பார்த்தால் நம்ம பிள்ளைகள் எங்கே போய் நிற்பார்களோ தெரியவில்லை! பிற்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம் போலிருக்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்த பிள்ளைகள் என்ன செய்யும்?'என்று கவலைப்பட ஆரம்பித்தார். ஆனால் மனைவியோ, ' பாருங்கள் நம் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்திருக்கிற அருமையான தாலந்துகளை! அவன் கிட்டாரை எடுத்து பாட ஆரம்பித்தால் எல்லாரும் நின்று கேட்டுவிட்டு தான் போவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கர்த்தருடைய கரத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதால் அவர் பார்த்து கொள்வார்' என்று கூறினார்கள்.

இருவரும் கர்த்தரின் மேல் அன்புள்ளவர்கள்தான், அவர்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால் கவலை என்று வரும்போது, கர்த்தரைவிட பிரச்சனைகளும் போராட்டங்களுமே பெரிதாக தெரிகிறது. நாம் கவலைப்படும்போது, நம்முடைய எண்ணங்களும், நம்முடைய சிந்தனைகளும் கர்த்தரை நோக்கி பார்ப்பதை விட்டுவிட்டு, பிரச்சனைகளையே நோக்கி பார்க்க ஆரம்பிக்கிறது. பேதுரு கடலின் மேல் நடந்து கர்த்தரை நோக்கி பார்த்தபடியே நடக்க ஆரம்பித்த போது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால் எப்போது கடலையும் அலைகளையும் பார்க்க ஆரம்பித்தாரோ கடலில் மூழ்க ஆரம்பித்தார்.

'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?'
என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லும்போது நாம் கவலைப்பட்டால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமற் போகும் பாவத்திற்கு உள்ளாகிறோம் அல்லவா?

தேவன் மேல் நம் நம்பிக்கை பூரணமாக இருந்தால் நிச்சயமாக நாம் எதைக் குறித்தும் கவலைப்பட மாட்டோம். கர்த்தருடைய கரத்தை மீறி எதுவும் நிச்சயமாக நம் வாழ்க்கையில் நடப்பதில்லை, நடக்க போவதும் இல்லை. ஆகையால் எதற்கு கவலைப்பட வேண்டும்? 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' (1 பேதுரு 5:7) என்று வேதம் நமக்கு போதிக்கிறது.

ஆகையால் நம்முடைய கவலைகளை அவர் மேல் வைத்துவிட்டு நம்மை விசாரிக்கிற தேவனிடத்தில் நம்பிக்கையாக இருப்போமாக. அவர் அனைத்தையும் பார்த்து கொள்வார். ஏனெனில் அவரது பெயர் யெகோவாயீரே! எல்லாவற்றையும் பார்த்து கொள்கிற தேவன்! நம் தேவைகளை சந்திக்கிற தேவன்! நம் கவலைகளை அறிந்த தேவன்! நமக்காக அற்புதங்களை செய்கிறவர்!

கர்த்தருடைய கரம் நம்மை வழிநடத்துகின்றபடியினால் நாம் இனியும் நம் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவரே நம்மை வழிநடத்துவார். ஆமென் அல்லேலூயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக