புதன், 19 மார்ச், 2014

நம்முடைய காலங்கள்

......................நம்முடைய காலங்கள்.........................

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25).

இரு வாலிபர்கள் (ஒருவன் விசுவாசி, மற்றவன் அவிசுவாசி) ஒரு மலையின் மேல் நடந்துப் போய்க் கொணடிருந்தார்கள். அப்போது விசுவாசியான வாலிபன், கர்த்தருடைய அநாதி திட்டங்களையும், அவருடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் பேசிக் கொண்டே இருவரும் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு எந்தவித கவலையும் இல்லை ஏனென்றால் என்னுடைய நடைகளை அவர் தீர்மானிக்கிறார். அவருடைய பாதுகாப்பு எனக்கு இருப்பதால் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை’ என்று விசுவாசியான வாலிபன் கூறினான்.

அதற்கு அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில் வளர்ந்து இருக்கிறது. அதையும் கர்த்தர்தான் வைத்தார் என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறாய்’ என்று அந்த மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன் நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான். இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள்.

விசுவாசியான வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு, தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும் முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும் மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல் தொடர்ந்தனர். தேவன் அவிசுவாசியான வாலிபனோடு பேச ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு ஊழியக்காரனாக அவன் மாறினான்.

நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலுள்ள ஒரு முடியும் கீழே விழுவதில்லை. நட்சத்திரங்களையே பெயர் சொல்லி அழைக்கிற தேவன் அவைகளை பார்க்கிலும் விசேஷித்தவர்களாகிய நம்முடைய தேவைகளையும் வாஞ்சைகளையும் நிறைவேற்ற வல்லவராகவே இருக்கிறார். ‘இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்’ - (லூக்கா.12:6,7) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆகையால் எதைக் குறித்தும் கவலைப்படாமல், அவரை சார்ந்து ஜீவிப்போம். யெகோவாயீரேவாகிய அவர் நம்மை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென், அல்லேலூயா!
http://aathmeekaunnavu.blogspot.com/2012/12/blog-post_3.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக